Friday, May 10, 2013

17. கீதை - 2.2 - 2.3 - இது என்ன பேடித்தனம்?


கீதை - 2.2 - 2.3 - இது என்ன பேடித்தனம்?


முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் சொல்வதை மிகப் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான் கிருஷ்ணன். நடுவில் ஒரு வார்த்தை பேசவில்லை. இடை மறிக்கவில்லை. பேசட்டும், மனத்தில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் வெளியே கொண்டு வரட்டும் என்று காத்திருக்கிறான். 

அனைத்தையும் கொட்டி தீர்த்த பின், அர்ஜுனன் சோர்ந்து, நீர் மல்கும் விழிகளோடு தேரில் அமர்ந்து விடுகிறான். 

அர்ஜுனன் சொல்லியதின் சாராம்சம் என்ன - உறவினர்களை கொல்ல முடியாது. கொன்றால் பாவம். அவர்களை கொன்ற பின் நான் சதோஷமாக இருக்க மாட்டேன். அவ்வளவுதான். 

அர்ஜுனன் போருக்கு எதிரி இல்லை. எதிரில் இருப்பவர்கள் உறவினர்களாக இல்லாவிட்டால் அவர்களை கொல்லுவதில் அவனுக்கு ஒரு தடையும் இல்லை. உறவு தான் நடுவில் நிற்கிறது. 

கிருஷ்ணன் கேட்கிறான் - "இந்த உள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் ? இது உன்னை போன்ற ஆரியனுக்குத் தகாது. இந்த சோர்வினால் உனக்கு அபகீர்த்தி விழையும். நீ சொர்கத்தை அடைய மாட்டாய். இந்த பேடித் தன்மையை விடு. மனச் சோர்வை விட்டு எழுந்து நில், பகைவர்களை சுடுவோனே "
என்று 2 மற்றும் 3 வது சுலோகங்களில் கூறுகிறான். 

வாழ்க்கையில் சவால்கள், பிரச்சனைகள் வரும் போது நாம் பொதுவாக என்ன நினைப்போம் -  முடிந்தால் எதிர்த்து நின்று போராடுவோம், இல்லையென்றால் அந்த பிரச்சனையை விட்டு ஓடி விட நினைப்போம் (Fight or Flight) . 

இப்போது அர்ஜுனன் ஓடி விட நினைக்கிறான். 

பிரச்னையை கண்டு ஓடி ஒளிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் அடைந்ததாக வரலாறே இல்லை. 

"சரி அர்ஜுனா, நீ சொலுவது சரிதான்....உன் பாட்டனையும், குருவையும், உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று வரும் வெற்றியில் என்ன சந்தோஷம் இருக்க முடியும், வா, நாம் வீட்டுக்குப் போகலாம் " என்று கண்ணன் சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று அவனே அர்ஜுனனுக்கு உணர்த்துகிறான். 

அப்படி நீ சோர்ந்து போய் இருந்து விட்டால் உனக்கு அபகீர்த்தி வரும் என்கிறான்.

ஒரு வேளை அர்ஜுனன், பரவாயில்லை, எனக்கு அபகீர்த்தி வந்தாலும், உறவினர்களையும், மற்றவர்களையும் கொல்லாத புண்ணியத்தால் எனக்கு சொர்க்கம் கிடைக்குமே என்று அர்ஜுனன் நினைக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல், " உனக்கு சொர்கமும் கிடைக்காது" என்று சொல்கிறான். 

இது ஒரு பேடித்தனம் என்கிறான். ஏன் ?

ஆண் என்றால் தைரியம், வீரம், எல்லாம் இருக்க வேண்டும்.
பெண் என்றால் கனிவு, அன்பு, காதல், பாசம் இருக்க வேண்டும்.

அர்ஜுனன் சண்டை இட மாட்டேன் என்று சொன்னது போர் கொடிய செயல் என்ற கருணையால் அல்ல. துரோணரும், பீஷ்மரும் இல்லாமல் இருந்திருந்தால் மற்றவர்களை கொல்ல அவன் தயார் தான். உறவு அவனை குழப்புகிறது. சண்டை இடும் வீரம் இருக்கிறது, சண்டை இட முடியாமல் மனக் குழப்பமும் இருக்கிறது. 

எனவே கிருஷ்ணன், " இது என்ன பேடித் தனம் " என்று அவனை சாடுகிறான். 

No comments:

Post a Comment