கீதை - 12.12 - ஒன்றை சிறப்பாகச் செய்வது எப்படி ?
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते ।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥१२- १२॥
ஸ்²ரேயோ ஹி ஜ்ஞாநமப்⁴யாஸாஜ்ஜ்ஞாநாத்³த்⁴யாநம் விஸி²ஷ்யதே |
த்⁴யாநாத்கர்மப²லத்யாக³ஸ்த்யாகா³ச்சா²ந்திரநந்தரம் || 12- 12||
ஸ்ரேயோ = சிறந்தது
ஹி = அது
ஜ்ஞாநம் = ஞானம்
அப்யாஸா = பயிற்சியை விட
ஜ்ஜ்ஞாநாத் = ஞானத்தை விட
த்யாநம் = தியானம்
விஸிஷ்யதே = சிறந்தது
த்யாநாத் = தியானத்தை விட
கர்ம = வினைகளின்
பல = பலன்களை
த்யாக = துறந்து விடுவது
ஸ்த்யாகாச் சாந்திர அ நந்தரம் = அந்தத் துறவை காட்டிலும் சாந்தி உயர்ந்தது
பயிற்சியை விட ஞானம் சிறந்தது.
ஞானத்தை விட தியானம் சிறந்தது.
தியானத்தை விட பலன்களை துறந்த வினைகள் உயர்ந்தது
அதை விட சாந்தி உயர்ந்தது.
நேரடியாகப் பார்த்தால் ஞானம், தியானம், பலன்களைத் துறந்த கர்மம், சாந்தி என்று ஒன்றை விட ஒன்று மேம்பட்டதாக கீதை சொல்கிறது என்று அறிய முடிகிறது.
ஒன்றை விட ஒன்று உயர்ந்தது என்றால் எதற்கு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் ? நேரடியாக சாந்தி அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட வேண்டியதுதானே ? என்ற கேள்வி எழும்.
அது மட்டும் அல்ல, கீதை நம்மை போட்டு குழப்புகிறதோ என்ற எண்ணமும் வரும்.
ஒரு முறை ஞானம் உயர்த்து என்கிறது. சில சமயங்களில் பலன்களை துறந்த உயர்ந்தது என்கிறது. இப்போது சாந்தி இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்கிறது.
நாம் என்ன செய்வது ? ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டாமா ?
இதை வேறு விதமாக நாம் சிந்திப்போம்.
இவை எல்லாம் வெவ்வேறு வழிகள் அல்ல.
ஒரு காரியத்தை செய்யும் பல படிகள் அல்லது வழிகள் என்று பார்த்தால் இதன் சிறப்பு விளங்கும்.
ஒரு காரியத்தை நன்றாகச் செய்ய வேண்டுமானால் அதில் நல்ல பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்ய செய்ய காரியம் எளிதாக , சிறப்பாக செய்ய முடியும்.
வெறும் பயிற்சியை விட அதில் ஞானமும் சேர்ந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும். அதாவது, ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்வது வேறு இயந்திர கதியில் செய்வதை விட சிறந்தது அல்லவா.
எனவே, பயிற்சியை விட ஞானம் சிறந்தது என்கிறது கீதை.
வேறு பயிற்சியை விட ஞானத்தோடு சேர்ந்த பயிற்சி சிறந்தது.
காரணம் தெரிகிறது, பயிற்சி இருக்கிறது இருந்தாலும் மனம் அதில் ஒட்டவில்லை. நாம் செய்யும் காரியத்தை வேண்டா வெறுப்பாக செய்கிறோம். மனம் ஒன்று படவில்லை. அப்படி செய்வதை விட மனம் அதில் ஒன்றி செய்வது அதைவிட உயர்ந்தது. அதாவது வேறு பயிற்சியை விட ஞானத்தோடு கூடிய பயிற்சி உயர்ந்தது.
அப்படி ஞானமும் பயிற்சியும் சேர்ந்து இருக்கும் போது அந்த காரியத்தில் மனம் ஒன்றி இலயித்து செய்வது அதை விட சிறந்தது.
எனவே ஞானத்தை விட தியானம் சிறந்தது என்கிறது கீதை.
மனம் ஒன்றி, ஞானத்தோடு பயிற்சி செய்தாலும்,அதன் பலன்களை துறந்து செய்வது அதை விட உயர்ந்தது.
நமக்கு பலன் வராவிட்டாலும் பரவாயில்லை , நாம் செய்த முயற்சியின் பலனை இன்னொருவன் கொண்டு செல்வதை நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. மனம் கிடந்து அடித்துக் கொள்ளும். 'செய்தது எல்லாம் நான், அவன் என்னமோ தான் செய்த மாதிரி காட்டிக் கொள்கிறானே ' என்று மனம்
பொருமும்.
அப்படி மனம் வருந்தாமல் அமைதியாக இருப்பது அதை விட சிறந்தது.
சாந்தி அதை விட உயர்ந்தது என்கிறது கீதை.
ஒரு காரியத்தை சிறப்பாக எப்படி செய்வது என்று கீதை சொல்லித் தருகிறது.
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.
ஏன் எதற்கு என்று அறிந்து, புத்தியோடு செய்யுங்கள்.
அப்படி செய்யம் போது மனம் ஒன்றி செய்யுங்கள்
செய்யும் செயலின் பலனைப் பற்றி கவலைப் படாதீர்கள்
வெற்றியோ தோல்வியோ அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்
செயல் மட்டும் அல்ல...வாழ்வும் இனிமையாக இருக்கும்.
No comments:
Post a Comment