Tuesday, January 1, 2019

கீதை - 2.31 - ஸ்வதர்மம்

கீதை - 2.31 - ஸ்வதர்மம் 


स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते॥३१॥

ஸ்வத⁴ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|
த⁴ர்ம்யாத்³தி⁴ யுத்³தா⁴ச்ச்²ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||

ஸ்வத⁴ர்மம் = சுய தர்மம்

அபி = அதை நினைத்து , அதனால்

சா = மேலும்

அவேக்ஷ்ய = அவசியம்

ந = இல்லை

விகம்பிதும் = நடுங்குதல் , தடுமாறுதல்

அர்ஹஸி = உனக்குத் தகாது

த⁴ர்ம்யாத்³தி⁴ = தர்மமப் படி

யுத்³தா⁴ச் = யுத்தம் செய்யாமல் இருப்பது

ச்ரேயோ = நல்லது, உயர்ந்தது

அந்யத் = மற்றது

க்ஷத்ரியஸ்ய  = க்ஷத்ரியனின்

ந = இல்லை

வித்³யதே = அங்கே

ஸ்வதர்மத்தை கருதியாவது நீ தடுமாறாமல் இருக்க வேண்டும். தர்மப் படி செய்யும் போரினும் சிறந்தது ஒரு க்ஷத்ரியனுக்கு வேறு ஒன்றும் இல்லை.


படிப்பதற்கு மிகச் சாதரமான ஒரு சுலோகம் போல் இருக்கும் இதன் பின்னால் மாபெரும் உண்மை மறைந்து கிடக்கிறது.

மனித குலத்தின் அனைத்து குழப்பத்துக்கும் இந்த ஒரு சுலோகம் போதும். உங்கள் சிக்கல் அனைத்துக்கும் விடை தருவது இந்த சுலோகம்.

சற்று நிதானமாக , ஆழமாக படியுங்கள். கீதையின் பிரம்மாண்டம் புரியும்.

ஸ்வதர்மம் கருதி நீ தடுமாறாமல் இரு என்கிறான் கண்ணன்.

ஸ்வதர்மம் என்றால் என்ன என்று பக்கம் பக்கமாக உரை எழுதி இருக்கிறார்கள்.

ஸ்வ = சுய, சொந்த
தர்ம = தர்மம் என்றால் செய்யவேண்டிய கடமை.

நாம் இந்த பூமியில் பிறக்கும் போதே நமக்கான கடமையும் பிறந்து விடுகிறது. நாம் செய்ய வேண்டும் என்று சில கடமைகள் காத்து இருக்கின்றன. அந்த கடமைகள் நமக்கு முன்னால் பிறந்து நம் வருகைக்காக காத்து இருக்கும் என்று சொல்வார்கள்.

நம் கடமை அல்லது நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்படி அறிந்து கொள்வது என்று சொல்வதற்கு முன்னால் எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறேன்.

- பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது.

- புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது

- பெருமைக்காக, மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது ஸ்வதர்மம் இல்லை.

- பொருளுக்காக , வயிற்று பிழைப்புகாக செய்வது ஸ்வதர்மம் இல்லை

பின் எது தான் ஸ்வதர்மம்?

எது உங்களுக்கு இயல்பாக வருகிறதோ, எதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு சங்கடமாக இருக்குமோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.

சற்று விரிவாக பார்ப்போம்.

நம் வாழ்வில் நாம் எடுக்கும் முதல் மிகப் பெரிய முடிவு, என்ன படிப்பது என்பது.

அந்த முடிவை நாம் எப்படி எடுக்கிறோம் ?

பெரும்பாலானோரின் வாழ்வில் பெற்றோர் முடிவு செய்து விடுவார்கள். இல்லை என்றால்  நண்பர்கள் முடிவு செய்கிறார்கள்.

அது தவறு. உங்களுக்கு எது பிடிக்குமோ, எதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகுமோ, எதை நீங்கள் உங்களை மறந்து செய்வீர்களோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.

"எனக்கு psychology படிக்க ஆசை. ஆனால், பெற்றோர் இன்ஜினியரிங் படிக்கச் சொன்னார்கள் எனவே இன்ஜினியரிங் படிக்கிறேன் "

இது ஸ்வதர்மம் இல்லை.

