Monday, May 4, 2015

கீதை - 12.11 - ஏன் பலனை துறக்க வேண்டும் ?

கீதை - 12.11 - ஏன் பலனை துறக்க வேண்டும் ?


अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥१२- ११॥

அதை²தத³ப்யஸ²க்தோऽஸி கர்தும் மத்³யோக³மாஸ்²ரித: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் தத: குரு யதாத்மவாந் || 12- 11||

அதை = இப்போது

இதத்  = இந்த

அபி = மேலும் 

அஸக்தோ =  சக்தி இல்லை என்றால்

அஸி = நீ

கர்தும் = செய்

மத்யோக =  என்னை அடையும் யோகத்தில்

ஆஸ்²ரித: = புகல் அடைந்து

ஸர்வ = அனைத்து

கர்ம = வினைகளின்

பலத்யாகம் = பலன்களை தியாகம் செய்து

தத: = அப்புறம்

குரு = நீ செய்ய வேண்டும்

யதாத்மவாந் = யதா + ஆத்மா + வந்த் = தன்னை அடக்கி

உன்னால் அதுவும் செய்ய முடியவில்லை என்றால், என்னில் சேரும் யோகத்தை கடைப்பிடித்து, தன்னைத் தான் கட்டுப் படுத்தி, எல்லா வினைகளின் பலனகளைத் துறந்து விடு. 

 முதல் படி
எல்லா  வினைகளையும்,தொழில்களையும் எனக்கென துறந்து, என்னையே பரமாகக் கொண்டு இருப்பவர்களை நான் சம்சாரக் கடலில் இருந்து கரை ஏற்றுவேன் என்றான்.

எல்லோராலும் அது முடிவதில்லை. எதற்க்காக நான் செய்யும் எல்லா வினைகளையும் அவனுக்காக என்று துறக்க வேண்டும். மேலும், கண்ணனை ஏன் பரமாகக் கொள்ள வேண்டும் என்று  கேட்கலாம்.

அவர்களுக்காக அடுத்த படி,

மனதை என்னிடம் நிறுத்து, புத்தியை என்னில் செலுத்து - என்னில் நீ உறைவாய் என்றான்.

அதாவது மனமும், புத்தியும் ஒரே இடத்தில் இலயிக்க வேண்டும் என்றான்.

முடிந்தால் நல்லது. முடியாவிட்டால் ?

இதுவும் உடனே முடியாது. என்ன செய்வது ?

சரி, உடனடியாக முடியாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்து என்னை அடை என்றான்.

அதுக்கெல்லாம் பொறுமையும் இல்ல, நேரமும் இல்ல என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு  மேலும் கண்ணன் சொல்கிறான்....

"செயல்களை எனக்காக துறக்க  முடியாதா,புத்தியை என் மேல் செலுத்த முடியாதா, இவற்றை பயிற்சி செய்ய முடியாதா, சரி பரவாயில்லை, உனக்கும் ஒரு வழி சொல்லுகிறேன் ....நீ செய்யும் வேலைகளை எனக்காக என்று செய், அது  உயர்வு என்று கருது நீ சித்தி அடைவாய் "

அதுவும் முடியாதென்றால் என்ன செய்வது ?

கடைசியாக கீதை  அவர்களுக்கும் ஒரு வழி  சொல்லுகிறது ...

"நீ உன்னை நீயே கட்டுப் படுத்தி, செயல்களின் பலன்களை துறந்து, என்னை அடையும்  வழியில் அல்லது யோகத்தில் இரு "

இது ஏதோ கண்ணனுக்காகச் செய்வது  அல்ல.

நம்முடைய சுய முன்னேற்றத்திற்கு சொன்ன வழி.

முதலாவது, சுய கட்டுப் பாடு - self control  - மனம் போன வழியில் , புலன்கள் போன வழியில் செல்லாமல் அவற்றை கட்டுப் படுத்தி செலுத்துவது.

 இரண்டாவது, செயல்களின் பலன்களை துறந்து....இது கீதையில் மீண்டும் மீண்டும் வருவது. எத்தனை தரம் படித்தாலும் இது நமக்கு சரி வருவது இல்லை. பலன் இல்லை என்றால் காரியம் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கீதை விடை தரவில்லை.

