Thursday, January 10, 2019

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?



सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥

ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்

ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு

லாபா⁴லாபௌ⁴ = இலாபம் - அ இலாபம்

ஜயாஜயௌ| = ஜெயம் - அ ஜெயம்

ததோ = பின்

யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய

யுஜ்யஸ்வ = தயாராவாய்

ஏவம் = இவாறு

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

சுகம்  - துக்கம்
இலாபம் - நட்டம்
வெற்றி - தோல்வி

இவற்றை சரி சமமாகக் கருதி நீ காரியத்தில் ஈடுபட்டால், பாவத்தை அடைய மாட்டாய்.


இது என்ன சரியான போங்கா இருக்கே. இலாபம், நட்டம் , இன்பம், துன்பம் இது எல்லாவற்றையும் எப்படி சரி சமமாகப் பார்க்க முடியும் ? இன்பமும் துன்பமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.

இதெல்லாம் சும்மா வேலைக்கு ஆகாது, வெட்டி வேதாந்தம் என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசிப்போம்.

நம்மால் எவ்வளவோ சாதிக்க முடியும். இருந்தும் நாம் ஒன்றும் செய்வது இல்லை. அல்லது, நம்மால் செய்ய முடிந்தவற்றில் மிகச் சிறிய அளவே செய்கிறோம்.

உதாரணமாக...

உங்களால் ஒரு நல்ல புத்தகம் எழுத முடியுமா,  டாக்டர் பட்டம் வாங்க முடியுமா? ஒரு நல்ல காரியத்துக்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட முடியுமா, மாரத்தான் ஓட முடியுமா, புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியுமா ?

முடியும். அனைத்தும் முடியும். இருந்தும் நாம் செய்வது இல்லை.

ஏன்?

ஒரு வேளை புத்தகம் எழுதி, அது சரியாக வராவிட்டால், யாரும் வாங்காவிட்டால், நம்மைப் பார்த்து யாராவது எள்ளி நகையாடிவிட்டால், அவமானப் பட நேரிடும் என்று நினைத்து செய்யாமல் இருந்து விடுகிறோம்.

நம்மால எங்க டாக்டர் பட்டம் வாங்க முடியும் என்று என்று சோர்ந்து இருந்து விடுகிறோம்.

நம்மால் முடிந்த உயர்ந்த சிறந்த காரியங்களை செய்யாமல் இருக்கக் காரணம் தோல்வி பற்றிய பயம், அதனால் வரும் சங்கடங்கள்/வலிகள் / துன்பங்கள் பற்றிய சோர்வு, அதில் இருந்து வரும் இழப்புகள் இவற்றை எண்ணி  தள்ளிப் போட்டு விடுகிறோம் அல்லது செய்யாமலேயே இருந்து விடுகிறோம்.

இது ஒரு பக்கம் என்றால், செய்கின்ற காரியத்தை நாம் சிறப்பாக செய்வது இல்லை. காரணம், வெற்றி பற்றிய அதீத கற்பனை.

"என்ன செஞ்சு என்ன செய்ய...இந்த கம்பெனியில் ஒரு பதவி உயர்வு கிடையாது, சம்பள உயர்வு கிடையாது " என்று அங்கலாய்த்துக் கொண்டு சரியாய் வேலை செய்யாமல் விடுகிறோம்.

இப்படியாக வெற்றி, தோல்வி, இலாபம், நட்டம் , போன்றவை நம் முயற்சியை தடுத்து விடுகின்றன.

செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது, செய்யத் தயங்குகிறோம்.

வெற்றியோ தோல்வியோ,  நான் இதை முயன்று பார்ப்பேன், என் திறமை அனைத்தையும்  செலுத்தி வேலை செய்வேன். வருவது வரட்டும் என்று நினைத்து இறங்க வேண்டும்.

பலர் வருட ஆரம்பித்தில், "தினம் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வேன், 5 கிலோ எடையை குறைக்கப் போகிறேன் " என்று ஆரம்பிப்பார்கள்.  ஒரு மாதத்தில் எடை கொஞ்சமும் குறைத்திருக்காது. இது ஒண்ணும் சரி இல்லை என்று விட்டு  விடுவார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்று நல்ல காரியத்தை விட்டு விடுவது.

விடக் கூடாது. வெற்றியோ தோல்வியோ. தொடர்ந்து நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியவற்றை இலாப நட்டம் கருதி செய்யாமல் விடுவதுதான் பெரிய பாவம்.

Not realizing your potential is the biggest sin.

ஔவையார் இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள்

இயல்வது கரவேல் என்று. (அது பற்றி தனியாக ஒரு பிளாக் போடவும்..:))


இப்போது சொல்லுங்கள், இது வறட்டு , வெட்டி வேதாந்தமா அல்லது வாழ்க்கைக்கு  நல் வழி காட்டும் வேதாந்தமா என்று.

https://bhagavatgita.blogspot.com/2019/01/238.html

No comments:

Post a Comment