Thursday, May 23, 2013

32. ஆத்ம ஞானம் - செயல் அடங்க


32. ஆத்ம ஞானம் - செயல் அடங்க 


அர்ஜுனா, எவன் ஒருவன் ஆத்மா அழிவற்றது , பிறப்பு அற்றது என்று அறிந்து கொண்டானோ, அவன் எப்படி ஆத்மாவை அழிக்க நினைப்பான் ? ஒரு அழிவற்ற ஆத்மா, இன்னொரு ஆத்மாவை எப்படி அழிக்க முடியும் ?

கொல்வது கொல்லப்படுவது என்று இரண்டு மட்டும் அல்ல...எல்லாமே ஆத்மாதான் என்று அறிந்து கொண்டால் வேறு எதுவுமே செய்ய முடியாது.

ஆத்மா ஞானம் அடையும்போது செயல் என்பது நின்று விடும்.    ஒரு செயலும் இல்லாமல் இருக்க முடியுமா ?

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்    தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்        தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.

என்பார் அருணகிரிநாதர். செயல் மாண்டு அடங்கிய பின், புத்தி உருகி பெருகி, புவனம் எல்லாம் நிறைந்து ஆனந்தம் கரை புரண்டு ஓடியதாகச் சொல்கிறார்.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலாம் என்று பத்ரகிரியார் புலம்புகிறார்.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே
அயல்மாண்ட டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. என்பார் மணிவாசகர்.

ஆத்மா ஞானம் வரும் போது, செயல் அடங்கும். கொல்வது, கொல்லப்படுவது மட்டும் அல்ல, எல்லா செயல்களும் அடங்கும்.

சரி, ஆத்மா ஞானம் என்றால் என்ன ? அதை அடைந்தால் எப்படி செயல் அடங்கும் ?

No comments:

Post a Comment