கீதை - 12.7 - உன்னை விரைந்து கரை ஏற்றுகிறேன்
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥१२- ७॥
தேஷாமஹம் ஸமுத்³த⁴ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக³ராத் |
ப⁴வாமி நசிராத்பார்த² மய்யாவேஸி²தசேதஸாம் || 12- 7||
தேஷாம் = அவர்களை
அஹம் = நான்
ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்
ம்ருத்யு = மரணம்
ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்
ஸாகராத் = விழுங்கும், கடல்
பவாமி = நான்
நசிராத் = வேகமாக
பார்த = பார்த்தனே
மய்யா = என்னை
அவேஸித = அடைகிறார்களோ
சேதஸாம் = மனதால்
அவ்வாறு என்னை மனதால் அடைபவர்களை நான் மரணம், பிறவி என்று மாறி மாறி வரும் இந்த சுழலில் இருந்து விரைந்து கரை ஏற்றுவேன்
ஏன் பக்தி செய்ய வேண்டும் ? பக்தி செய்தால் என்ன கிடைக்கும் ?
மனித மனம் எப்போதும் இலாப நட்ட கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும்.
இதனால் எனக்கு என்ன இலாபம் என்ற கேள்வி எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.
மனதை என்னில் செலுத்தி, காரியங்களை நீக்காக செய்து, என்னை தியானித்து என்று கண்ணன் அடுக்கிக் கொண்டே போகிறான்.
சரி, எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடை தருகிறான்.
அந்த விடையை பார்க்குமுன் நாம் சற்று நிறுத்தி, இந்த கேள்வியை வேறு விதமாக கேட்டு பார்ப்போம்.
காரியங்களை நமது நன்மைக்காக செய்து, எதிலும் மனம் ஒன்றாமல், ஒன்றில் இருந்து இன்னொன்று என்று மனம் தாவிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும் ?
என்ன ஆகும் என்று எதிர் காலத்தில் கேட்பதை விட, என்ன ஆகிற்று இது வரை , என்ன ஆகிக் கொண்டு இருக்கிறது இப்போது என்று யோசிப்போம்.
ஒரு ஆசை, ஒரு குறிக்கோள் என்று ஒன்றை துரத்துகிறோம். அதை அடைந்தாலே வாழ்வில் நிம்மதி என்று நினைக்கிறோம். அது கிடைத்த பின் என்ன ஆகிறது ? மனம் நிம்மதியாக இருக்கிறதா ?
அடுத்த ஒன்றிற்கு மனம் ஆசைப் படுகிறது.
மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுகிறது.
கிடைத்தவுடன் கொஞ்ச நாள் சந்தோஷம், திருப்தி....பின் சிறிது நாளில் அதுவே சலிக்கத் தொடங்குகிறது. பின் அதன் மேல் வெறுப்பு கூட வந்து விடுகிறது. அதை விட்டு விட்டு அடுத்ததை தேடுகிறோம்.
மேலே போவதும், கீழே வருவதும்
சந்தோஷமும், வெறுமையும்
ஒன்று போய் மற்றொன்றாய் வந்து வந்து போகிறது....
இது தான் பெரிய மாயச் சுழல்....
இதில் இருந்து எப்படி விடுபடுவது...
கண்ணன் சொல்கிறான் ...காரியங்களை உனக்காக செய்யாதே, மனதை ஒருமுகப் படுத்து, தியானம் செய் ...
செய்தால்
இந்த சுழலில் இருந்து உன்னை விரைந்து கரையேற்றுகிறேன் என்கிறான்.
நமக்கு எல்லாமே உடனே வேண்டும்.
ஒரு நாள் உடற் பயிற்சி செய்தால் எடை குறைய வேண்டும்.
ஒரு நாள் கோவிலுக்குப் போனால் உடனே கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் ...
அவசரம், அவசரம் ...எல்லாவற்றிலும் அவசரம்....
கண்ணன் சொல்கிறான்..."விரைந்து உன்னை கரை ஏற்றுகிறேன்" என்கிறான்.
நம்பிக்கை வேண்டும்.
சொல்பவர்கள் சொன்னால் நம்பிக்கை வரும். கண்ணன் சொல்கிறான். அல்லது வியாசர் சொல்கிறார்.
இப்படி செய்தால் விரைந்து கரை ஏறலாம் என்று.
கரை ஏறியவர்கள் சொல்கிறார்கள்.
பொய்யா சொல்லப் போகிறார்கள்.
செய்துதான் பார்ப்போமே.
No comments:
Post a Comment