கீதை - 12.14 - நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை
संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १४॥
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ³ யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||
ஸந்துஷ்ட: ஸததம் = எப்போதும் மகிழ்வுடன்
யோகீ³ = யோகி
யதாத்மா = தன்னடக்கத்துடன்
த்ருட நிஸ்சய: = திட நிச்சயத்துடன்
மய் = என்னில்
அர்பித = அர்ப்பணம் செய்து
மநோ = மனம்
புத்திர் = புத்தி
யோ = அவன்
மத்பக்த: = என் பக்தன்
ஸ = அவன்
மே = எனக்கு
ப்ரிய: - பிரியமானவன்
எப்போதும் மகிழ்வுடன் , தன்னடக்கத்துடன் , திட நிச்சயமாய் , என்னில் மனத்தையும் புத்தியையும் அர்பணம் செய்து என் பக்தனாகிய யோகி எனக்கு பிரியமானவன்.
இறைவனை நம்புபவர்கள் கூட ஏன் இறைவனை நம்புகிறார்கள் ? இறைவனால் தங்களுக்கு ஏதோ பலன் கிடைக்கும் என்று நம்புவதால் அவர்கள் இறைவனை நம்புகிறார்கள். இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் அல்லது சொர்க்கத்தில் எங்கோ இறைவன் நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. தங்களுக்கு அவன் இன்பத்தைத் தருவான், துன்பங்களை போக்குவான், ஆபத்தில் இருந்து தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றுவான் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது.
தங்கள் குறைகளை அவன் இட்டு நிரப்புவான் என்ற நினைக்கிறார்கள்.
அதற்காக இறைவனை போற்றுகிறார்கள், காணிக்கை செலுத்துகிறார்கள், முடியை தருகிறார்கள், இன்னும் என்னனமோ செய்கிறார்கள்.
இறைவனை எப்படியாவது அடைந்து விட்டால் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் எப்படி இறைவனை அடைவது ? இறைவனுக்கு பிரியமானவர்களாய் ஆவது எப்படி ?
முதலில், எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியுடன் எப்படி இருப்பது ? நமக்கு ஆயிரம் தேவைகள் இருக்கிறது. ஒன்று தீர்ந்தால் அடுத்தது முளைக்கிறது. என்று நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறி நாம் நிரந்தர சந்தோஷமாக இருப்பது ?
ஆசைகள் நிறைவேறுவதால் சந்தோஷம் வருவது இல்லை.
ஆசையே இல்லாத போதுதான் சந்தோஷம் வருகிறது.
எனவே, இரண்டாவது, தன்னடக்கத்துடன், அதாவது புலன் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்கிறான். ஆசையின் பின்னால் ஓடுபவனுக்கு ஒரு காலும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது.
மூன்றாவது, இறைவன் மேல் திடமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது , இன்று மிகவும் கடினமான காரியம். அறிவியல் வளர வளர இறைவன் மேல் சந்தேகம் வளர்ந்து கொண்டே போகிறது. மனம் நம்பினாலும் புத்தி சந்தேகப் படுகிறது.
முதலில் நம்பிக்கை வர வேண்டும். பின் நம்புவது வரும்.
விதை விதைத்த பின், நம்புங்கள் செடி முளைக்கும் என்று.
சந்தேகப் பட்டு தோண்டி தோண்டி பார்த்துக் கொண்டிருந்தால் முளைக்காது.
நம்புங்கள்...என்றேனும் ஒரு விதை முளை விடலாம்.
நம்புவதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment