கீதை - 12.9 - பழக பழகப் பிடிக்கும்
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनंजय ॥१२- ९॥
அத² சித்தம் ஸமாதா⁴தும் ந ஸ²க்நோஷி மயி ஸ்தி²ரம் |
அப்⁴யாஸயோகே³ந ததோ மாமிச்சா²ப்தும் த⁴நஞ்ஜய || 12- 9||
அத= இப்போது
சித்தம் = சித்தம்
ஸமாதாதும் = செலுத்த
ந = முடியாது போனால்
ஸக்நோஷி = உன்னால் முடிந்த
மயி = என் மேல்
ஸ்தி²ரம் = உறுதியாக
அப்⁴யாஸயோகே³ந = அப்யாச + யோகேன = அப்யாசம் என்றால் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது. யோகத்தை
ததோ = அதன் பின்
மாம் = என்னில்
இச்சா = விருப்பம்
அப்தும் = அடைவாய்
தநஞ்ஜய = தனஞ்சயனே (தனம், செல்வத்தை வென்றவனே)
என் மேல் உன் சித்தத்தை உன்னால் செலுத்த முடியாதென்றால், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து என்னை அடைய விரும்பு.
கண்ணன் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போகிறான்...மனதை என்னில் நிலை நிறுத்தி, காரியங்களை எனக்காகச் செய்து, என்னை பரமென்று கொண்டு காரியங்களை நடத்து என்று.
இது எல்லாம் எப்படி முடியும் ?
திடீரென்று ஒரு நாள் இப்படி மாறி விட முடியுமா ?
இத்தனை நாள் எப்படி எப்படியோ வாழ்ந்து விட்டோம். இன்று கீதையைப் படித்தவுடன் மாற முடியுமா என்ன ?
அப்படி மாற முடியாவிட்டால் படித்து என்ன பலன்....ஏதோ படித்தோம், நன்றாக இருக்கிறது, நடை முறைக்கு ஒத்துவராது என்று கீதையை மூடி வைத்துவிட்டு வேலையைப் பார்க்க போக வேண்டியது தானா ?
இல்லை...
கண்ணனுக்குத் தெரிகிறது...இது ஒரு நாளில் நடக்கும் காரியம் இல்லை என்று.
எனவே, அவன் சொல்கிறான்...
உன்னால், உன் சித்தத்தை என் மேல் செலுத்த முடியாது என்றால், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய் என்று.
நாளடைவில் மனம் பழக்கப் பட்டுவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாக என்றால் எவ்வளவில் இருந்து ஆர்மபிக்கலாம் ?
அருணகிரிநாதர் அப்படித்தான் ஆரம்பித்தார்...
முதலில் எவ்வளவு நேரம் அவரால் மனதை இறைவன் மேல் செலுத்த முடிந்தது தெரியுமா ?
அவரே சொல்கிறார்...
அரை நிமிடம் கூட மனதை ஒருமுகப் படுத்த முடியவில்லை என்று...சோம்பல் வந்து விடுகிறது, மயக்கம் வருகிறது...தன்னைத் தானே நொந்து கொள்கிறார். சட, கசட , மூட , மட்டி என்று....
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க - அறியாத
சடகசட மூட மட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் - முருவேனோ
கருணை புரியாதிருப்ப என குறையி வேலைசெப்பு
கயிலை மலை நாதர் பெற்ற - குமரோனே
அப்படி இருந்த அவர், பின்னாளில் அநுபூதி பெற்றார் என்று அறிகிறோம்.
அரை நிமடத்தில் இருந்து ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனம் வசப்படும்.
எங்கங்க இதுகெல்லாம் நேரம் இருக்குது என்று நினைக்கிறீர்களா ?
அதற்கும் கீதை பதில் சொல்கிறது....
No comments:
Post a Comment