கீதை - 12.18 - பிரிந்தோம், சேர்வோம்
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥१२- १८॥
ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||
ஸம: = சமமாக
ஸத்ரௌ ச மித்ரே = சத்ரு, மித்ரு = பகைவனிடத்தும், நண்பனிடத்தும்
ச = மேலும்
ததா = அதே போல
மாநாபமாநயோ: = மானத்திலும், அவமானத்திலும்
ஸீதோஷ்ண = சீத + உஷ்ண = சீதம் என்றால் குளிர்ச்சி; உஷ்ணம் என்றால் சூடு. குளிரிலும், வெப்பத்திலும்
ஸுக துகே ஷு = சுகத்திலும், துக்கத்திலும்
ஸம: = சமமாக
ஸங்க³விவர்ஜித: = பற்று இல்லாதவனோ . சங்கம் என்றால் சேர்த்தல், பற்று கொள்ளுதல். விவர்ஜித என்றால் விலகுதல். பற்றில் இருந்து விலகி இருப்பவன். பற்றில்லாதவன்
பகைவனிடம், நண்பனிடமும்
மானத்திலும், அவமானத்திலும்
குளிரிலும், வெப்பத்திலும்
இன்பத்தையும், துன்பத்தையும்
சமமாக கொள்பவன் எவனோ ....
அது எப்படி முடியும் ? என்ற கேள்விதான் முதலில் நமக்குத் தோன்றும்.
நண்பனையும், பகைவனையும் ஒன்றாக எப்படி கருத முடியும் ?
அதே போல மான அவமானங்களை ஒன்றாக எப்படி கொள்ள முடியும்.
இதெல்லாம் ஏதோ வார்த்தை ஜாலம் போல இருக்கிறதே தவிர நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற சந்தேகம் எழுவது ஞாயம்.
பின் ஏன் வியாசர் அப்படி சொல்கிறார் ?
சிந்திப்போம்.
முதலில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நமது உள்ளும் புறமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. நாம் வெளியில் என்ன செய்கிறோமோ அது உள்ளுக்குள் நிகழும். அதே போல் உள்ளுக்குள் என்ன செய்கிறோமோ அது வெளியில் நிகழும்.
எப்படி ?
நான் ஒரு மதத்தை பின் பற்றுகிறேன். அதில் சொன்ன செய்திகள் எனக்கு உடன் பாடாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு மதத்தில் வேறு விதமாக சொல்கிறார்கள் என்றால் அந்த மதமும், அதன் கொள்கைகளும் எனக்கு பிடிக்கவில்லை. சில சமயம் கண்டும் காணாதது போல ,இருக்கிறேன், சில சமயம் வெறுப்பு வந்தாலும் சகித்துக் கொள்கிறேன், சில சமயம் சண்டை பிடிக்கவும் செய்கிறேன்.
இந்த வெறுப்பு, சண்டை , கோபம் எப்படி வந்தது ?
உள்ளுக்குள் எனக்கு ஒரு மதத்தின் கோட்பாடுகள் பிடித்தது...வெளியில் அந்த கோட்பாடுக்கு ஒத்து வராதவர்கள் மேல் கோபம் வருகிறது.
உள்ளே நிகழ்ந்த பிரிவு, வெளியே படுகிறது.
அதே போல, வெளியே ஒரு நாட்டுக்கு எல்லை என்று கோடு வரைகிறோம்.
இதுவரை என் நாடு, அது உன் நாடு என்று சொல்லி விடுகிறோம். இந்த வெளிப் பிரிவு என்ன செய்கிறது என்று பாருங்கள். அந்த நாட்டுக் காரன் மேல் பகை கொள்ள வைக்கிறது. அவன் மேல் வெடி குண்டைத் தூக்கி போட வைக்கிறது. அவன் நமக்கு எதிரான ஒரு விளையாட்டில் தோற்றால் மனம் கொக்கரிக்கிறது.
ஏன், வெளியே நிகழ்ந்த பிரிவு மனதுக்குள் சென்று ஆட்டி வைக்கிறது.
இப்படி உள்ளும் புறமும் பிரித்து பிரித்து வைத்து நாம் யார் என்பதையே மறந்து இந்த பிரிவுகளினால் உந்தப் பட்டு ஒரு இயந்திரம் போல செயல் படுகிறோம்.
ஆண் பெண் பிரிவு
ஜாதி, மதம், நாடு, மொழி, இனம், செல்வம் , ஏழ்மை , படித்தவன், படிக்காதவன், என்று ஆயிரம் பிரிவுகளை செய்து வைத்து இருக்கிறோம்.
ஒவ்வொரு பிரிவும் நம்மையும் பிரித்துப் போடுகிறது.
சிதைந்து போய் நிற்கிறோம்.
நம்மை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.
என் மதம், என் நாடு, என் மொழி என்னை பிரித்துப் போடுகிறது. இந்த பிரிவுகள் இல்லாத நான் யார் ?
இப்படி சிதைந்து கிடக்கும் நம்மை ஒன்று சேர்க்க முயல்கிறது கீதை.
இந்த பிரிவுகள் வெவ்வேறு தளங்களில் நிகழ்கிறது.
- மனதில்
- புத்தியில்
- உடலில்
என்ற மூன்று தளங்களில் நிகழ்கிறது.
பகை நட்பு - மனதில் நிகழும் பிரிவு. அவன் எனக்கு பகை ஏன் என்றால் நான் நம்புவதை அவன் நம்புவதில்லை, என்னை விட உயர்ந்தவனாக இருக்கிறான், எனக்கு வர வேண்டியதை அவன் எடுத்துக் கொள்கிறான் என்று மனதில் நாம் நினைப்பதால் பகை வருகிறது.
மானம், அவமானம் - புத்தியில் நிகழ்வது. வெற்றி தோல்வி, மானம் அவமானம் எல்லாம் புத்தியில் நிகழ்வது.
சூடு, குளிர்ச்சி - உடலில் நிகழும் பிரிவு.
இவற்றை ஒன்றாகப் பாருங்கள் என்றால் உடனே சுடு தண்ணியை எடுத்து கோடை காலத்தில் மேலே ஊற்றிக் கொள்வது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. இந்த பிரிவுகள் ஏன் வருகின்றன, இவற்றால் நமக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று சிந்திக்க வேண்டும்.
பொதுவாக பிரிவுகள் இயற்கையில் இல்லை. நாமே கற்பனை செய்வது கொள்வது தான். நமக்கு சௌகரியமாக இருக்க செய்த பிரிவுகள், பின்னாளில் நமக்கு துன்பம் தரத் தொடங்குகின்றன.
இவற்றை அறிந்து கொண்டால், மனமும், அறிவும், உடலும் ஒன்று படும்.
We will become an integrated human being.
சிந்திப்போம் .....
No comments:
Post a Comment