Monday, May 18, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2


अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்


எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை. 

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....


நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.


மேலும் சிந்திப்போம்.

=============================== பாகம் 2 ===========================================

ஸுசிர் = தூய்மையுடன்

தூய்மை என்பதை அகத்திற்கும் புறத்திற்கும் சேர்த்துப் பார்க்கலாம். 

புறத் தூய்மை எளிதாக விளங்கும். தன் உடலையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீடு எப்படி இருக்கிறது ? நம் மேஜை, நம் சமையல் அறை , படுக்கை அறை , நம் உடை  என்று ஒவ்வொன்றிலும் தூய்மையை  கடைப் பிடிப்பது பக்தி. 

கோவிலில் குப்பை போடுகிறோம். வேலை செய்யும் மேசையைப் பார்த்தால் புத்தகங்களும்,  காகிதங்களும், wire களும் அடைந்து கிடக்கிறது. 

நம் வீடு, அலுவலகம், நம் தெரு , நம் ஊர் என்று எதிலும் தூய்மை கிடையாது. குப்பை குளங்களுக்கு நடுவில்  வாழ்கிறோம். இது அல்ல பக்தி. 

நம் வீட்டு குப்பையை தெருவில் கொண்டு கொட்டிவிட்டு வீடு தூய்மையாகி விட்டது என்று  நினைக்கிறோம்.  தெரு அசுத்தமாகி விட்டது தெரிவதில்லை. 

தூய்மை பக்தியின் அடிப்படை. 

இன்று முதல் நம்மையும், நம் சுற்றுப் புற சூழலையும் தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். அதுதான் பக்தி. 

மனம் சுத்தமாக இருப்பது அகத் தூய்மை. 

உலகில் உள்ள அனைத்து அற நூல்களையும் தொகுத்து நாலே வார்த்தையில் சொன்னார் திருவள்ளுவர். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

எல்லா அறத்திற்கும் அடிப்படை மனதில் மாசு இல்லாமல் இருப்பது. குற்றம் இல்லாமல் இருப்பது. 

மாற்றிச் சொல்லவதானால், அனைத்து பாவங்களுக்கும் காரணம் குற்றமுள்ள மனம். 

மனம் தூய்மையாக இருந்தால் குற்றம் எப்படி  வரும் ?

உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தால் அதுவே பக்தி. 

வீட்டையும், மனதையும் சுத்தப் படுத்திப் பாருங்கள்....சுகம் தெரியும். 

பக்தியின் மணம் கமழும். 

மேலும் சிந்திப்போம் 



No comments:

Post a Comment