Friday, May 17, 2013

20 - கீதை - ஆத்மா - ஒரு அறிமுகம்


20 - கீதை - ஆத்மா - ஒரு அறிமுகம்

பொருள்களை பற்றி ஆராய புகுந்த அறிவியல், உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதை தேடிக் கொண்டு இருக்கிறது.

முதலில் அது அணு  என்று நினைத்தது.

பின் அது அல்ல, அதையும் தாண்டி ப்ரோட்டான், neutron, எலெக்ட்ரான்  என்று நினைத்தது.

இன்னும் கொஞ்சம் உள்ளே போய் , போசான் , quark , என்று போய்க் கொண்டிருக்கிறது.

அனைத்து பொருள்களும் ஏதோ ஒரு சில துகள்களால் ஆனது என்று  இயற்பியல் கூறுகிறது.

அதேபோல், அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒரு அடிப்படை கட்டமைப்பில் இருந்து வருவதாக உயிரியியல் கண்டு தெளிந்தது.

 அதை செல் என்று சொல்கிறது இன்னும் கொஞ்சம் உள்ளே போய்  nucleus, DNA , RNA  என்ற அடிப்படை உயிர் துகள்களால் ஆனது என்று சொல்கிறது.

அத்தனை இசைக்கும் சப்த ஸ்வரங்களே அடிப்படை.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அடி நாதமாய் ஏதோ ஒன்று இருக்கிறது.

இத்தனை ஜீவ  இராசிகளுக்கும் அடிப்படை ஆத்மா என்ற ஒன்று என்று கிருஷ்ணன் தன்  போதனையை தொடங்குகிறான்

பார்த்தா, நீ துயர் படத் தகாதவர்கள்  பொருட்டு துயர் படுகிறாய். பெரிய ஞானி போல் பேசுகிறாய். அறிவுள்ள எவனும் இறந்தவர்களுகக்காகவும் , இருப்பவர்களுக்காகவும்    துயரம் அடைய மாட்டான். 

நீயும், நானும் இங்குள்ள மற்ற எல்லோரும் இதுவரை இல்லாமல் இருந்து இப்போது திடீரென்று முளைத்து விடவில்லை. இனிமேலும் அவர்கள் ஒன்றுமில்லாமல் காணமல் போகப் போவதும் இல்லை.

எப்படி இந்த உடல் பிள்ளை பிராயம், இளமை, முதுமை என்று மாறிக் கொண்டே இருக்கிறதோ, அது போல ஆத்மாவும் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்கு மாறிக் கொண்டே இருக்கும். வீரன் இதை எல்லாம் நினைத்து கலங்க மாட்டான். 

குளிரும் வெப்பமும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீ இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும். 

இன்பமும் துன்பமும் வேறல்ல, அவை ஒன்று தான் என்று நினைப்பவனே தீரன் அவன் சாகா வரம் பெற்றவன் 

என்று கிருஷ்ணன் சொல்லிக் கொண்டு போகிறான்.

அர்ஜுனன் கேட்டது ஒன்று. கிருஷ்ணன் சொன்னது மற்றொன்று

அர்ஜுனனின் குழப்பம் உறவினர்களை எப்படி கொல்வது , அப்படி கொன்றால் குலம்  அழியும், குல தர்மங்கள் நாசமாகும் , எனக்கு நரகம் கிடைக்கும், அதில் ஒரு சந்தோஷமும் இல்லை, நான் இந்த யுத்தம் செய்ய மாட்டேன்  என்று கூறிக் கொண்டு போகிறான்.

ஆனால் கிருஷ்ணனோ ஆத்மா , அது இது என்று சொல்லிக் கொண்டு போகிறான்.

ஏதோ இருவரும் தனித்தனியே பேசிக் கொள்வது மாதிரி இருக்குல ?

அர்ஜுனன் கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணனின் விடை தான் என்ன ?

மேலும் பார்ப்போம் .

No comments:

Post a Comment