கீதை - 12.19 - இனிய வாழ்கை அமைய
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥१२- १९॥
துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||
துல்ய = துல்யமாக, சமமாக
நிந்தா = நிந்தனைகளை
ஸ்துதி = துதிகளை,பாராட்டுகளை
மௌநீ = மெளனமாக
ஸந்துஷ்டோ = முழுதும் திருப்தி அடைந்து
யேந கேநசித் = எதை அடைந்தாலும், அதன் மூலம்
அநிகேத: = அ + நிகேத = வீடு இல்லாமல்
ஸ்தி²ரமதிர் = ஸ்திர + மதி = உறுதியான புத்தியுடன்
பக்திமாந் = பக்திமான்
மே = என்
ப்ரியோ நர: = பிரியமானவன்
புகழையும் இகழையும் நிகராகக் கொண்டு , மெளனமாக, எது கிடைத்தாலும் அதில் மகிழ்ந்து, வீடு இல்லாமல், ஸ்திர புத்திய உடைய பக்தன் எனக்கு இனியவன்.
புகழையும் இகழையும் நிகராகக் கொண்டு = புகழும் இகழும் வெளியில் இருந்து வருவன. மக்கள் தங்களுக்கு பிடித்ததை புகழ்வார்கள், பிடிக்காததை இகழ்வார்கள். இவை ஒன்று போல் இருப்பது இல்லை. இன்று பிடித்ததை நாளை பிடிக்கவில்லை என்பார்கள். இன்று பிடிக்காததை நாளை , பிடிக்கிறது சொல்வார்கள். இன்று புகழ்கிறார்களே என்று ஒன்று செய்தால், நாளை அதையே இகழ்வார்கள். உண்மையான பக்தன் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளக் கூடாது. எல்லாம் ஒன்றுதான் என்று மேலே செல்ல வேண்டும்.
மனிதர்களின் புகழுக்காக செய்ய ஆரம்பித்தால் பின் நம் குறிக்கோள் மறந்து போகும். ஒன்று செய்கிறோம், அதனால் புகழ் வருகிறது. அந்த புகழ் பிடித்துப் போய் விட்டால் , மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டி இருக்கும்.ஒரு கால கட்டத்தில் நமக்கே சலிப்பு வந்தாலும், புகழுக்காக செய்ய வேண்டி இருக்கும். ஒரு நாள் புகழ்ந்த அதே மனிதர்கள் இகழவும் தலைப் படுவார்கள். அட, இதுக்கா இத்தனை நாள் மெனக்கெட்டேன் என்று வருந்த வேண்டி வரும்.
புகழில் சந்தோஷப் பட்டால், இகழ்வில் வருந்துவது தவிர்க்க முடியாதது.
பதவியோ,பதவி உயர்வோ கிடக்கும் போது சந்தோஷப் பட்டு பார்ட்டி கொடுப்பவன், அந்த பதவி போகும்போது கட்டாயம் அழுவான்.
ரெண்டும் ஒன்றென்று இருக்க வேண்டும்.
மெளனமாக: வாய் பேசாமல் மெளனமாக இருப்பது ஒன்றும் கடினம் இல்லை. மனம், புத்தி மெளனமாக இருக்க வேண்டும். அது மிக மிக கடினம்.
அருணகிரிநாதருக்கு , முருகன் உபதேசித்தது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான்.
"சும்மா இரு"
அவ்வளவு தான்.
அந்த இரண்டு வார்த்தைகளுக்கு , இரண்டு வார்த்தைகளுக்கு பொருள் ஒன்றும் தெரியவில்லையே என்று வருந்தினார் அருணகிரி.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
மனம் ஓடிக் கொண்டிருந்தால் சொல்லும் ஓடிக் கொண்டே இருக்கும். வாய் திறக்காவிட்டாலும் , சப்தம் இருந்து கொண்டே இருக்கும்.
மௌனம் ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.
பேசுவதால் பயனில்லை என்பார் பாரதி. பேசுவது என்றால் மற்றவர்களிடம் பேசுவது மட்டும் அல்ல, நமக்குள் நாம் பேசுவதும் தான்.
எதிலும் முழு திருப்தி அடைந்து ....சிலருக்கு எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். ஓட்டை பாத்திரம் என்று நிறையும் ? இருப்பதில் திருப்தி வந்து விட்டால், இல்லாததற்கு மனம் ஆசைப் படாது.
வீடு இல்லாமல் : வீடு இல்லாமல் என்றால் ஏதோ இருக்க இடம் இல்லாமல் என்று அர்த்தம் அல்ல. ஒரு ஓட்டலில் தங்குகிறோம். அதை நம் வீடு என்று நாம் சொல்வது இல்லை.ஏன் ? ஏன் என்றால் அது நம்முடையது அல்ல. சில நாள் இருப்போம்.பின் காலி செய்து விட்டுப் போய் கொண்டே இருப்போம். ஐயோ, இந்த அறையை காலி செய்கிறேனே என்று என்றாவது வருந்தியது உண்டா.
நாம் இருக்கும் வீடும் அப்படித்தான். ஒரு நாள் அதை விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதான். அப்படி பற்று இல்லாமல் இருக்க வேண்டும்.
ஓட்டல் அறையில் எல்லா சௌகரியங்களும் இருக்கும். இருக்கும் வரை அவற்றை அனுபவித்துக் கொள்ள வேண்டியது. போகும் போது ஒரு கவலை இல்லாமல் கிளம்ப விடுகிறோம் அல்லவா, அது போல நம்மை சுற்றியுள்ள பொருள்கள், உறவுகள் எல்லாம் இருக்கும் வரை நாம் அனுபவித்துக் கொள்ள வேண்டியது. இல்லை என்றால், பெரிதான துக்கம் ஒன்றும் கொள்ளத் தேவையில்லை.
வீடு என்று ஒன்று இல்லாமல் என்பதன் அர்த்தம் , பற்றற்று இருத்தல்.
அப்படிப்பட்டவன் , என் மனதிற்கு இனியன் என்கிறான் கண்ணன்.
கண்ணனுக்கு இனியனோ இல்லையோ, அப்படி இருந்தால் நமக்கு நாமே இனியவர்களாக இருப்போம். வாழ்கையே இனிமையாக மாறிப் போகும்.
எல்லாம் முடியாவிட்டாலும், முடிந்தவரை முயல்வோமே ?
No comments:
Post a Comment