Friday, January 4, 2019

கீதை - 2.35 - காரணமும் காரியமும்

கீதை - 2.35 - காரணமும் காரியமும் 



भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्॥३५॥

ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||

ப⁴யாத் = பயத்தினால்

ரணாது = போர்க்களத்தை

உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று

மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்

த்வாம் = உன்னை

மஹாரதா²:|  = மஹா இரதர்கள்


யேஷாம் = அவர்களின்

ச = மேலும்

த்வம் = உன்னை

பஹுமத் = பெருமை மிக்க

பூத்வா = செய்த பின்

யாஸ்யஸி = நீ அடைவாய்

லாக⁴வம் = சிறுமை

பயத்தினால் நீ போரை விட்டு விலகி விட்டதாக இந்த மஹா இரதர்கள் கருதுவார்கள். அவர்களின் நன் மதிப்பை பெற்ற நீ , இதனால் சிறுமை அடைவாய்.

ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  ஆனால், உலகம் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாது. கடமை தவறிய செயலை மட்டுமே பார்க்கும்.

உதாரணமாக,  தேர்வுக்கு முன்னால் உடல் நிலை மிக மோசமாக போய் இருக்கலாம், வீட்டில் நெருங்கிய உறவினர் யாராவது தவறிப் போய் இருக்கலாம். அதனால் தேர்வை சரியாகி எழுத முடியாமல் , அதில் தவறியோ அல்லது மிகக் குறைவான மதிப்பெண்ணோ வாங்கி இருக்கலாம்.

உலகம் அதை எல்லாம் கேட்காது. சரியாக படிக்கவில்லை, அதனால் நல்ல மதிப்பெண்  வாங்கவில்லை. அல்லது , அறிவு போதவில்லை எனவே மதிப்பெண் வாங்கவில்லை  என்று தான் சொல்லும்.

கடமை தவறியதற்கு காரணங்களை இந்த உலகம் கேட்டுக் கொண்டு இருக்காது.

அர்ஜுனன் போர் செய்ய மறுத்தது உறவினர்கள் மேல் உள்ள பாசத்தால், ஆசிரியர் மேல் உள்ள  மரியாதையால். ஆனால், உலகம் அதை எல்லாம் கவனிக்காது. கோழை, பயந்தாங்குள்ளி அதனால் தான் போர் செய்யவில்லை என்று தான்  தூற்றும். "அடடா, பாசக்கார பயலா இருக்கானே" என்று சொல்லாது.

கடமையை செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தையும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது.

கடமையை செய்தே ஆக வேண்டும். அதில் தவறினால், பழிச் சொல் வரும். "ஐயோ பாவம்  இந்த இந்த காரணங்களால் கடமையை செய்ய முடியவில்லை. பரவாயில்லை" என்று உலகம் ஒரு போதும் மன்னிக்காது.

கடமையை செய்யவில்லை என்றால் பழிச் சொல்லை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அர்ஜுனனுக்கே இந்தப் பாடு என்றால் நாம் எம்மாத்திரம் ?

சரிதானே?

https://bhagavatgita.blogspot.com/2019/01/235.html

No comments:

Post a Comment