22 - கீதை - உங்கள் முடிவை நீங்களே எடுங்கள்
நாம் சில சமயம் காரணங்களை அலசி ஆராய்ந்து பின் ஒரு முடிவுக்கு வருவோம்.
ஆனால் பலசமயம் முதலில் முடிவை எடுத்து விட்டு பின் காரணங்களை கொண்டு வருவோம்.
ஒரு வீடு வாங்குவது என்று முடிவு செய்து விட்டால் அதில் உள்ள நல்ல அம்சங்கள் மட்டும் நமக்குத் தெரியும். அதுவே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் அதில் உள்ள குறைகள் மட்டும் தெரியும்.
முதலில் முடிவு பின் ஆராய்ச்சி.
அர்ஜுனன் முதலில் போர் என்று முடிவு செய்து விட்டான். படை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து விட்டான்.
வந்த பின் குழப்பம். சண்டை இடுவது இல்லை என்று முடிவு செய்து விட்டான். அதற்க்கு ஆயிரம் காரணம் கூறுகிறான்...உறவினர்கள், குரு, பிதாமகர், குலம் அழியும், பெண்கள் முறை தவறுவார்கள், பித்ருகள் பிண்டம் பெற மாட்டார்கள் என்று காரணங்களை அடுக்குகிறான்.
இதெல்லாம் முன்னாலேயே தெரியாதா என்றால் - தெரியும்.
இதெல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்றால் - தெரியும்.
பின் எதற்கு இந்த புலம்பல் ?
அர்ஜுனனுக்கு தான் எடுத்த முடிவிற்கு ஆதாரம் வேண்டும். ஒரு வேளை கிருஷ்ணன் போர் வேண்டாம் சொல்லி விட்டால், கிருஷ்ணனே சொல்லி விட்டான் என்று கிருஷ்ணன் மேல் பழியையை போட்டு விடலாம்.
இல்லை போர் செய் என்று கிருஷ்ணன் சொல்லி விட்டால், அந்த பழி எல்லாவற்றையும் கிருஷ்ணன் மேல் போட்டு விடலாம்.
அர்ஜுனன் எந்த முடிவையும் எடுக்கத் தயாராக இல்லை.
கிருஷ்ணா நான் உன் சீடன். நீ எனக்கு கட்டளை இடு என்று சொல்லிவிட்டு தேர் தட்டில் உட்கார்ந்து விட்டான்.
கிருஷ்ணன் இதற்க்கெல்லாம் மசிகிற ஆள் இல்லை.
அர்ஜுனா, நீ சண்டை போடு என்றோ, வீட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. 700 சுலோகங்களில் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணுகிறான். அர்ஜுனனே முடிவு எடுக்க வேண்டும் என்று.
No comments:
Post a Comment