Thursday, August 2, 2018

பகவத் கீதை - 1.47 - சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன்

பகவத் கீதை - 1.47 - சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன் 



सञ्जय उवाच
एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥४७॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வார்ஜுந : ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஸ²த்|
விஸ்ருஜ்ய ஸஸ²ரம் சாபம் ஸோ²கஸம்விக்³நமாநஸ : ||1-47||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ஏவம் = இவ்வாறு

உக்த்வ = கூறிய பின்

அர்ஜுன = அர்ஜுனன்

ஸங்க்²யே = போர்க்களத்தில்

ரதோ²பஸ்த² = இரதத்தின் தட்டில்

உபாவிஸ²த்| = அமர்ந்து விட்டான்

விஸ்ருஜ்ய = தூர வைத்த பின்

ஸஸ²ரம் = அம்புகளோடு கூடிய

சாபம் = வில்லை

ஸோ²க = சோகம்

ஸம்விக்³நம் =  சஞ்சலப்பட்டு

மாநஸ :  = மனத்துடன்

சஞ்ஜயன் சொல்லுகிறான்: இவ்வாறு சொல்லி விட்டு, அர்ஜுனன் வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, தேரிலேயே அமர்ந்து விட்டான் 

என்னால் முடியாது என்று வில்லையும் அம்பையும் தூர எறிந்து விட்டு, தேரில் அமர்ந்து விட்டான்.

என்னால் எல்லாம் முடியும். நான் அனைத்தையும் சாதித்து விடுவேன் என்று மார்  தட்டும் ஆணவம் கொண்டோர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித  வலிமைக்கு, ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. அது அளவு கடந்தது அல்ல.  அந்த எல்லையை புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஆணவம் என்பது தன்னைச் சுற்றியே வலை பின்னுகிறது. பின்னிய வலையில் தானே மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

மூன்றாவது, அறிவு, ஆற்றல் என்று அலையும் எவரும், உணர்ச்சி என்ற ஒன்றின் மேல் மோதும் போது இப்படித்தான் ஆற்றல் இழந்து நிற்பார்கள். அறிவும்  ஆற்றலும் மட்டும் அல்ல வாழ்க்கை. மனித உணர்ச்சிகளும் வாழ்வின் மிக முக்கியமான பாகம். உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு அவற்றை சரியாக கையாளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் குழப்பம் கொண்டு, செயலிழந்து நிற்க வேண்டி வரும்.

இந்த ஸ்லோகத்தோடு இந்த அத்யாயம் முடிகிறது.

மிகப் பெரிய வீரன். அறிவாளி. ஆற்றல் மிக்கவன். அழகன்.  பக்திமான். ஏராளமான வரங்களை பெற்றவன்.  இப்படி குழம்பி , செயல் இழந்து நிற்கிறான்.

அவனுக்கு , கண்ணன் என்ன சொல்லப் போகிறான் என்று உங்களை போலவே நானும் அறிந்து கொள்ள  ஆவலாக இருக்கிறேன்.

நாளை, இரண்டாவது அத்யாயம் தொடங்குகிறது.

கண்ணன் பேசத் தொடங்கப் போகிறான். ....


http://bhagavatgita.blogspot.com/2018/08/147.html

No comments:

Post a Comment