Thursday, March 3, 2016

கீதை - 13.33 - ஞான ஒளி

கீதை - 13.33 - ஞான ஒளி 


यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥१३- ३३॥

யதா² ப்ரகாஸ²யத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: |
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா² க்ருத்ஸ்நம் ப்ரகாஸ²யதி பா⁴ரத || 13- 33||

யதா =  அப்படி

ப்ரகாஸயத் = பிரகாசத்தை தருகிறதோ

ஏக  = ஒரு

க்ருத்ஸ்நம் =  முழுவதும்

லோகம் = உலகம் முழுமைக்கும்

இமம் = இந்த

ரவி:  = சூரியன்

க்ஷேத்ரம்  = க்ஷேத்ரம்

க்ஷேத்ரீ =க்ஷேத்ரத்தை அறிபவன், கொண்டவன்

ததா = அதே போல

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ப்ரகாஸயதி = பிரக்கசிக்கச் செய்கிறான்

பா⁴ரத = பாரத குலத்தவனே

சூரியன் ஒருவனாய், எப்படி இந்த உலகம் அனைத்தையும் ஒளியுறச்செய்கிறானோ, அதே போல க்ஷேத்திரத்தை உடையவன் , க்ஷேத்திரம் முழுவதும் ஒளியுறச் செய்கிறான்.

மிக மிக முக்கியமான சுலோகம்.

சூரியன் எவ்வாறு அனைத்தையும் ஒளியுறச் செய்கிறானோ....

இதற்கு என்ன அர்த்தம்?

முதலாவது, உலகை ஒளி அடையச் செய்வது என்று ஒரு வேலையை சூரியன் செய்வது இல்லை. அது பாட்டுக்கு வருகிறது. போகிறது. அது அப்படி ஒளிப் பிழம்பாய் இருப்பதால் அதன் முன்னால் எல்லாம் ஒளி  பெறுகின்றன. ஒளி தருவது சூரியனின் வேலை அல்ல. அதன் இயற்கை.  வேலை என்றால் அதற்கு ஒரு தொடக்கமும்  முடிவும் இருக்கும் அல்லவா ? சூரியனுக்கு அப்படி  அல்ல. அது தன் இருப்பின் மூலமே அனைத்தையும் ஒளி பெறச் செய்கிறது.

இரண்டாவது, சூரியனின் முன்னால் அனைத்தும் ஒளி பெறுகின்றன. நல்லதும், அல்லாததும் ஒளியூட்டப் படுகின்றன. சூரியனுக்கு பேதம் இல்லை. இவன் நல்லவன், இவன் மேல் ஒளி சிந்துவோம். இவன் கெட்டவன் , இவனுக்கு ஒளி  கிடையாது என்று மறைத்து வைப்பது அல்ல. எல்லோருக்கும் பொது.

மூன்றாவது, நல்ல செயலும், தீய செயலும் சூரிய ஒளியால் நடக்கும். ஆனால், அந்த சூரியன் அதற்கு பொறுப்பு இல்லை. யாரும் அதை பொறுப்பாக்குவதும் இல்லை. அது அதன் நிலையில் இருக்கிறது. அதன் ஒளியில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, சூரியன் அதைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

நான்காவது, நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதன் பலன்கள் சூரியனைப் போய் அடைவது இல்லை. அது கேட்பதும் இல்லை, நாம் கொடுப்பதும் இல்லை. அது தன்  இயற்கையில் இருக்கிறது.

சரி, இதெல்லாம் தெரிந்தது தானே. இதை ஏன் இவ்வளவு விஸ்தாரமாக விளக்குவானேன் என்ற கேள்வி எழலாம்.

விளக்கியது சூரியனின் இயல்பைச் சொல்ல அல்ல.


"அந்த சூரியனைப் போல க்ஷேத்ரம், க்ஷேத்ரத்தை அறிபவன் அல்லது அறிந்து , கொண்டவன் க்ஷேத்ரத்தை ஒளியுறச் செய்கிறான்"

மீண்டும் ஒரு முறை க்ஷேத்ரம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

நமக்கு வெளியே உள்ள அனைத்தும் (பொருள்கள் + உயிர்கள்) + நம் புலன்கள் (கண், காது, மூக்கு போன்றன) + புலன்கள் நமக்குத் தரும் உணர்வுகள் (சுவை, ஓசை, ஊறு , நாற்றம் என்பன) + இந்த புலன்கள் தரும் செய்திகளை பகுத்து அறியும் அறிவு இவை அனைத்தும் க்ஷேத்ரம் (இடம் அல்லது field).

