பகவத் கீதை 2.18 - எனவே போர் செய்
अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥१८॥
அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||
அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
உடலை தாங்கும் அது அழிவற்றது. நிரந்தரமானது. அளவிட முடியாதது. எனவே போர் செய்.
நடை முறை வாழ்க்கையில் பல முறை நமக்கு சோர்வும் சலிப்பும் வருவது இயற்கை. என்ன வாழ்க்கை இது. என்ன வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்? நம்மால் யாருக்கு என்ன பயன்? நாம இல்லாவிட்டால் இந்த உலகம் என்ன நின்றா விடும்? சாதித்தது எல்லாம் போதும் என்ற அலுப்பும் சலிப்பும் வருவது இயற்கை.
கீதை சொல்கிறது "எனவே போர் செய்" என்று.
இங்கே போர் என்பது எதிரிகளை கொன்று குவிப்பது அல்ல. நம் சோர்வை, நம் சோம்பேறித்தனத்தை, நம் அலுப்பை,சலிப்பை நாம் போராடி வெல்ல வேண்டும்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தோன்றும். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும். மீதியை நாளைக்கு பார்க்கலாம் என்று தோன்றும்.
அந்த நநேரத்தில் கீதையை நினைக்க வேண்டும். "எனவே போர் செய்" . வாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்றால், போராட வேண்டும்.
வெளி உலகோடு அல்ல. நம்மோடு போராட வேண்டும்.
அலையும் மனதை , போராடி இழுத்துக் கொண்டு வர வேண்டும். சோம்பும் உடலை போராடி வேலை செய்யச் செய்ய வேண்டும்.
அப்படிச் சொன்னால் "ஐயோ என்னால் முடியலையே. தூக்கம் தூக்கமா வருதே. உடம்பெல்லாம் வலிக்கிறதே..." ஆயிரம் சாக்கு சொல்வோம்.
தூக்கம் யாருக்கு வருகிறது ? யாருக்கு சோர்வு வருகிறது ? யார் அலுத்துக் கொள்வது?
எல்லாம் இந்த உடல் படுத்தம் பாடு.
உடலை கருவியாக உபயோகப் படுத்தாமல், அதை நம் எஜமானனாக ஆக்கி அது சொல்வதை கேட்டுக் கொண்டு ஆடுகிறோம்.
"நீங்கள் " என்பது உங்கள் உடல் அல்ல. உலகில் கோடிக்கணக்கான உடல்கள் இருக்கின்றன. உடல்கள் தோன்றி தோன்றி மறையும் இயல்பு உடையன. இந்த கணக்கற்ற வடிவங்களுக்கு பின்னால் இருக்கும் அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது அநாதியானது.
இலட்டு, ஜிலேபி, மைசூர் பாகு என்று இனிப்பு பதார்த்தங்கள் பல இருந்தாலும் அவற்றிற்கு சுவை தரும் சர்க்கரை ஒன்று தான்.
வளையல், மோதிரம், சங்கிலி என்று பல ஆபரணங்கள் இருந்தாலும், அவற்றிக்கு பின்னால் இருக்கும் தங்கம் ஒன்றுதான்.
எத்தனை ஆயிரம் அலைகள் தோன்றி மறைந்தாலும் அவற்றிற்கு பின்னால் இருக்கும் கடல் ஒன்றுதான்.
வடிவங்கள் பலவாக இருக்கலாம். அவை அனுபவிக்கும் இன்ப/துன்பங்கள் பலவாக இருக்கலாம். அவற்றிற்கு அடியில் இருக்கும் அது ஒன்றுதான்.
அது தான் நீங்கள். அது தான் நான். அது தான் அனைத்தும்.
சரி, அது அது என்று சொல்லிக் கொண்டே போனால் எப்படி. அது என்ன ? அது எப்படி இருக்கும்? அதை எப்படி அறிவது ?
அதை அறிய முடியும். எப்படி ?
தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க telescope உபயோகப் படுத்துகிறோம். வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.
மிக நுண்ணிய பொருள்களை பார்க்க microscope உபயோகப் படுத்துகிறோம். வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.
கண் முன் இருக்கிறது. இருந்தாலும் அந்த கருவிகளின் துணை இல்லாமல் பார்க்க முடியாது.
புலன்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது. ஓரளவுக்குத் தான் பார்க்க, கேட்க, உணர முடியும். அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ளவற்றை அவற்றால் அரிய முடியாது.
நமது மோப்ப சக்தியை விட நாயின் மோப்ப சக்தி பல மடங்கு நுண்ணியது. நம்மால் நுகர முடியவில்லை என்பதால், அப்படி ஒரு வாசம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா ?
அது போல, நமது புலன்களுக்கு இன்னும் ஒரு எல்லை இருக்கிறது.
அதாவது, ஒரு வரையறைக்கு உட்பட்ட ஒன்றைத்தான் நம் புலன்களால் அரிய முடியும். அளவற்ற ஒன்றை புலன்களால் அறிய முடியாது. முடிவில்லா ஒன்றை புலன்கள் அறிய முடியாது.
அடுத்த சிக்கல் என்ன என்றால், புலன்கள், பொறிகள், அறிவு, மனம் என்று இவை எல்லாம் சேர்ந்து வெளி உலகை அறிகின்றன. வெளியில் இருந்து வரும் செய்திகளை ஆராய்ந்து இது இன்னது என்று சொல்கின்றன.
இவற்றை இயக்கம் "அதை" அவற்றால் அறிந்து கொள்ள முடியாது.
வீட்டில், அடுப்படியில், சூடான பொருள்களை பற்றி தூக்க இடுக்கியை பயன் படுத்துவோம். அது எல்லா பொருளையும் பற்றி தூக்கப் பயன்படும். அது தன்னைத் தானே தூக்குமா ?
நுண்ணோக்கி (microscope) அனைத்தையும் நுணுக்கி ஆராய பயன் படும். அது தன்னை தானே நோக்கிக் கொள்ளுமா ?
இந்த புலன்கள் வெளியில் உள்ளவற்றை அறிய பயன்படும். அதை இயக்கம் அந்த சக்தியை அதனால் அறிந்து கொள்ள முடியாது.
எனவே தான் கீதை சொல்கிறது "அது அளவிட முடியாதது" என்று. அளக்க முடியாது என்றால், புலன்களுக்கு அகப்படாது.
பின் எப்படித்தான் அறிவது?
http://bhagavatgita.blogspot.com/2018/09/218.html
No comments:
Post a Comment