நாம் சிந்திப்போம்.

ஒரு மாணவன் பரிட்சைக்குப் படிக்கிறான். ஒரு நாள்  முடித்தவுடன் இதனால் எனக்கு இன்று என்ன பயன் என்று கேட்பானா ? கேட்டால் அதில் அர்த்தம் இல்லை. பலன் எப்போது வரும் ? பரீட்சை எழுதி, அது திருத்தப்பட்டு , மதிப்பெண் பட்டியல் வரும்போது படித்ததின் பலன் தெரியும்.

அது போல  எல்லா வினைகளுக்கும் பலன்  காலத்தில்  இருக்கிறது. பலன் வேண்டும்  என்று நினைப்பவன் எதிர் காலத்தை நினைத்து கனவு கண்டு கொண்டிருப்பான்.  ஏங்குவான்.அதை நினைத்து பயப்படுவான். அல்லது கனவில் மகிழ்ந்து கொண்டிருப்பான். அப்படி செய்யும் போது நிகழ் காலத்தில் செய்ய வேண்டியதை கோட்டை விட்டு விடுவான்.

இன்று செய்ய வேண்டியதை நீ ஒழுங்காகச் செய். பலனைப் பற்றி கவலைப் படாதே.

இன்று மேற்கிந்திய சிந்தனைகள் process goal என்று பேசுகின்றன.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? எடையைக் குறைக்க வேண்டும், இரத்தத்தில் சர்கரையின் அளவை குறைக்க வேண்டும், இரத்த அழுத்தத்தை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சரி தானே ?

சரி தான்.

உடனே நம் உயரத்திற்கு எத்தனை எடை இருக்க வேண்டும் என்று அறிந்து , பட்டினி போட்டு, உடல் பயிற்சி செய்து எடையை குறைக்க முயல்கிறோம்.

எனன் செய்தாலும் எடை குறைய மாட்டேன் என்கிறது. அல்லது குறைந்தாலும் மீண்டும் எடை போட்டு விடுகிறது.

எரிச்சலும், கோபமும், ஏமாற்றமும் வந்து விடுகிறது.

இது எல்லாம் சரி இல்லை என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு மீண்டும் மனம் போன போக்கில் சாப்பிட தொடங்கி விடுகிறோம்.

 இதை மாற்ற என்ன வழி ?

இந்த எடை வேண்டும் என்று கணக்கு போடாதீர்கள்.

நான் தினமும் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி  செய்வேன், எண்ணெய் பலகாரங்களை உண்ண மாட்டேன், புகை பிடிக்க மாட்டேன் என்று செயல் ரீதியான கொள்கைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

நாளும் உடல் பயிற்சி, நல்ல உணவு அவ்வளவுதான்.

செய்து கொண்டே இருங்கள். என்ன ஆகும், நாளடைவில் உடல் நிலை மிக ஆரோக்கியமாக  மாறி விடும்.

அப்புறம் என்ன செய்வது ?

அதைத் தொடருங்கள். நீங்கள் எந்த பலனையும் எதிர் பார்த்து செய்யவில்லை. எடை இவ்வளவு குறைய வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை.

நல்ல விஷயங்களை செய்கிறீர்கள். எடை குறைகிறதோ இல்லையோ, செய்து கொண்டே இருங்கள். ஒரு குறிப்பிட்ட எடையை அடைந்தாலும் தொடருங்கள்.

பலனை எதிர் பார்த்து செய்தால், எடை குறைந்த வுடன், "அப்பாடா ஒரு வழியா  நினைத்த எடைக்கு வந்தாச்சு " என்று எல்லாவற்றையும் நிறுத்தி விடுவீர்கள்.

எனவே பலனை எதிர்பார்க்காதீர்கள்.

நல்லதை செய்து கொண்டே இருங்கள் பலன் வந்த பின்னும் தொடருங்கள்.

வாழ்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்....

மிக மிக இனிமையாக இருக்கும்....

















No comments:

Post a Comment