கீதை - 2.34 - ஸ்வதர்மமும் இகழும்
अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते॥३४॥
அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||
அகீர்திம் - கீர்த்தி என்றால் புகழ். அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்
சா - மேலும்
அபி - அது மட்டும் அல்லாமல்
பூ⁴தாநி - மக்கள்
கத²யிஷ்யந்தி - கூறுவார்கள்
தே - உன்னை
அவ்யயாம்| - நீண்ட காலம் இருக்கக் கூடிய
ஸம்பா⁴விதஸ்ய - புகழுடைய
சா - மேலும்
அகீர்தி - இகழ்
மரணாத³தி - மரணத்தை விட
அரிச்யதே = கொடுமையானது
இந்த உலகம் உன்னை தூற்றும். புகழ் பெற்ற நீ, அடையப் போகும் இகழ், மரணத்தை விட கொடியது.
நாம் , நமது கடமையை, ஸ்வதர்மத்தை செய்யாவிட்டால் நமக்குத் தானே துன்பம். பரவாயில்லை. நான் அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் கடமையை செய்ய மாட்டேன் என்று சிலர் இருக்கலாம்.
எனக்கு என்ன, ஏழேழு தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. எதுக்கு நான் கஷ்டப்படனும்? பேசாம உட்கார்ந்து சாப்பிடலாமே என்று நினைக்கலாம்.
நம் ஸ்வதர்மம் என்பது நம்மோடு மட்டும் முடிந்து போகக் கூடிய ஒன்று அல்ல. அதில் வரும் இலாபமோ நட்டமோ நம்மை மட்டும் பாதிப்பது அல்ல. அது மற்றவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக இந்த சமுதாயத்தை பாதிக்கிறது.
வண்டி ஓட்ட வேண்டிய ஓட்டுநர், எனக்கு சோர்வாக இருக்கிறது, தூக்கம் வருகிறது என்று வண்டியை ஓட்டும் போது தூங்கினால் என்ன ஆகும். வண்டியில் பிரயாணம் செய்பவர் அனைவரும் போய் சேர்ந்து விடுவார்கள் அல்லவா.
ஒரு ஆசிரியர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கெட்டுப் போய்வ் விடுவார்கள்
மருத்துவர் தன் கடமையை செய்யவில்லை என்றால், நோயாளி மரித்துப் போவான்.
இப்படி நம் ஸ்வதர்மம் இந்த உலகோடு சேர்ந்து இருக்கிறது.
நாம் நம் கடமைகளில் இருந்து விலகினால் அது நம்மை மட்டும் அல்ல உலகையும் பாதிக்கும்.
அது மட்டும் அல்ல, நாம் இப்போது செய்யும் ஒரு தவறு வரும் காலத்தில் யார் யாரையெல்லாமோ பாதிக்கும்.
அதன் விளைவுகள் உடனடியாக இருக்காது. பின் எப்போதாவது வரும்.
எனவேதான் கண்ணன் சொல்கிறான்
" புகழ் போய் இகழ் வருவது மட்டும் அல்ல, வருங்கால சந்ததிகளும் உன்னை இகழும் "
என்று.
ஸ்வதர்மம் நம்மை இந்த உலகோடு இணைப்பது.
அதை சரியாகச் செய்தால் இந்த உலகம் கொண்டாடும். இல்லை என்றால் தூற்றும்.
ஸ்வதர்மம் பற்றி ஆழமாக சிந்தியுங்கள்.
https://bhagavatgita.blogspot.com/2019/01/234.html
No comments:
Post a Comment