பகவத் கீதை – 2.15 – சாகாமல் இருக்க வழி
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते॥१५॥
யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||
யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
யேதே = அவை
புருஷம் = மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துகஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்
இன்பத்தையும், துன்பத்தையும் எவன் சரி சமமாக பார்கிறானோ, அவன் சாவை வென்று நிலைத்து நிற்பான்.
இது என்ன ஒண்ணும் புரியலையே. இன்பத்தையும், துன்பத்தையும் எப்படி சரி சமமாக பார்ப்பது? அப்படியே பார்த்தாலும், எப்படி இறவா நிலை அடைய முடியும் ? சரி அப்படியே அடைந்தாலும், அதனால் என்ன பலன் கிடைக்கும்? இன்பமும் துன்பமும் ஒன்று என்றால், அது ஒரு வாழ்க்கையா ? கல்லு மாதிரி, மரக் கட்டை மாதிரி...அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?
வாழ்க்கை நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாம் சரியாக படிக்கும் வரை, பாடங்கள் தொடரும்.
சில பேர் துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன காரணம்? வாழ்க்கை தரும் பாடத்தை படிப்பது இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்ற ஆசிரியன் சலிப்பதே இல்லை. எத்தனை முறை தவறு செய்தாலும், பொறுமையாக முதலில் இருந்து ஆரம்பிக்கும். நம்மால் தான் தாங்க முடிவது இல்லை.
சரி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
நாம் தவறுகளை திருத்திக் கொண்டே போனால், ஒரு நாள் நாம் முழுமை (perfection ) அடைவோம். முழுமை அடைந்த பின், மீண்டும் ஒன்றைச் செய்யத் தேவை இல்லை. அது தான் உச்சம். அது தான் உன்னதம்.
தவறு செய்வதும், அதை திருத்துவதும் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து வாழ்வதைப் போல.
வாழ்க்கை என்பது என்ன ? அனுபவங்களின் தொகுப்பு.
அனுபவம் என்பது என்ன, புலன்கள் மூலம் நாம் பெறும் உணர்வு.
இங்கே பிறப்பு இறப்பு என்பது ஒரு அனுபவம் பிறப்பதும், பின் அந்த அனுபவம் மறைந்து இன்னொரு புதிய அனுபவம் பிறப்பதும் ஆகும்.
இந்த அனுபவச் சங்கலி எப்போது மறையும் ? அதுவே இறப்பற்ற நிலை.
முந்தைய ஸ்லோகத்தில் வெப்பம் குளிர் , இவை இயற்கையானவை. இவற்றைப் பொருட்படுத்தாதே என்றான் கண்ணன்.
இங்கே, இன்பம் துன்பம் இவற்றை பொருட்படுத்தாதே என்கிறான்.
ஒரு உன்னத நிலையை நோக்கி நாம் நகரும் போது நமக்கு துன்பங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த துன்பமே கூட சுகமாகத் தெரியும்.
இது என்ன புது கதையாக இருக்கிறதே என்கிறீர்களா ? துன்பம் எப்படி இன்பமாக முடியும் ?
முடியும்.
எந்த ஒரு தாயையும் கேட்டுப் பாருங்கள். பிள்ளை பெறுவது சுகமா, துக்கமா என்று. துன்பம்தான், வலி தான், தாங்க முடியாத வலிதான். இருந்தும் அவள் அதை ஏன் ஏற்றுக் கொள்கிறாள்? அதுவும் சந்தோஷமாக? நோக்கம் உயரியதாக இருக்கும் போது வலி தெரியாது.
எந்த தகப்பனையும் கேட்டுப் பாருங்கள். நாலு காசு சம்பாதிக்க என்ன பாடு பட வேண்டி இருக்கிறது என்று. வலி தான். துக்கம் தான். அவமானம் தான். இருந்தும் தன் குடும்பத்தின் எதிர்காலம் கருதி அவன் அவன் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான்.
நோக்கம் உயர்வனாதாக இருக்கும் போது, துன்பம் தெரிவதில்லை.
அந்தத் துன்பங்களை சரி சரி என்று ஏற்றுக் கொண்டு சென்றால், நோக்கத்தை அடையலாம்.
இதெல்லாம் சின்ன சின்ன உயரிய நோக்கங்கள். பிள்ளை பெறுவது, வீட்டுக்காக சம்பாதிப்பது எல்லாம். ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்.
வாழ்க்கையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நோக்கி செல்வபர்கள், வழியில் வரும் துன்பங்களை பெரிதாக நினைக்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட தந்த உதாரணங்கள்.
பிள்ளை பெற்ற பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தாய்க்கு.
குடும்பம் தலை எடுத்த பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தந்தைக்கு.
வாழ்வின் உன்னத இலட்சியங்களை அடைந்த பின், அதற்காக பட்ட துன்பங்கள் மறந்து போய் விடும்.
எனவே, துன்பத்தைக் கண்டு கலங்கி நிற்க்கக் கூடாது. அப்படி கலங்கி நின்றால், ஒன்றும் செய்ய முடியாது. உயர்ந்தவற்றை அடைய முடியாது.
சரி, அப்படி என்ன பெரிய உயர்ந்த இலட்சியம் இருக்கிறது ?
இருக்கிறதே.
http://bhagavatgita.blogspot.com/2018/09/215.html
No comments:
Post a Comment