Tuesday, August 21, 2018

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும்

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும் 



नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||


ந = இல்லை

து = நீ

எவ = நிச்சயமாக

அஹம் = நான்

ஜாது = எப்போதும்

நா  = இல்லை

அஸம் = இருத்தல்

ந = இல்லை

த்வம் = நீ

ந = இல்லை

இமே = இவர்கள்

ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்

ந = இல்லை

எவ = நிச்சயமாக

ந = இல்லை

ப⁴விஷ்யாம: = இருப்போம்

ஸர்வே = அனைவரும்

வயம் = நாம்

அத = இதில் இருந்து, இங்கிருந்து

பரம் = எதிர் காலத்தில்


இதற்கு முன் நான் இல்லாமல் இருந்தது இல்லை. நீயும் மற்ற அரசர்களும் அப்படியே. இனியும் எதிர்காலத்தில் நாம் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை. 


மிக மிக ஆழமான, அர்த்த செறிவு கொண்ட ஸ்லோகம். இதற்கு எத்தனையோ பேர் எவ்வளவோ விதமாக வியாக்கியானம் எழுதி விட்டார்கள்.

ஸ்லோகத்தின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

நான் கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்க்கிறேன்.

நாம் கொஞ்ச காலத்துக்கு முன் பிறந்தோம். இன்னும் கொஞ்ச காலத்தில் இறப்போம். இல்லாமல் போவோம். அவ்வளவுதானே வாழ்க்கை.

இல்லை என்கிறது கீதை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறீர்கள். இறந்த பின்னும் இருக்கிறீர்கள் என்கிறது கீதை.

நீங்கள்  ,மட்டும் அல்ல எல்லோருமே அப்படித்தான் என்கிறது கீதை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம்.

நாம் தோன்றினோம் என்றால் இதில் இருந்து தோன்றினோம்? ஏதோ ஒன்றில் இருந்துதானே  தோன்றி இருக்க முடியும்? சூன்யத்தில் இருந்து தோன்ற முடியாதே ?

நாம் மறைக்கிறோம் என்றால், ஏதோ ஒன்றினுள் நாம் மறைந்து போகிறோம் என்றுதானே அர்த்தம். ஒன்றும் இல்லாமல் காணாமல் போக முடியாதே ?

எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம்.

இது இரண்டும் நமக்குத் தெரிய வேண்டும்.

விதை இருக்கிறது. விதையில் இருந்து செடி வருகிறது. செடியில் இருந்து மரம் வளர்கிறது. மரம் பூத்து, காய்த்து, கனி தந்து, அதில் இருந்து இன்னொரு விதை வருகிறது.

இந்த புதிய விதைக்கு பழைய விதை ஆதாரம். அந்த பழைய விதையில் இருந்து புதிய விதை வந்தது.

இந்த புதிய விதை விழுந்து, மறைந்து இன்னொரு செடி மரம் பூ காய் கனி விதை என்று மீண்டும் ஒரு சூழல் வரும்.

எந்த ஒரு விதையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு எத்தனையோ முந்தைய வடிவங்கள் இருக்கிறது. அதற்கு எத்தனையோ பிந்தைய வடிவங்களும் இருக்கப் போகின்றன.

சரி, இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


கடலில் அலை எழுகிறது. புதியதாய் ஒரு அலை தெரிகிறது. அது உயர்ந்து எழுந்து, பின் விழுந்து மறைகிறது. மறைந்த அந்த அலையில் இருந்து இன்னொரு புதிய அலை உருவாகிறது.

எந்த ஒரு அலைக்கும் கணக்கில் அடங்கா எத்தனையோ பழைய அலைகள் உள்ளன. அதில் இருந்து எத்தனையோ புதிய அலைகள் பிறக்க இருக்கின்றன.

நாம் ஒரு அலையை மட்டும் பிடித்துக் கொண்டு, அடடா, இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று மகிழ்கிறோம். ஐயோ, அந்த அலை உடைந்து விட்டதே , அழிந்து விட்டதே என்று அழுகிறோம்.

இது புத்திசாலிகள் செய்யும் செயலா ?

ஒருவன் கடற் கரையில் நின்று கொண்டு, ஐயோ, நான் என்ன செய்வேன். எனக்கு துக்கம் தாளவில்லையே. எத்தனயோ அலைகள் இறந்து போய் விட்டனவே என்று  அழுது கொண்டிருந்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

சரி, உயிர் இல்லாத அலையும், உயிர் உள்ள மனிதர்களும் ஒன்றா என்று கேட்டால், ஒன்று இல்லைதான்.

ஆனால், மனிதன் தோன்றுவதும், வளர்வதும், அழிவதும் ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது தானே. அலை போல் எழுவதும் விழுவதும் சகஜம் தானே. இதில் பிறந்த உடன் சிரிப்பதும், இறந்தவுடன் அழுவதும் என்ன சிறப்பு சேர்க்கும்?

காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. தோன்றுவதும், வளர்வதும், அழிவதும்  மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.

இதை நிறுத்த நினைப்பது அறிவீனம்.

நிறுத்தவும் முடியாது. கூடாது.

நாம் இன்று இருக்கிறோம் என்றால், எத்தனையோ யுகங்களாக  நாம்  பிறந்து  வளர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம். இது புதிய வாழ்க்கை அல்ல. மீண்டும் மீண்டும் மாறி மாறி  நிகழ்ந்து கொண்டே இருப்பதன் ஒரு சிறு நிகழ்வுதான் இந்த வாழ்க்கை.

இதை ஒரு தொடராக பார்க்க வேண்டுமே தவிர ஒரு தனித்த நிகழ்வாக பார்க்கக் கூடாது.

நான் முன் ஜென்மம், மறு ஜென்மம் என்று கூறவில்லை.

எந்த ஒரு விதையும் அதற்கு முந்திய விதையின் மறு பிறவியோ அல்லது இனி வரும் விதையின் முற் பிறவியோ அல்ல.

அது தோன்றியது , மறைகிறது. மீண்டும் தோன்றும். மறையும்.

அவ்வளவுதான்.

சிந்தித்துப் பாருங்கள் - இந்த உடல், இவ்வளவு எடை, எலும்பு, தோல், தசை எல்லாம் எப்படி வந்தது ? உணவில் இருந்து, காற்றில் இருந்து, சூரிய ஒளியில் இருந்து. நாம் ஒரு வேதியல் கலவை. இந்த கலவை மாறிக் கொண்டே இருக்கிறது. இறப்பும் ஒரு கலவை தான். வாழ்வு எப்படி ஒரு கலவையோ அது போல.

யோசியுங்கள்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

இது ஒரு வித சிந்தனை. அவ்வளவுதான்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/212.html







No comments:

Post a Comment