Sunday, May 3, 2015

கீதை - 12.10 - அன்றாட வேலைகளின் மூலம் சித்தி அடைய

கீதை - 12.10 - அன்றாட வேலைகளின் மூலம் சித்தி அடைய 


अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥१२- १०॥

அப்⁴யாஸேऽப்யஸமர்தோ²ऽஸி மத்கர்மபரமோ ப⁴வ |
மத³ர்த²மபி கர்மாணி குர்வந்ஸித்³தி⁴மவாப்ஸ்யஸி ||12- 10||

அப்யாஸே = பயிற்சி செய்வது

அப் அஸமர்தோ = சமர்த்தோ; அசமர்த்தோ. இப்போது முடியவில்லை என்றால் 

அஸி = நீ

மத் = எனக்காக, என்னில்

கர்ம = வினைகளை

பரமோ = உயர்வாக, சமர்பணமாக

 பவ = நீ செய்

மத் = எனக்காக

அர்த = நோக்கம், செல்வம், பலன்

அபி = அதனால்

கர்மாணி = வினைகள்

குர்வந் = செய்யும் பொழுது

ஸித்தி = சித்தி

அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

உனக்கு பயிற்சி செய்ய முடியவில்லை என்றால்; எனக்காக செயல்களை செய்வதை உயர்வாக நினைத்து, எனக்காக வினைகளை செய்தால் நீ சித்தி அடைவாய். 


கீதையில் சொல்லி இருப்பது எல்லாம் ஏதோ சாதுக்களுக்கும், சாமியார்களுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கும். அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் சிந்தித்து செயல் படுத்தலாம்.

நமக்கு அதெல்லாம் முடியுமா ?

காலையில் எழுந்து பர பரவென்று நாம் தயாராகி, பிள்ளைகளை தயார் படுத்தி, வண்டி பிடித்து அலுவலகம் போய் , அங்கு ஆயிரம் பிரச்சனை, meeting , target என்று அலைந்து அக்கடாவென்று இரவு வந்து படுக்கையில் விழும்போது இந்த கீதை சொல்வதையெல்லாம் செய்ய எங்கே நேரம் இருக்கிறது என்று நாம்   நினைப்பதில் தவறு இல்லை.

நம்மைப் போல வாழ்கையை ஒரு யந்திரம் போல செலுத்திக் கொண்டு செல்பவர்களுக்கும் கீதை வழி சொல்கிறது.

என்ன வேலை செய்தாலும் , அதை எனக்கென்று செய், அப்படி செய்வது உயர்ந்தது என்று கருது. அப்படி செய்தால் உனக்கு சித்தி கிடைக்கும் என்கிறான் கண்ணன்.

சித்தி என்றால் என்ன ?

அலையாத அறிவு சித்தம்.

பால் அலையும். அதுவே தயிரானால்  அலையாது.

கெட்டிப்பட்ட அறிவு அல்லது மனம் சித்தம்.

அலையும் மனிதனால் ஆயிரம் சங்கடம்.

அது வேண்டும், இது வேண்டும் என்ற அலைச்சல்.

இது சரியா, அது சரியா என்ற சந்தேகத்தில் அலைச்சல்.

இப்படி நடந்துவிட்டால் ? அப்படி நடந்து விட்டால் என்ற பயத்தில் வரும் அலைச்சல்.

இப்படி ஆயிரம் சலனங்களில் மனம் அலை பாய்கிறது.

இந்த சலனங்களைப் போக்கி மனதை தெளிவாக்கி, நிர்மலமாக வைக்க கீதை வழி சொல்கிறது.

ஒரு தாய் உணவு தயார் செய்கிறாள். அந்த உணவை தன் பிள்ளைகள் உண்பார்கள் என்று நினைத்து செய்யும் போது அவள் அதை பார்த்து செய்வாள். உப்பு கூடி விடக் கூடாது, பிள்ளைகளுக்கு உறைப்பு எவ்வளவு வேண்டும் என்று நினைத்து நினைத்து செய்வாள். ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளகளின் முகம் அவளுக்குத் தோன்றும். அந்த உணவை அன்பு கலந்து செய்வாள்.

ஒரு தடவைக்கு நாலு தடவை வாயில் விட்டு சுவைத்துப் பார்ப்பாள். உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துச்  செய்வாள்.

அது உணவு அல்ல...பிள்ளைகளின் உடல் நலம், அவர்களின் சந்தோஷம் என்று நினைத்து செய்வாள். அது ஒரு வித யோகம், யாகம்,  பக்தி.

மாலையில் பிள்ளைகள் வந்து "அம்மா , இன்னைக்கு lunch சூப்பர்" என்று சொன்னவுடன் அவளுக்கு பட்ட பாடெலாம் மறந்து போகும்.

அது போல ,

எதையும் எனக்கு எனக்கு என்று செய்யும் போது அதன் வெற்றி தோல்வி நம்மை பாதிக்கிறது.

நம்மையும் தாண்டிய ஒன்றிற்காக செய்யும்போது வெற்றி தோல்வி நம்மை பாதிப்பது இல்லை.

இறைவனுக்காக செய்கிறோம் என்று நினைக்கும் போது இதை நன்றாகச் செய்ய வேண்டும் என்ற நினைவு வரும்.

அந்த உணர்வுதான் பக்தி. அந்த உணர்வு சித்தியை அளிக்கும்.

நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் மூலம் சித்தி அடைய கீதை வழி சொல்கிறது.

முயன்று பார்ப்போமே.

















No comments:

Post a Comment