உங்கள் ஸ்வதர்மம் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கும். அதை செய்யாவிட்டால் உங்களுக்கு மனதில் ஒரு சலனம், ஒரு  குழப்பம், ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

தெருவில் போகும் போது ஒரு பிச்சைக்காரனை பார்க்கிறீர்கள். அவனுக்கு உதவி செய்ய வேண்டும்  நினைக்கிறீர்கள். அந்த இரக்க குணம் உங்கள் ஸ்வதர்மம். ஒரு வேளை நீங்கள் அவனுக்கு உதவி செய்யாமல் போனீர்கள் என்றால், உங்களுக்குள் ஒரு சின்ன வருத்தம் இருக்கும். "சே, ஒரு அஞ்சு ரூபாயாவது போட்டிருக்கலாம் " என்று மனது அரிக்கும். அது தான் ஸ்வதர்மம்.

பொய் சொல்லிப் பாருங்கள்...ஒரு நடுக்கம் இருக்கும்,  ஒரு பதட்டம் இருக்கும். அது உங்கள் ஸ்வதர்மம் இல்லை. எனவே அதை செய்யக் கூடாது.

கொலை, கொள்ளை, போதைப் பொருள், இலஞ்சம் என்ற அனைத்து தீய செயல்களும் செய்த பின், அல்லது செய்யும் போது ஒரு நடுக்கம், தயக்கம், பயம் இருக்கும். அப்படி இருந்தால் அது உங்கள் ஸ்வதர்மம் இல்லை. அதை செய்யக் கூடாது.

நீங்கள் ஏதாவது பாட்டு பாடிப் பாருங்கள். பாடினால் ஒரு சந்தோஷம் வந்தால், பாடுவது உங்கள் ஸ்வதர்மம். அதை நீங்கள் தொடர்ந்திருந்தால் நல்ல பாடகராக  வந்திருப்பீர்கள்.

வேலைப் பளு, விசா, மனைவியின் நிர்பந்தம், பொருளாதார நெருக்கடி  காரணமாக பெற்றோரை பார்க்க முடியாமல் போய் விடலாம் அல்லது முதியோர் இல்லத்தில் விட வேண்டிய சந்தர்ப்பம் வரலாம். அப்படி செய்யும் போது ஒரு குற்ற உணர்வு இருந்தால், பெற்றோரை காப்பது என்பது உங்கள் ஸ்வதர்மம்.

ஸ்வதர்மத்தை செய்யவில்லை என்றால் வாழ்வு சந்தோஷமாக இருக்காது.

ஸ்வதரமம் அல்லாததை செய்தாலும் சந்தோஷம் இருக்காது.

மகனாக, மகளாக, மாணவனாக, மாணவியாக, கணவனாக, மனைவியாக, குடிமகனாக, பெற்றோராக..நமக்கு பல கடமைகள் இருக்கின்றன. அவை நமது ஸ்வதர்மம்.

ஸ்வதர்மத்தை செய்ய தயங்கவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதில் இருந்து  நாம் நழுவக் கூடாது.

அதை செய்வதில் எவ்வளவு சிக்கல் வந்தாலும், தடங்கல் வந்தாலும் பின் வாங்கக் கூடாது.

ஒரு வீரனாக அர்ஜுனனின் ஸ்வதர்மம் அநீதியை எதிர்த்துப் போரிடுவது. சொந்த ஆசா பாசாங்களுக்காக அந்த ஸ்வதர்மத்தில் இருந்து பின் வாங்க நினைக்கிறான்.

கண்ணன் , அப்படிச் செய்ய கூடாது என்று அர்ஜுனனுக்கும், நமக்கும் அறிவுரை கூறுகிறான்.


உலகில் இவ்வளவு குழப்பங்களுக்கும் , வருத்தங்களுக்கும் காரணம் மக்கள் தங்கள்  ஸ்வதர்மத்தை விட்டு விட்டு மற்றவற்றை செய்வதால்தான்.

அறிவியல் படித்தவன் கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான்.

மருத்துவம் படித்தவன் அரசாங்க வேலையில் இருக்கிறான்.

ஓவியம்,இசை, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள், அதை விட்டு விட்டு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

குரங்குகள் நீந்த முயன்று கொண்டிருக்கின்றன.

மீன்கள் மரம் ஏற நினைக்கின்றன.

குழப்பமும், சிக்கலும், வருத்தமும் வராமல் என்ன செய்யும் ?

தேடுங்கள். உங்கள் ஸ்வதர்மம் என்ன என்று. தயங்காமல் அதை செய்யுங்கள்.

https://bhagavatgita.blogspot.com/2019/01/231.html

3 comments:

  1. Wow, Thanks a lot for excellent explanation. I was searching for this for sometime and got it now! Dhanyawaadh!

    ReplyDelete
  2. Excellent Sir for this explanation. We should live as per SWADHARMA!

    ReplyDelete