பகவத் கீதை - 1.45 - சுற்றத்தாரை கொன்று இன்பம் தேவையா ?
अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः॥४५॥
அஹோ ப³த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ராஜ்யஸுக²லோபே⁴ந ஹந்தும் ஸ்வஜநமுத்³யதா : ||1-45||
அஹோ ப³த = அந்தோ
மஹத் = பெரிய
பாபம் = பாவம்
கர்தும் = செய்கிறோம்
வ்யவஸிதா = உறுதி கொண்டோர்
வயம் யத்³= (அதை அடைய ) அதற்காக
ராஜ்யஸுக²லோபே⁴ந = அரச சுகங்களுக்காக
ஹந்தும் = கொலை செய்து
ஸ்வஜநம் = உறவினர்களை
யுத்³யதா : = தயாராக இருக்கிறோம்
அரச இன்பங்களுக்காக சொந்த பந்தங்களை கொலை செய்ய வந்து பெரிய பாவத்தினை செய்ய தயாராக இருக்கிறோமே, அந்தோ
மேலோட்டமாக பார்த்தால் அர்ஜுனன் சொல்வது சரியாகத் தான் இருக்கும். சொந்த பந்தங்களை கொன்று , அரச சுகத்தை அனுபவிக்க வேண்டுமா என்பது அவன் கேள்வி. அதில் என்ன தவறு இருக்க முடியும் ?
சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
யாருடைய சொந்த பந்தம் ? அர்ஜுனனின் சொந்த பந்தம். ஒரு வேளை அவர்கள் அர்ஜுனனின் சொந்தக் காரர்களுக்காக இல்லாமல் இருந்தால் அவர்களை கொல்வது சரியா ? அர்ஜுனன் சொல்வது அப்படித்தான் இருக்கிறது. சொந்தங்களைக் கொல்லக் கூடாது. சொந்தம் இல்லாவிட்டால் கொல்லலாம் என்பது அவனின் வாதம்.
அது சரியா ?
அரச இன்பத்தை அனுபவிக்க அவர்களை கொல்ல வேண்டுமா என்று கேட்கிறான். அரச இன்பம் இல்லாவிட்டால் கொல்லலாமா ?
அர்ஜுனனின் வாதம் எல்லாம் அவனை முன்னிறுத்தியே செல்கிறது.
என் சொந்தம், எனக்கு இராஜ போகம் என்றே சிந்திக்கிறான்.
அவனுடைய இடத்தில் இருந்து பார்த்தால், அவன் சொல்வது சரியாகத்தான் தெரியும்.
சுயநலத்தை முன்னிறுத்தியே நாம் இந்த உலகில் நடை போடுகிறோம்.
எனவே, இன்ப துன்பங்கள் வரமால் போகாது.
இன்பம் வேண்டும் என்றால் துன்பம் அனுபவித்தே ஆக வேண்டும்.
இந்த இன்ப துன்பம் இரண்டுக்கும் காரணம் , நம் சுயநலம்.
சுயநலத்தை கடந்தால் , இன்பம் துன்பம் என்ற இரண்டையும் கடக்கலாம்.
சுயநலம் இல்லாத வாழ்க்கையில் என்ன சுகம் இருக்க முடியும்? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா ? எல்லா உயிரும் இன்பத்தைத்தானே தேடுகின்றன. அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் அதைக் கண்டு ஓட வேண்டும் ?
கீதை அப்படிச் சொல்ல வில்லை.
எனக்கு எனக்கு என்று சுயநலமாய் பறக்காமல், புலன் இன்பங்களை மட்டுமே கொண்டு காரியம் செய்யாமல், அறிவின் துணை கொண்டு (ஞான யோகம் ), எல்லோருக்கும் இன்பம் பயக்க வேண்டும் (பக்தி யோகம்)என்று அன்போடு காரியம் செய்தால் (கர்ம யோகம்) வரும் இன்பத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது கீதை.
எனக்கு இதில் என்ன இன்பம் அல்லது துன்பம் என்று சிந்திக்காமல் இருக்கச் சொல்லித் தருகிறது கீதை.
கேட்டுத்தான் பார்ப்போமே.
பிடித்திருந்தால் கடை பிடிப்போம். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது " அதெல்லாம் சரி, இது நடைமுறைக்கு ஒத்து வராது " என்று சொல்லி மூட்டை கட்டி வைத்து விட்டு நம் வழியே போகலாமே.
bhagavatgita.blogspot.com/2018/07/145.html
No comments:
Post a Comment