இவற்றை தெளிவுறச் செய்வது க்ஷேத்ரன்ஞன் என்ற   என்னுள் இருக்கும் அந்த ஞான ஒளி . எப்படி சூரியன் தன் ஒளியால் உலகில் உள்ளவற்றை தெளிவு பெறச் செய்கிறதோ, அது போல எனக்குள் இருக்கும் அந்த ஞான தீபம், ஞான ஒளி இந்த உலகை எனக்குத் தெளிவு பெறச் செய்கிறது.

புலன்கள் அறிவது இல்லை. புலன்கள் செய்திகளை கொண்டு செல்வதோடு சரி. உலகம் எது, அது எப்படிப் பட்டது, அதில் உள்ளது எது, நல்லது எது, அல்லது எது என்று புலன்கள் சொல்லும் செய்திகளை கொண்டு இந்த உலகை நமக்கு விளங்கச் செய்வது நம் அறிவென்ற ஒளி. ஞானம் என்ற தீபம்.

அந்த ஒளிச் சுடரின் முன்னால் எல்லாம் தெளிவு பெறுகிறது, எல்லாம் நடக்கிறது.

அந்த சுடரை ஏற்றுங்கள். அது பிரகாசிக்கட்டும். உங்கள் வாழ்வில் அது ஒளி தரட்டும். அந்த ஒளி அஞ்ஞானத்தை போக்கும்.

ஆழ்வார்கள் ஏற்றிய ஞான தீபம் அது.

வையம் தகளியாக வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று 

ஞான சுடர் விளக்கு அது....


அன்பே தகளியாக, ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் 

அந்த ஞானச் சுடர், உண்மையை கண்டு கொள்ள உதவும்....

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் 
செருக்கி வரும் பொன்னாழி கண்டேன் 
புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று - 

சுடர் வந்தவுடன், ஒளி  வரும். ஒளி வந்தவுடன் இருள் மறையும். அஞ்ஞானம் மறையும் போது உண்மை தானே தெரியும். ஒளி வரவும், இருள் விலகவும், உண்மை வெளிப்படவும் நாள் பல ஆகாது. உடனே நிகழும்.

"என்னாழி வண்ணன்பால் இன்று "

இராமலிங்க அடிகள் சொன்ன

"அருட்பெரும் ஜோதி"  அது

மணிவாசகர் கூறிய

“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”

அந்த ஞான ஒளி, உங்களுக்குள்ளும் தோன்றி நல்வழி காட்டட்டும்.

காட்டும்.


















Tuesday, March 1, 2016

கீதை - 13.32 - பற்றற்ற பற்று

கீதை - 13.32 - பற்றற்ற பற்று 


यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥१३- ३२॥

யதா = அப்படி

ஸர்வகதம் = எங்கும் இருந்தாலும்

ஸௌக்ஷ்ம்யாத் = சூக்க்ஷுமமாய் இருப்பதால்

ஆ காஸம் = ஆகாசம்

ந பலிப்யதே = கரை படாமல் இருப்பது போல

ஸர்வத்ர = எங்கும்

ஆவஸ்தித = இருப்பினும்

தேஹே = தேகத்தில்

ததா = அதே போல

ஆத்மா = ஆத்மாவும்

ந பலிப்யதே = கரை படிவது இல்லை


எங்கும் நிறைந்து இருந்தாலும் ஆகாயம் தன் நுண் தன்மையால் பற்று அற்று இருப்பது போல, உடம்பினுள்  ஆத்மா இருந்தாலும் அது பற்று அற்று இருக்கிறது. 

நான் என்பது இரண்டு பகுதிகளை உடையது.

முதாலவது, இந்த உடல். இந்த உடலை தொட்டு உணர முடியும், அதற்கு எடை, நிறம், உயரம், என்று மற்ற பொருள்களுக்கு உள்ளது போல அனைத்து இயற்பியல் மற்றும் வேதியல்  குணங்களும் உண்டு.  உடலை நாம் பார்க்க முடியும், தொட முடியும், நுகர முடியும்...

இரண்டாவது, தொட முடியாத, பார்க்க முடியாத, எடை இல்லாத, உருவம் இல்லாத  ஒன்று.

அது என்ன ?

அப்படி நம்முள் பல விஷயங்கள் இருக்கின்றன.

நம் மனம், நம் அறிவு, நம் குணங்கள், ஞாபகங்கள், உணர்சிகள் என்று. இவையும் என் உடலோடு சேர்ந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.

என் மனமும், புத்தியும், அறிவும், உணர்சிகளும், ஞாபகங்களும் இல்லாவிட்டால் , வெறும் உடம்பு மட்டும் நானாக முடியாது.

"அவரு ரொம்ப நல்ல மனிதர்"

"நிறைய படிச்சவர்"

"கோபமே வராது அவருக்கு, சாந்த குணம்"

"அள்ளி அள்ளித் தரும் வள்ளல்"

என்றெலாம் மற்றவர்களைச் சொல்லும் போது , நாம் அவர்களின் உடலைப் பற்றி சொல்லுவது இல்லை.

இந்த இரண்டு பகுதிகளில், முதலாவதை ஸ்தூல சரீரம் என்றும், இரண்டாவதை சூக்ஷும சரீரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த சூக்க்ஷும சரீரம் கண்ணுக்குத் தெரியாது, நுண்மையானது, நம் உடலில் எங்கும்  நிறைந்து இருப்பது.

இந்த உடலையும், இந்த மனம், அறிவு, சிந்தனை, உணர்சிகள் என்பனவற்றையும் செலுத்தும் சக்தியும் சூக்க்ஷுமமானது தான். அது எங்கும் நிறைந்து நிற்கிறது. நுண்ணியமானது.

இதில் முக்கியமானது என்னவென்றால், நல்லதும் கெட்டதும் , உடலைத் தொடும், நினைவைத் தொடும், ஆனால் இந்த சூக்க்ஷமமான சக்தியைத் தொடாது.

எப்படி என்றால்,எங்கும் நிரந்த ஆகாயம் போல என்கிறது கீதை.

அது என்ன ஆகாயம் போல ?

ஆகாயம் என்றால் ஏதோ வானம் என்று மேலே பார்க்கக் கூடாது.

ஆகாயம் என்றால் வெளி. உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் வெளி தான் ஆகாயம்.

எதிரில் இருக்கும் ஒருவரை இன்னொருவர் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். வார்த்தைகள் கடுமையானவைதான். புண் படுத்தக் கூடியவைதான். அந்த வார்த்தைகள் இருவருக்கும் இடைப்பட்ட வெளியில் (ஆகாய மார்கமாக) தான் செல்கிறது. இருந்தும், அது அந்த ஆகாயத்தில் ஓட்டுவது இல்லை.

ஒரு பெரியவர், தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த மற்றொருவரை ஆசீர்வதித்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்கிறார். அந்த வார்த்தைகளும் ஆகாயத்தில் ஒட்டுவது இல்லை.

ஆகாயத்தின் வழியாகத்தான் செல்கிறது. ஆனால், அதில் ஓட்டுவது இல்லை.

அது போல, நம் உடலுக்குள் இருக்கும் , சூக்க்ஷுமமான ஆன அந்த சக்தியில், உடல் செய்யும் நல்லது கெட்டது எதுவும் ஓட்டுவது இல்லை.

வண்டியில் பெட்ரோல் போட்டு கோவிலுக்கும் போகலாம், மதுக் கடைக்கும் போகலாம். பெட்ரோல் என்ன செய்யும்.

அதுதான் நம்மை செலுத்திக் கொண்டு வந்தது. ஆனாலும் நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு அந்த பெட்ரோலின் பங்கு ஒன்றும் இல்லை.

இந்த உடலைத் தாண்டி, இந்த எண்ணங்கள், மனம், ஞாபகம், உணர்வுகள் என்ற இவற்றையெல்லாம் தாண்டி, இவற்றை செலுத்தும் அது எது என்று சிந்திப்போம்.











Monday, February 29, 2016

கீதை - 13.31 - செயல் அற்றவன், பற்று அற்றவன்

கீதை - 13.31 - செயல் அற்றவன், பற்று அற்றவன் 


अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥

அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: |
ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||

அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்

நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்

பரமாத்மா = பரமாத்மா

அயம் = அவன்

அவ்யய: = மாற்றமில்லாமல்

ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்

அபி =  மேலும்

கௌந்தேய = குந்தி மைந்தனே

ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை

ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை

ஆதியும் இல்லாமல், குணமும் இல்லாததால் இந்த பரமாத்மா கேடுகள் அற்றவன். இவன் உடலினுள் இருந்தாலும் செயல்பாடுகள் அற்றவன், பற்று அற்றவன். 


