34. ஆத்ம ஞானமும் கர்ம யோகமும்
Other is the hell என்றார் பிரஞ்சு ஞானியான Jean Paul Satre .
மற்றது தான் நரகம் என்றால் என்ன ? நாம் எப்போதும் இருப்பதை கொண்டு திருப்தி அடைவது கிடையாது. இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றிற்க்காக (Other) ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொத்து வேண்டும், இன்னும் படிப்பு வேண்டும், இன்னும் அழகு வேண்டும், மெலிய வேண்டும், நிறைய பேர் மதிக்க வேண்டும்...நம்மை நாம் அங்கீகரிப்பது இல்லை. நம்மை நாமே மறுதலித்து போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த வாழ்க்கையை நமக்கும் நரகமாக, மற்றவர்களுக்கும் நரகமாக மாற்றி கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பது ஒரே இறை சக்திதான் என்ற அறிவு பிறக்கும் போது, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவும் எண்ணம் மறைகிறது.
ஆத்ம ஞானம் பிறந்தால் செயல் நிறைவு பெறுகிறது. செயலற்ற இடம் பிறக்கிறது.
இதை கொஞ்சம் மாற்றிப் போட்டால் ஆத்ம ஞானம் பிறக்காவிட்டால், செயல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
ஞானம் பிறக்காவிட்டால் கர்மம் தொடரும். கர்ம வினைகள் தொடரும்.
அர்ஜுனனும் சரி, துரியோதனனும் சரி அந்த ஞானத்தை அடையாதவர்கள். அவர்கள் செயலில் இருந்து விலக முடியாது.
ஆத்ம ஞானம் இல்லாத ஒருவன் செயலை துறந்தால் அது ஒன்று கோழைத்தனமாக இருக்கும் அல்லது சோம்பேறித்தனமாக இருக்கும்.
ஞானம் அடைவது வரை கர்மம் தொடரும் என்றால், அந்த கர்மத்தை எப்படி செய்வது. எது தவறு, எது சரி என்று எப்படி அறிந்து கொள்வது ?
யுத்தம் சரியா ? தவறா ? கொல்வது சரியா ? தவறா ?
வினை தவிர்க்க முடியாது என்று ஆனா பின், சரியான வினையை எப்படி தேர்ந்தெடுப்பது ?
ஆத்ம ஞானம் அவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று தெரியவில்லை. அதுவரை என்ன செய்வது ?
அதற்க்கும் கீதை வழி வகுக்கிறது . எதை செய்வது, எப்படி செய்வது என்பதற்கு கர்ம யோகத்தில் விடை தருகிறது கீதை.
ஞானம் யோகத்தை தொடர்ந்து வருவது கர்ம யோகம்.
கர்ம யோகத்திற்கு போவதற்கு முன்னால், இன்னும் கொஞ்ச ஸ்லோகங்கள் பாக்கி இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு கர்ம யோகத்திற்கு போவோம்.
No comments:
Post a Comment