Thursday, January 3, 2019

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால்

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால் 



अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि॥३३॥

அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||


அத = மேலும்

சேத் = ஆனால்

த்வம் = நீ

இமம் = இந்த

த⁴ர்ம்யம் = சரியான

ஸங்க்³ராமம் = படை, யுத்தம்

ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
 |
தத: = அதன் பின்

ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம்

கீர்திம் = புகழ்

ச = மேலும்

ஹித்வா = விட்டபின்

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

||2-33||


நீ இந்த தர்ம யுத்தத்தை செய்யவில்லை என்றால் உன் ஸ்வதர்மத்தையும் புகழையும் அழித்த பாவத்தை அடைவாய் 

எப்போதாவது நமக்கு துன்பம் வந்தால், நாம் யார் யாரையோ, எது எதையோ நொந்து கொள்கிறோம். 

நம் பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர்கள், உயர் அதிகாரி என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம். சில சமயம் கடவுளை கூட நிந்திக்கிறோம். விதியின் மேல் பழி போடுகிறோம். 

பின் எப்படியோ தத்தி தள்ளாடி அந்தத் துன்பத்தை விட்டு கரை கிடக்கிறோம்.

அந்தத் துன்பம் ஏன் வந்தது என்று நாம் என்றுமே சரியாக உணர்ந்து கொள்வது இல்லை. அது மட்டும் அல்ல, இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் அறிந்து கொள்வதில்லை. 

துன்பம் ஏன் வருகிறது ?

ஸ்வதர்மத்தை கை விடுவதால் துன்பம் வருகிறது. 

நம் கடமையை நாம் சரியாக செய்யாவிட்டால் துன்பம் கட்டாயம் வரும். 

நமக்கு துன்பம் வந்து விட்டால், எங்கோ, எப்போதோ நாம் கடமை தவறி இருக்கிறோம் என்று  உணர வேண்டும். 

யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த ஒவ்வொரு துன்பத்துக்கும் அடி நாதம்  செய்யத் தவறிய கடமைகளாகத்தான் இருக்கும். 

எப்போதோ வகுப்பை புறம் தள்ளி விட்டு சினிமாவுக்கு போனது, அதனால் மதிப்பெண் குறைந்தது, அதனால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வேலை கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வருமானம் இல்லாமல் போனது  என்று இன்றைய வறுமைக்குக் காரணம் முன்பு தவறிய கடமை. 

"ஆ" என்று வாயைத் திறக்கச் சொல்லி அதற்குள் ட்ரில் பண்ணி, ஊசியை வைத்து குத்தி, பல்லை பிடுங்கும் வலிக்கு பின்னால் இருப்பது சாப்பிட்ட பின் வாய்  கொப்பளிக்க வேண்டும், படுக்கப் போகும் முன் பல் விளக்க வேண்டும் என்ற  கடையில் இருந்து தவறிய குற்றமாக இருக்கும். 

ஆழமாக யோசித்தால் தெரியும் ஒவ்வொரு துன்பத்துக்கு பின்னாலும் ஒரு தவறிய  கடமை இருக்கும். 

சரி. அது போகட்டும்.  அதை இப்போது ஒன்றும் செய்ய முடியாது. 

இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

மிக எளிதான வழி - இனி மேல் கடமை தவறக் கூடாது. 

ஸ்வதர்மத்தை விட்டு விடக் கூடாது. 

அப்படி விட்டால், புகழ் அழியும், துன்பம் வரும்.

சரியாத்தான் இருக்கும் போல இருக்குல ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/233.html


No comments:

Post a Comment