Wednesday, January 2, 2019

கீதை - 2.32 - போராட்டம்

கீதை - 2.32 - போராட்டம் 



यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥

யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்| 
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||


யத்³ருச்ச²யா = சந்தர்ப்ப வசத்தால்

சா = மேலும்

உபபந்நம் = கிடைத்தல்

ஸ்வர்க³ த்வாரம் = சொர்க்கத்தின் நுழை வாயில்

அபாவ்ருதம்| = திறந்து இருக்கிறது

ஸுகி²ந: = மகிழ்ந்து இருப்பவனே

க்ஷத்ரியா:  = க்ஷத்ரியா

பார்த² = பார்த்தா

லப⁴ந்தே  = அடைகிறார்கள்

யுத்³தம் = போர்

இத்³ருஸ²ம்  = இந்த மாதிரி

இந்த மாதிரி போர் செய்யும் சந்தர்ப்பம் க்ஷத்ரியர்களுக்கு ஸ்வர்கத்தின் வாயில் போன்றது. அப்படி போரிடுபவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். 


இன்பமாக வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், எப்படி இன்பமாக வாழ்வது என்று தெரியவில்லை.


கீதை அதற்கு வழி காட்டுகிறது. உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமா, இன்பமாக வாழ வேண்டுமா, இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்ததும் ஒரு தரம் படியுங்கள். படித்தால் மட்டும் போதாது அதில் சொன்னவற்றை கடை பிடியுங்கள்.


போர் செய்ய விருப்பமில்லாத அர்ஜுனனை கண்ணன் போர் செய்யச் சொன்னான். அதை அர்ஜுனன் கேட்கிறான் அல்லது கேட்காமல் போகிறான். அதைப் பற்றி நமக்கு என்ன ? அதைப் படிப்பதால் நமக்கு என்ன இலாபம்? நாம் என்ன தேரில் ஏறி நம் உறவினர்களை எதிர்த்துப் போராடப் போகிறோமா ? பின் எதற்கு நாம் கீதையை படிக்க வேண்டும்?


இது ஒரு நல்ல கேள்வி. சந்தேகம்.


போர் செய்ய வேண்டியது அர்ஜுனனின் ஸ்வதர்மம், கடமை என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். போர் செய்ய வாய்ப்பு கிடைத்தது என்பது கடமையை செய்ய கிடைத்த வாய்ப்பு என்று கொள்ள வேண்டும்.


அப்படி என்றால், கடமையை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும்.


அப்படி செய்தால், அது சொர்க்கத்தை தரும்.


இல்லை என்றால் ?


நரகம் தான்.


சுவர்க்கம் , நரகம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீத கற்பனைதான்.


சுவர்க்கம் என்றால் இனிய வாழ்க்கை, இன்பமான வாழ்க்கை.


நம் முன்னால் நாள் தோறும் பல கடமைகள் காத்து கிடக்கின்றன. அர்ஜுனன் , சொந்தங்களை காட்டி கடமையில் இருந்து விலக நினைத்தான்.


நமக்கும் பல காரணங்கள். சோம்பேறித்தனம். சினிமா, whatsapp , youtube , டிவி, நண்பர்களோடு அரட்டை என்று ஆயிரம் காரணங்கள் கடமையை செய்யாமல் இருக்க.


படிக்க, மேலும் கடினமாக உழைக்க, உடற் பயிற்சி செய்ய, கணவன்/மனைவியுடன் அன்பாக பேச, பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க என்று எந்த கடமையை செய்யவும் நேரம் இல்லை.


பின் வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும் ?


காலை எழுந்தவுடன் செய்யவேண்டியவற்றை ஒரு பட்டியல் போடுங்கள். ஒவ்வொன்றாக செய்து முடியுங்கள்.ஒவ்வொரு நாளும் அப்படி செய்யுங்கள். நாளின் முடிவில் ஒரு சில வேலைகள் செய்து முடிக்காமல் இருந்தால், அடுத்த நாள் பட்டியலில் செய்து முடிக்காத வேலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.


அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று.


மாறாக, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால் என்ன ஆகிறது என்று பாருங்கள் ? நரகத்துக்கு வேறு  வழி வேண்டாம். செய்ய வேண்டிய வேலைக்ளை செய்யாமல் இருந்தால் போதும். கட்டாயம் நரகம் கிடைக்கும்.


என்ன, எப்பப்பாரு ஏதாச்சும் ஒரு வேலை. ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு ஓய்வு இல்லை, ஒழிச்சல் இல்லை என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?


கண்ணன் சொல்கிறான், கடமை என்பது ஒரு வாய்ப்பு. opportunity என்று நினைத்துப் பாருங்ககள். ஆஹா, எனக்கு இந்த வேலையை செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். இதை செய்வதன் மூலம் நானும் என் குடும்பமும் சந்தோஷமாக இருக்கப் போகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.  வேலை, கடமை என்பது ஒரு சுமையாகத் தெரியாது. அது ஒரு இனிய  வாய்ப்பாகத் தெரியும்.


மேலும் மேலும் வேலை வேண்டும் என்று கேட்பீர்கள்.


கடமை என்பது, வேலை என்பது ஒரு சுமை என்பது போய் அது ஒரு இனிய விஷயம் என்ற எண்ணம் வரும்.


வேலை செய்வதும் இனிமை. அதில் இருந்து கிடைக்கும் பலனும் இனிமை.


யோசித்துப் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.


சரி தானே ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/232.html

No comments:

Post a Comment