கீதை - 12.5 - உருவமுள்ளதா, உருவமற்றதா ?
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥१२- ५॥
க்லேஸோ²ऽதி⁴கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் |
அவ்யக்தா ஹி க³திர்து³:க²ம் தே³ஹவத்³பி⁴ரவாப்யதே || 12- 5||
க்லேஸோ = வலி, துன்பம்
அதிகதர = அதிகமானது
தேஷாம் = அவர்களுக்கு
அவ்யக்தாஸக்தசேதஸாம் = அவ்யக்த + அசக்த + சேதாஸ் = வியக்த என்றால் தெரிவது. அவ்யக்த என்றால் தெரியாதது. கண்ணுக்கும் புலன்களுக்கும் தெரியாத. அதனோடு மனதால் (சேதாஸ் ) தொடர்புகொள்வது (அசக்த )
அவ்யக்தா = வெளிப்படாத
ஹி = அதனால்
கதி = வழி, பாதை
துர்துகம் = கடினமாக
தேஹவத்பி = தேகத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள்
அவாப்யதே = அடைவது
கடினமான சமஸ்கிரத ஸ்லோகங்களையும் அதன் வார்த்தைகளையும் கொஞ்சம் எளிமை படுத்தி சிந்திப்போம்.
இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால், அவன் எப்படி இருப்பான் ? அவனுக்கு ஒரு உருவம் உண்டா ? உண்டு என்றால் அது என்ன உருவம் ? ஏன் அந்த உருவம் மட்டும் ? உருவம் இல்லை என்றால் எப்படி ?
கீதை இறைவனைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்கிறது.
ஒன்று வெளிப்படையான தோற்றம்
இன்னொன்று வெளிப்படாது.
வெளிப்படையான தோற்றம் என்றால் ஏதோ உங்களைப் போல, என்னைப் போல இருப்பது அல்ல....அனைத்து சராசரங்களையும் அடக்கிய ஒரு பேருருவம். விஸ்வ ரூபம்.
எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
இன்னொன்று வெளிப்படாதது....எல்லாவற்றிர்க்குளும் இருப்பது.
இரண்டும் ஒன்றுதான் என்றாலும் ஒருவரால் இரண்டையும் சிந்திக்க முடியாது.
நமக்கு உருவம் இல்லாத ஒன்றை சிந்திப்பதே கடினம்.
உருவம் இல்லாத ஒன்று என்று சொல்லும்போதே உருவம் என்ற ஒன்றை நாம் கொண்டுவந்து விடுகிறோம். நம்மை பொறுத்தவரை அனைத்தும் ஒரு உருவத்தில், வடிவில் இருக்க வேண்டும். உருவம் இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது.
அதைத்தான் இந்த சுலோகம் சொல்லுகிறது.
தேகத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள் உருவமற்ற ஒன்றை சிந்திப்பது கடினம் என்கிறார்.
உண்மைதானே.
அப்படிஎன்றால், இரண்டு விஷயங்கள் சாத்தியமானது....
ஒன்று தேகத்தின் மேல் உள்ள பற்றை விட வேண்டும். அல்லது
உருவம்ற்றதை விட்டு விட்டு உருவத்தை வழிபட வேண்டும்.
இதைத் தமிழ் இலக்கியம் சற்று விரித்துப் பார்கிறது...
தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் என்று பார்த்தால் அது இறைவனின் தோற்றத்தை மூன்று விதமாகப் பிறக்கிறது.
உருவம்
அருவம்
உருவம் அருவம் இல்லாத ஒன்று
அப்பர் பெருமான் சொல்லுவார்
விறகில் தீயினன்
பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
மணியைக் கையில் எடுத்தால் அதில் உள்ள ஒளி தெரியும்.
பாலை கொஞ்சம் கடைந்தால் அதில் உள்ள நெய் வெளிப்படும்.
விறகை நன்றாகக் கடைந்தால் தீ வெளிப்படும்.
இரண்டோ, மூன்றோ ...ஏன் இப்படி போட்டு குழப்ப வேண்டும் ? ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது ? ஏன் இவ்வளவு பெரிய சிக்கல்.
உருவம் என்று வந்து விட்டால் ஆளாளுக்கு ஒரு உருவத்தை கொண்டு வந்து இதுதான் உண்மையான கடவுள் என்று சண்டை பிடிக்கிறார்கள்.
பொறுமையாக சிந்தித்தால் சிக்கலே இல்லை.
மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment