Thursday, May 23, 2013

29 - நான் என்பது என் உடலா ? ஆத்மாவா ?


29 -  நான் என்பது என் உடலா ? ஆத்மாவா ?



நாம் காணும் இந்த உடல்கள் அனைத்துமே கண்ணால் காண முடியாததும், அழிவற்றதும் அறிய இயலாததும் ஆன ஆத்மாவிற்கு உரிமையானது. இந்த உடல்கள் அவற்றின் கர்ம பலன் முடிந்தவுடன் அவை அழிந்துவிடும். அதனால் இவற்றை கண்டு நீ கவலைப் படாமல் யுத்தம் செய்வாயாக.

இந்த சுலோகம் சற்று கடினமானது மற்றும் சர்ச்சைக்கு இடமளிப்பது.

ஆத்மா அறிய இயலாதது என்பது இந்த சுலோகத்தின் முக்கியமான பகுதி. அறிய முடியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும். என்ன செய்தாலும் அதை அறிய முடியாது என்றால், பின் ஏன் மெனக்கட வேண்டும்.

ஆத்மாவை அறிந்து கொள்ளுதல் என்றால் என்ன ? யார் அறிந்து கொள்கிறார்கள் இங்கே ? இந்த உடலா ? இந்த உடலா ஆத்மாவை அறிந்து கொள்ளும் ? அல்லது ஆத்மாவே தன்னை தானே அறிந்து கொள்ளுதலா ? ஆத்மாவிற்கு தான் யார் என்று தெரியாதா ?

ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

முதலில் அடிப்படையான ஒரு கேள்வி. நான் யார் ? நான் என்பது உடலா அல்லது ஆத்மாவா ? நான் என்பது வெறும் உடல் தான் என்றால் ஆத்மாவை பற்றிய சிந்தனையே வராது.

நான் என்பது இந்த உடல் அல்ல என்ற அறிவு (ஞானம் ) பிறக்கும் போது தான், ஆத்மாவை அறிந்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது. நான் உடல் அல்ல என்றால் பின் நான் யார் என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். நான் என்பது உடல் அல்ல என்று சொல்லும் போது அப்படி சொல்லும் "நான்" யார் ?

இந்த உடல் அழியும் தன்மை உள்ளது என்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். நான் இந்த உடல் இல்லை என்றால், நான் என்பது வேறு என்ன என்ற கேள்வி எழுகிறது. உடல் அல்லாத "நான்" என்பதும் இந்த உடல் போலவே அழியக் கூடியதா ?  அதுவும் அழியக் கூடியது என்றால் அழியக் கூடிய அந்த "நான்" என்பதற்கும், இந்த உடலுக்கும் என்ன வேறு பாடு ? உடல் அழிந்த பின் சிறிது காலம் கழித்து அந்த "நான் " அழியுமா ? அல்லது உடல் அழிவதற்கு முன்னே அது அட்ழிந்து விடுமா ? அல்லது உடலோடேயே சேர்ந்து அழியுமா ? எப்படி பார்த்தாலும் அழியும் இந்த உடலுக்குள் இன்னொரு அழியும் பொருள் தேவை இல்லதாதாகவே படுகிறது. அப்படி என்றால் உடலுக்குள் இருக்கும் அந்த நான் அழியாத ஒன்றாய் இருக்க வேண்டும்.

நான் என்பது ஆத்மா என்ற எண்ணம் எழும் போது, ஆத்மா என்றால் என்ன என்று அறியத் தொடங்குகிறோம். அந்த எண்ணம் வரும் வரை, ஆத்மாவை பற்றி நாம் அறிய இயலாது.

அர்ஜுனனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் இந்த உடல் தான் எல்லாம் என்று நினைக்கிறான். "நான்" எப்படி என் உறவினர்களை கொல்லுவேன் என்பது தான் அவன் வாதம், அவன் தயக்கம். நான் என்பது அர்ஜுனனாகிய இந்த உடல் அல்ல, பீஷ்மர் என்ற அந்த உடல் அல்ல என்ற எண்ணம் அவனிடம் இல்லை.

எனவே கிருஷ்ணன் கூறுகிறான், இந்த உடல் அழியும். அதனதன் கர்ம பலன் முடிந்தவுடன், இந்த உடல் அழிந்து விடும். இந்த உடல் ஆத்மாவிற்கு உரியது. எனவே நீ கவலைப் படாமல் யுத்தம் செய் என்கிறான்.

கிருஷ்ணன் யுத்தம் செய்யச் சொன்னானா ? கிருஷ்ணன் வன்முறையையை ஆதரிக்கிரானா ? கிருஷ்ணனின் வழி முறையையை பின் பற்றினால், எல்லோரும் கொலை செய்யலாம்...கேட்டால் எப்படியும் இந்த உடல் அழியதானே போகிறது, அதன் கர்ம பலன் முடிந்து விட்டது எனவே அதை அழிப்பதில் தவறில்லை என்று வாதம் செய்யலாம். அநீதியையை எதிர்த்து போராடுவது அனைவரின் கடமை என்று எல்லோரும் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு நாங்கள் கீதை காட்டிய வழியில் போகிறோம் என்று ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது ?

No comments:

Post a Comment