கீதை - 12.8 - மனிதன் , இறைவனாகலாம்
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥१२- ८॥
மய்யேவ மந ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஸ²ய: || 12- 8||
மய் = ;என்னில்
யேவ = உறுதியாக
மந = மனதை
ஆதத்ஸ்வ = நிலை நிறுத்தி
மயி = என்னில்
புத்திம் = புத்தியை
நிவேஸய = செலுத்தி
நிவஸிஷ்யஸி = இருந்தால் , குடி இருந்தால்,
மய் = என்னில்
யேவ = உறுதியாக
அத = இனி
ஊர்த்வம் = மேலே
ந = இல்லை
ஸம்ஸ²ய = சந்தேகம்
என்னில் மனதையும், புத்தியையும் செலுத்தி நிலையாக இருந்தால், நீ என்னில் இருப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்வில் சிக்கல் என்ன என்றால் மனமும் புத்தியும் ஒன்றாக இல்லாமல் பிரிந்து கிடப்பதுதான்.
அதிகம் சாப்பிடாதே என்று புத்தி சொல்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் என்று மனம் அலை பாய்கிறது.
தொடாதே...அது உன்னுடையது அல்ல என்கிறது புத்தி...தொட்டால் என்ன என்று மனம் குறுகுறுக்கிறது....
பொய் சொல்லாதே என்கிறது மனம்...யார் கண்டு பிடிப்பார்கள் , பார்ப்போம் என்கிறது புத்தி..
இப்படி நாளும் , புத்திக்கும் மனதுக்கும் இடையே கிடந்து அல்லல் படுகிறோம்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
என்பார் வள்ளலார்.
உள்ளும் புறமும் எங்கே ஒன்றாக இருக்கிறது ?
மனம் என்பது புலன்களால் செலுத்தப் படுவது. புத்தி சிந்தனையால் , அரிவால் இயங்குவது.
புத்தி சிந்தித்து, படித்து, படித்தவர்கள் சொல்லக் கேட்டு ஒன்றைச் சொல்லும்.
மனம் கொஞ்சம் அந்த .போகும். பின் அதில் சந்தேகம் கொள்ளும். வேறு ஒன்றை சிந்திக்கும். இது சரியா தவறா என்று ஐயம் கொள்ளும். தவறோ என்று பயம் கொள்ளும்.
புத்தியும் மனமும் ஒன்று புள்ளியில் குவிவது கடினம்.
அதைத்தான் கண்ணன் சொல்லுகிறான்.
அப்படி மனமும் புத்தியும் ஒன்றில் செலுத்தினால் ..? என்ன ஆகும் ?
"நீ என்னில் இருப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை " என்பது கண்ணனின் வாக்கு. நீ இறை தன்மை அடைவாய் என்கிறான்.
இறை தன்மை அடைய இதைவிட வேறு எளிய வழி இருக்குமா என்ன ?
நீ , நானாகவே மாறிவிடுவாய் ...நீ என்னில் கலப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறான்.
எப்படி நாட்டியத்தில் இலயித்து ஆடும் கலைஞன் அந்த நாட்டியமாகவே மாறிவிடுகிறானோ ...அது போல...அவன் வேறு நாட்டியம் வேறு அல்ல. அவனே நாட்டியம்.
அதே போலத் தான் தன்னை மறந்து பாடும்போது, பாடுபவன் அந்த இசையாகவே மாறி விடுகிறான்.
இறைவன் மேல் மனதையும் புத்தியையும் செலுத்தி ஒன்றி இருக்கும் போது நீங்கள் இறைவனாகவே மாறி விடுகிறீர்கள்.
மனதையும் புத்தியையும் இணைப்பது யோகம்.
மனிதனை இறைவனோடு இணைப்பது யோகம்.
மனதையும் புத்தியையும் இணைப்பது யோகம் என்றால் அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்ல முடியுமா? எப்படி இணைப்பது என்ற அறிவு எனக்கு இல்லாதபடியால் கேட்கிறேன்.
ReplyDelete