பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி
एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥
ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||
ஏஷா = இதை
தே = உனக்கு
அபிஹிதா = கூறினேன்
ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி
புத்தி = அறிவு
யோகே = யோகத்தில்
து = நீ
இமாம் = இந்த
ஸ்²ருணு| = கேட்பாய்
புத்த்யா = புத்தியுடன்
யுக்தோ = சேர்ந்து
யயா = அதன் மூலம்
பார்த = பார்த்தனே
கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்
ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்
இதுவரை சாங்கிய முறைப்படி உனக்கு கூறினேன். இனி, யோக மார்கத்தை கூறுகிறேன். இதை அறிந்தால், உன் கர்ம வினைகள் உன்னை விட்டு விலகும்.
சாங்கிய முறை என்றால் என்ன ?
சாங்கிய முறை என்றால் என்ன என்று அறிந்து கொள்வவது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு அப்புறம் வருவோம்.
நாம் உண்மையை எப்படி அறிந்து கொள்கிறோம்? அல்லது எப்படி அறிந்து கொள்ளலாம்?
உண்மையை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றிற்கு பிரமாணங்கள் என்று பெயர். சுருக்கமாக சொல்வது என்றால் வழிகள்.
முதலாவது, காட்சி பிராமணம். (பிரதிக்க்ஷம் அல்லது perception ). நம் கண்ணால் கண்டு அறிவது. கண் என்றால் கண் மட்டும் அல்ல. நம் புலன்கள் மூலம் அறிவது.
ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் அது சூடாகி விடும். இந்த உண்மையை நாம் எப்படி அறிந்து கொண்டோம்? கண்ணால் பார்த்தால் கொதிப்பது தெரியும். அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் கழித்து அதில் ஆவி அடங்கி விடும். இப்போது கண்ணால் பார்த்தால் சூடு தெரியாது. தொட்டுப் பார்த்தால் தெரியும். நாம் இன்னொரு உண்மையை அறிகிறோம். அடுப்பில் இருந்து இறக்கிய பின்னும் சிறிது நேரம் சூடு இருக்கும் என்று .
இப்படி, பல விஷயங்களை நாம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம். படிப்பு என்பது நமக்கு நல்ல வாழ்வைத் தரும், பிள்ளைகள் நம்மை கடைசி காலத்தில் காப்பாற்றுவார்கள். அரசியல்வாதிகள் நல்லவர்கள்/கெட்டவர்கள், சிக்கனம் ஒரு நல்ல குணம் என்று பல விஷயங்களை நாம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம்.
இது ஒரு ஒரு வழி.
அடுத்தது, அனுமானம். அனுமான பிரமாணம். நமக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டால் நம் பழைய அனுபவங்களைக் கொண்டு நாம் சில உண்மைகளை அறிந்து கொள்கிறோம். உதாரணமாக, தூரத்தில் மலையில் புகை தெரிகிறது. அங்கே தீ இருக்கிறது என்று அனுமானத்தின் அறிகிறோம். நாம் நேரடியாக பார்க்கவில்லை. வீட்டுக்கு வருகிறோம். மனைவி முகம் வாடி இருக்கிறது. அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அறிந்து கொள்ளலாம். இது அனுமானம்.
அனுபவங்களின் நீட்சி.
மூன்றாவது, ஆகம பிரமாணம் அல்லது சப்த பிரமாணம் என்று சொல்லுவார்கள். பெரியவர்கள், ஞானிகள், சான்றோர் சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது. நமக்கு நேரடி புலன் அறிவு இல்லை, அனுமானம் செய்யவும் முடியாது என்கிற போது நம்மை விட அறிவில் முதிர்ந்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது. "நேரா போகாதீங்க. அங்க சாலை சரியா இல்லை. இந்தப் பக்கமா சுத்திக் கொண்டு போங்கள் " என்று நாம் புதிதாக ஒரு ஊருக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒருவர் வழியில் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது உண்மை என்றுதானே நாம் எடுத்துக் கொள்வோம். நேராக நாம் அந்த மோசமான சாலையை பார்க்கவில்லை. அனுமானம் செய்யவும் முடியாது என்கிறபோது அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது ஒரு வழியில் உண்மையை அறிய உதவும் ஒரு சாதனம்.
இன்னும் பல வழிகள் உள்ளன.
ஆனால், சாங்கிய முறை இந்த மூன்றை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறது.
மேலும், சாங்கிய முறை கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்களுக்கு முக்குணங்கள் உண்டு என்று சொல்கிறது (சாத்வீகம், ராஜஸம், தாமசம்).
இப்படி, மிக ஆழமாக, மனிதனின் மன நிலையை (psychology ), தர்க்கம் (logic ), தத்துவம் (philosophy ), கடவுள், கர்மா, மறு பிறப்பு, பாவ புண்ணியம், உண்மையை அறியும் வழிகள் என்று ஒரு பெரிய தத்துவத்தை முன்னிறுத்தியது சாங்கியம்.
மிக மிக அறிவியல் பூர்வமானது. very scientific and logical.
சாங்கிய முறையை புரிந்து கொள்ள தீவிர முயற்சி வேண்டும். மிக ஆழமான சாஸ்திரம்.
எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நேரமும் இல்லை. அறிவும் கிடையாது. முயற்சியும் குறைவு.
எனவே, சாங்கிய வழியை பின் பற்ற முடியாதவர்கள் வேறு ஏதேதோ வழிகளை பின் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்து சமயம் ஒரு வழி முறை இல்லாமல், கரை இல்லாத ஆறு போல பிரிந்து கிடந்தது.
இங்குதான் கீதை வருகிறது.
கீதை வந்த சமயத்தில் நாட்டில் இருந்த அனைத்து வழிகளையும் கீதை ஒன்று சேர்த்தது.
சாங்கிய முறை, யோக முறை, அதில் பக்தி, கர்ம , ஞான யோகம் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்தது கீதை.
குழம்பிக் கிடந்த ஒரு பெரிய கும்பலை வழி நடத்தியது கீதை.
எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதுதான் வழி என்று சொல்லியது.
உதாரணமாக, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம், சீன மருத்துவம், தமிழ் மருத்துவம் , யுனானி என்று மருத்துவ முறைகள் பலவாக பிரிந்து கிடக்கிறது. மக்களுக்கு எது சரி , எது தவறு என்று புரியவில்லை. இவற்றை ஒன்று சேர்த்து இதுக்கு, இது சரி என்று கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா?
அந்த வேலையை செய்தது கீதை. யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு பெரிய வேலை என்று. அனைத்து தத்துவங்களையும் ஒரு புத்தகத்தில் அடக்குவது என்றால் எளிதா? கீதை அதைச் செய்தது. கீதையை படிக்கும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீதையில் பல மார்க்கங்களை பற்றி காண இருக்கிறோம். என்னடா இது கண்ணன் மாத்தி மாத்தி சொல்கிறானே என்று நினைக்கக் கூடாது. பல வழிகளின் சங்கமம் கீதை. இது ஒரு magnum opus of philosophy.
இது வரை சாங்கிய முறைப்படி சொன்னேன். இனி, யோக மார்கத்தைப் பற்றி கூறுகிறேன் என்று கூறுகிறான் கண்ணன்.
என்னதான் சொல்லுகிறான் என்று கேட்போமே.
https://bhagavatgita.blogspot.com/2019/01/239.html
No comments:
Post a Comment