Monday, July 16, 2018

பகவத் கீதை - 1.44 - குல தர்மமும் , நரகமும்

பகவத் கீதை - 1.44 - குல தர்மமும் , நரகமும் 



उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन।
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम॥४४॥

உத்ஸந்நகுலத⁴ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸோ ப⁴வதித்யநுஸு²ஸ்²ரும ||1-44||

உத்ஸந்ந = குறைகிறதோ, அழிக்கப் படுகிறதோ

குலத⁴ர்மாணாம் = குல தர்மம் ஆனது

மநுஷ்யாணாம் = மக்களின்

ஜநார்த³ந = ஜனார்தனா

நரகே = நரகம்

நியதம் = நிச்சயம்

வாஸோ = வாசம்

ப⁴வத்  = அது

இது = அவ்வாறு

அநுஸு²ஸ்²ரும = மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்


குல தர்மங்களை இழந்த மனிதர்களுக்கு எப்போதும் நரக வாசம் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். 

வாழ்க்கையை இன்பமாக வாழ, நாம் சில சட்ட திட்டங்களுக்கு கட்டுப் படத்தான் வேண்டும். எனக்கு இன்பம் தருகிறது என்று நான் மனம் போன போக்கில்  போக முடியாது.

சாலையில் வண்டி ஓட்டினால் , இடது புறம் தான் ஓட்ட வேண்டும் (இந்தியாவில்). எனக்கு வலது புறம் ஓட்டத்தான் பிடிக்கும் என்று தவறான பகுதியில் வண்டியை செலுத்தினால்  சிக்கல் எனக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் தான். ஆளாளுக்கு , மனம் போன வகையில் வண்டியை செலுத்தினால், என்ன ஆகும் ? போக்கு வரத்து நெரிசல், குழப்பம், விபத்து என்று  நிகழும் அல்லவா ?

அதே போல, எனக்கு வரி கட்ட விருப்பம் இல்லை என்று இருக்க முடியாது.

சட்டங்களை மதிக்க வேண்டும். இல்லை என்றால் சிறை, தண்டனை, அபராதம்  என்று வரும்.

சட்டம் பின்னால் வருகிறது.

முதலில் நமக்கு நாமே சில தர்மங்களை கடை பிடிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் சட்டம் போட்டுக் கொண்டு இருக்க முடியாது.  விருந்தினரை  உபசரிக்க, பெரியவர்களை மதிக்க, பொய் பேசாமல் இருக்க, மற்றவர்கள் மேல் அன்பு  செலுத்த என்று அனைத்துக்கும் சட்டம் போட முடியாது.

ஒவ்வொரு வீட்டிலும், பெற்றோர்கள் , பிள்ளைகளுக்கு இந்த நல்ல ஒழுக்கங்களை  சொல்லித் தருவார்கள். எது சரி, எது தவறு என்று பிள்ளைகளுக்கு  வழி காட்டுவார்கள். பிள்ளைகள் , சட்டம் பற்றி பின்னால் தெரிந்து  கொள்வார்கள். ஆனால், அதற்கு முன், பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை   சொல்லித் தருவார்கள்.

அதுவே குல தர்மம். வீட்டில் சொல்லித் தரப்பட்ட தர்மம். ஒழுக்கம்.

சட்டத்தை விட இந்த குல தர்மம் உயர்ந்தது. புகை பிடிக்காதே  என்பது சட்டம்  அல்ல. ஆனால், அப்பா அம்மா சொல்லுவார்கள், புகை பிடிக்காதே என்று. அது அவர்கள் விதித்த சட்டம்.

போர் என்று வந்தால், தகப்பன் இறந்து போகலாம்.   ஒரே வீட்டில் பலர் இறந்து போகலாம்.  பிள்ளைகளுக்கு யார் வழி காட்டுவார்கள் ? தாத்தா, மாமா, சித்தப்பா  என்று யாரும் இல்லாமல், பிள்ளைகள் வழி தெரியாமல், தங்களுக்கு  தெரிந்ததை செய்யத் தலைப் படுவார்கள்.

அவ்வாறு செய்யும் போது , தவறான பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம்.

அது நரகத்துக்கு இட்டுச் செல்லும்  என்கிறான் அர்ஜுனன்.

அப்படி என்றால், குல தர்மத்தை கடை பிடித்தால் சொர்கம் என்று பொருள் படும் அல்லவா.

பிள்ளைகள், பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை கேட்டு  நடக்க வேண்டும். அதே சமயத்தில் பெற்றோரும் வீட்டில் உள்ள பெரியவர்களும்  பிள்ளைகளை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டும். அந்த பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

குல தர்மத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது உட்பொருள்.

கீதை, நேரடியாக இதைச் செய் என்று சொல்லவில்லை. உன் பெற்றோர் மற்றும் உன்  வீட்டில் உள்ள பெரியவர்கள் காட்டிய வழியில் நட என்கிறது.

நம்மிடம் உள்ள பல நல்ல குணங்கள், அவர்கள் சொல்லித் தந்ததாகத் தான் இருக்கும்.

நம்மிடம் உள்ள பல கெட்ட குணங்கள், அவர்கள் சொன்னதை நாம் கேட்காமல்  இருந்ததால் வந்ததாகத் இருக்கும்.

இதைப் படிக்கும், நீங்கள் குழந்தைகளாக இருந்தால், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்.

நீங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களாக இருந்தால், இளைய தலைமுறையை நல்ல வழியில்  கொண்டு செல்லுங்கள்.

தர்மத்தை தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமை இருவருக்கும் இருக்கிறது.

http://bhagavatgita.blogspot.com/2018/07/144.html

No comments:

Post a Comment