Sunday, January 6, 2019

கீதை - 2.36 - பெரிய துன்பம்

கீதை - 2.36 - பெரிய துன்பம் 


अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्॥३६॥

அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||

அவாச்யவாதா = சொல்லத்தகாத

ச = மேலும்

பஹூந் = பல

வஷ்யந்தி = சொல்லுவார்கள்

தவா = உன்னை

அஹிதா:| = எதிரிகள்

நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்

தவ = உன்

ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை

ததோ = அதை விட

து³:க²தரம் = துன்பமானது

நு = இப்போது

கிம்  = வேறு எது


உன் எதிரிகள் உன் திறமையைப் பற்றி தரக் குறைவாக பேசுவார்கள். அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கிறது?

அன்றாடம் நாம் பல பொருள்களை பார்க்கிறோம். துணிமணி, நகை, நட்டு, மேஜை, நாற்காலி, டிவி, சாப்பாடு வகைகள் என்று எவ்வளவோ பார்க்கிறோம்.

ஒரு பொருள் என்பது என்ன?

உதாரணமாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம்.

மல்லிகைப் பூ என்றால் என்ன ?

அது மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்தில் இருக்கும், நல்ல மணம் இருக்கும், அதன் காம்பு பச்சை நிறத்தில் இருக்கும், சின்னதாக இருக்கும் என்று அதன் குணங்களை சொல்லுவோம்.

சரி. அதில் கொஞ்சம் குணங்களை மாற்றி பார்ப்போம்.

கருப்பாக இருக்கும். பெரிதாக இருக்கும். கரடு முரடாக இருக்கும். நாற்றம்  பக்கத்தில்  போக முடியாது என்று இருந்தால், அதை மல்லிகை என்று சொல்லுவோமா ?

மாட்டோம் அல்லவா ?

எனவே, எந்த ஒரு பொருளையும் நிர்ணயம் செய்வது அதன் குணங்கள் தான் என்று  புரிகிறது அல்லவா ?

இட்லி என்றால் இப்படி இருக்கும். ஐஸ் கிரீம் என்றால் வேறு சில குணங்கள் இருக்கும்.

பொருள்கள் என்பது குணங்களின் தொகுப்பு அல்லவா ?

பொருள்கள் மட்டும் அல்ல, மனிதர்களும் அப்படித்தான்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ? உங்கள் குணங்களை பட்டியல் இட்டால் தான் நீங்கள் யார் என்று தெரியும்.

நீங்கள் படித்த படிப்பு, வேலை, ஆணா பெண்ணா, உயரமா குள்ளமா, கறுப்பா சிவப்பா, அன்பானவரா, முணுக்கென்றால் கோபம் வருமா..என்று பல குணங்களின் தொகுதிதான் ஒவ்வொருவரும்.

அந்த குணங்கள் மாறிப் போனால், ஆள் மாறிப் போவான் ?

"அவனா இப்படிச் செய்தான்...இருக்காது...அவன் அப்படிப் பட்ட ஆள் இல்லை " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

"அவன் அப்படிச் செய்யக் கூடிய ஆள் தான்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உங்களை நிறுவுவது உங்களின் குணம்/திறமை. அந்த திறமையை அல்லது குணத்தை மாற்றி போட்டால் நீங்கள் , நீங்களாக இருக்க மாட்டீர்கள். ஆள் அடையாளம் இல்லாமல் போய் விடும். உங்களை யார் என்று அடையாளம் காட்ட முடியாமல் போய் விடும்.

அதை விட பெரிய துன்பம் கிடையாது என்கிறான் கண்ணன்.

"நீ எல்லாம் ஒரு அப்பாவா/அம்மாவா/கணவனா/மனைவியா?" என்ற சொல் உங்களை நோக்கி கூறப் பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதை விட பெரிய துன்பம் இருக்குமா ?

எது உங்களை நிலை நிறுத்துகிறதோ, அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

அது தான் உங்கள் அடையாளம். உங்கள் விலாசம்.

அதை நழுவ விட்டால், துன்பம் தான்.

யோசித்துப் பாருங்கள்.

https://bhagavatgita.blogspot.com/2019/01/236.html

No comments:

Post a Comment