பகவத் கீதை - 1.43 - குலம் மற்றும் ஜாதி தர்மங்கள்
दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः॥४३॥
தோ³ஷைரேதை : குலக்⁴நாநாம் வர்ணஸங்கரகாரகை :|
உத்ஸாத்³யந்தே ஜாதித⁴ர்மா : குலத⁴ர்மாஸ்²ச ஸா²ஸ்²வதா : ||1-43||
தோஷை = குற்றத்தால், பாவத்தால்
இதை : = இந்த
குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களும்
வர்ணஸங்கரகாரகை :| = வர்ண குழப்பங்களும்
உத்ஸாத்யந்தே = குறைக்கும்
ஜாதிதர்மா : = ஜாதி தர்மத்தையும்
குலதர்மாஸ் = குல தர்மத்தையும்
ச = மேலும்
ஸாஸ்வதா : = நிரந்தரமான
வர்ண குழப்பம் உண்டாக்கும் இந்த போரால், தொன்று தொட்டு வரும் குல மற்றும் ஜாதி தர்மங்கள் அழிந்து போகும்.
போர் என்பது நியாயம் அநியாயம் இதை மட்டும் நிலை நிறுத்துவது இல்லை. அது வருங்கால சந்ததிக்கு பெரிய தீங்கை விளைவிக்கும் என்கிறான் அர்ஜுனன்.
மனித குலம் தோன்றி வளர்ச்சியுற்ற பொழுதில், அது சில நியமங்களை, தர்மங்களை ஏற்படுத்திக் கொண்டது. நாடும், வீடும் அமைதியாக சென்று கொண்டு இருக்கும் போது, அந்த தர்மங்களை கடை பிடிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை.
போர் என்று வந்து, ஏராளமான பேர் இறந்து போனால், இவ்வளவு காலம் கடை பிடித்து வந்த குல மற்றும் ஜாதி தர்மங்கள் சீர் குலைந்து போகும் என்பது அர்ஜுனனின் வாதம்.
மிகப் பெரிய குழப்பம் உண்டாகும். வருங்கால சந்ததி வழி தெரியாமல் தவிக்கும் என்பது அர்ஜுனனின் பயம்.
யார் எதைச் செய்வது, எப்போது செய்வது, எவ்வளவு செய்வது என்ற கேள்விகளுக்கு விடை காண்பது கடினமாகிப் போய் விடும்.
இப்படி எல்லாம் இருக்கும் போது, இந்த போர் தேவை தானா ? என்பது அர்ஜுனனின் வாதம்.
படுக்கப் போகும் போது , நாளை காலையில் எழுந்தவுடன் நடக்கப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.
விடியல் காலை ஐந்து. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, அப்புறம் போகலாம் என்று நினைப்போம். அஞ்சு நிமிஷம். அவ்வளவுதான் என்று நினைப்போம்.
படுத்தால் , அசந்து தூங்கி , அரை மணி ஆகி இருக்கும்.
சரி இன்னைக்கு போன மாதிரிதான் என்று நினைத்துக் கொள்வோம்.
போகப் போவதில்லை என்று முடிவு செய்து விடுவோம். நாளைக்குப் போகலாம் என்று நினைத்துக் கொள்வோம்.
நடக்கப் போவதில்லை என்று முடிவு செய்தவுடன் நம் நம் மனம் என்ன நினைக்கும் ?
- இரவு சரியாவே தூங்க வில்லை. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
- இன்று அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கிறது. நடக்கப் போனால், சக்தி எல்லாம் வீணாகி, அலுவலகம் போகும் போதே தளர்ந்து போவேன். நடக்கப் போகாததும் நல்லது தான்.
- கொஞ்ச நாளாவே இந்த முட்டி கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்கு. எதுக்கு வம்பு. இரண்டு நாளைக்கு ஓய்வு கொடுத்தால் எல்லாம் சரியா ஆயிரும்.
- வெளியே மழை வர்ற மாதிரி இருக்கு. பாதியில மழை வந்தா சிக்கல்.
நமக்கு ஒரு வேலையை செய்ய வேண்டாம் என்று தோன்றி விட்டால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் கண்டு பிடிப்போம். யோசிக்க யோசிக்க புது புது காரணம் தோன்றிக் கொண்டே இருக்கும்.
அர்ஜுனனுக்கு போர் செய்ய வேண்டாம் என்று தோன்றி விட்டது. காரணங்களாக கண்டு பிடித்துத் தள்ளுகிறான்.
தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் முயற்சி இது.
இன்னும் இரண்டு மூணு ஸ்லோகங்கள் தான். புலம்பட்டும். முழுவதையும் கேட்டு விடுவோம்.
http://bhagavatgita.blogspot.com/2018/07/143.html
No comments:
Post a Comment