Monday, January 28, 2019

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட 



नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥

நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||

ந = இல்லை

இஹ = இங்கு

அபி க்ரமநாஸோ  = அபி+கர்ம +நாச  = கர்மங்களில் இருந்து விடுபட

அஸ்தி = இருக்கிறது

ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,

ந= இல்லை

வித்³யதே|  = இருக்கிறது

ஸ்வல்பம் = கொஞ்சம்

அபி = இப்போது

அஸ்ய  = இதன் மூலம்

த⁴ர்மஸ்ய = தர்மத்தின் மூலம்

த்ராயதே  = காக்கிறது

மஹதோ  = பெரிய

பயாத்  = பயத்தில் இருந்து


இதில் கர்மத்தின் விளைவு மாறுவதில்லை. அது வேறு விதமாகவும் விளையாது. இதை கொஞ்சம் புரிந்து கொண்டாலும், பெரிய பயத்தில் இருந்து தப்பலாம். 

என்ன பெரிய பயம் நமக்கு? வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், வீடு, வாசல், பிள்ளை, குட்டி என்று இருக்கிறோம். என்ன பெரிய பயம் நமக்கு ?

நாம் வெளியே பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும், பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

வயதாகிறதே என்ற பயம். நோய் வருமோ என்ற பயம். கண் காண முடியாமல், காது கேட்க முடியாமல், எழுந்து நடமாட முடியாமல் போய் விடுமோ என்ற பயம்.

செல்வம் நம்மை விட்டு போய்விடுமோ என்ற பயம்.

பிள்ளைகளுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்.

எதிர் காலம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

அனைத்து பயங்களுக்கும் அடிப்படை, மரண பயம்.

ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், மரண பயமே அனைத்து பயங்களுக்கும் அடிப்படையான  பயம் என்று.

ஏன் மரண பயம் ?

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? சொர்க்கமா? நரகமா ? மறு பிறப்பா? எங்கு போய் எப்படி  பிறப்போமோ? இங்குள்ளவைகளை எல்லாம் விட்டு விட்டுப் போக வேண்டுமா ? கணவன், மனைவி, உற்றார், உறவினர், சொந்தம், பந்தம், சொத்து, சுகம், உறவு, பகை, ஞாபகங்கள், அனைத்தையும் விட்டு விட்டு போக முடியுமா ?

அந்த பயம் எப்படி எப்படியோ வெளிப் படுகிறது.

கர்ம யோகத்தை, சிறிதளவேனும் அறிந்து கொண்டால் கூட பெரிய பயத்தில் இருந்து  விடுப்படலாம் என்கிறான் கண்ணன்.

அறிந்து கொள்வோமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/240.html

No comments:

Post a Comment