ஆதி இல்லாதது ...தொடக்கம் இல்லாதது எது ? எதற்குமே ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே ? ஒன்று இருக்கிறது என்றால் என்றோ அது தோன்றி இருக்கத்தானே  வேண்டும் ? தொடக்கமே இல்லாதது எது ? நம்மால் அப்படி ஒன்றை  சிந்திக்க முடிவது இல்லை. 

இருக்கிறது. நாம் அன்றாடம் அதை காண்கிறோம், உணர்கிறோம்.

உண்மை. சத்யம். இதற்கு தொடக்கம் கிடையாது. உண்மை நிரந்தரமானது. 

உதாரணமாக, அறிவியல் உண்மைகளை எடுத்துக் கொள்வோம். புவி ஈர்ப்பு விசை. பொருள்கள் ஒன்றை ஒன்று இழுக்கின்றன என்ற உண்மை எப்போதும் இருக்கிறது. நியூட்டன் கண்டு பிடிப்பதற்கு முன்னாலும் அது அப்படித்தான் இருந்தது. 

அறிவியல் உண்மைகள் மாறலாம். மாறாத உண்மைகள், சத்தியங்கள் இருக்கத்தான்  செய்கின்றன. 

குணம் இல்லாதது. உண்மைக்கு ஏது குணம்.  அது உண்மை அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை.  குணம் என்பது தனித்து நிற்க முடியாது. ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் குணம் என்பதை  நிர்ணயம் பண்ண முடியும். அந்த பெண் ஒல்லியாக இருக்கிறாள் என்றால் வேறு யாரோ குண்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். எல்லோருமே ஒரே மாதிரியாக இருந்தால் ஒல்லி, குண்டு என்ற பாகு பாடு இருக்காது. உண்மையை ஒப்பிட முடியாது. இது நல்ல உண்மை, இது கெட்ட உண்மை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. 

 நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் அந்த உண்மையான பொருள் கேடுகள் அற்றது. 

எப்படி ? இந்த உடலினால் நாம் எவ்வளவோ கெடுதல்கள் செய்கிறோம். கொலை, கொள்ளை, திருட்டு, பொறாமை, புறம் சொல்லுதல், காமம், கோபம்  என்று ஆயிரம் குற்றங்களை இந்த உடலினால் செய்கிறோம். உடலுக்குள் இருக்கும் அது எப்படி இவற்றால் கெடாமல் இருக்க முடியும் ?

மேலும், கீதை சொல்கிறது "அவன் பற்று அற்றவன்".

இந்த கேள்வியை ஒருமுறை இராம கிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு மாணவன் கேட்டான். உடலுக்குள் இருக்கும் அது உண்டலின் மேல் பற்று கொண்டது இல்லை, உடல் செய்யும் தீமைகள் அதைப் பற்றாது என்று சொல்கிறீர்களே அது எப்படி என்று. 

அவர், அந்த சீடனை இரவு வரச் சொன்னார். "நாம் இரவு உணவு  உண்டு விட்டு இது பற்றி பேசுவோம் " என்றார். 

சீடனும், சரி என்று சொல்லிச் சென்றவன் இரவு வந்தான். 

நல்ல சர்கரைப் பொங்கல், நெய் வழிய வழிய செய்து இருந்தது. சீடனும், ருசித்துருசித்து சாபிட்டான்.

சாப்பாடு முடிந்த பின்னால், பிரமஹம்சர் சீடனுக்கு கையை கழுவிக் கொள்ள சீயக்காய் போடி கொடுத்தார்.  உணவில் நெய் அதிகம் இருந்ததால், கை எல்லாம் ஒரே வழ வழப்பு. சீடனும், சீயக்காய் போட்டு நன்றாக கழுவினான். 

பரமஹம்சர் மேலும் ஒரு கரண்டி பொடி கொடுத்தார்.

சீடன் "குருவே கையில் உள்ள நெய் பசை எல்லாம் நன்றாகப் போய் விட்டது. சீயக்காய் போதும் " என்றான். 

பரமஹம்சர்: சீடனே, எனக்குத் தெரியும் கை சுத்தமாகி விட்டது என்று. இது உன் நாக்குக்கு.

சீடன்: என்னது ? நாக்குக்கா ....? நாக்குக்கு யார் சீயக்காய் போடுவார்கள் 

பரமஹ்சர்: என்னப்பா , கையில் நெய் ஒட்டியது...வாய் வழியாக உண்டால் நாக்கிலும் ஓட்டும் தானே என்றார். 

சீடன் உண்மையை உணர்ந்து கொண்டான். நாக்கின் மேல் நெய் பட்டாலும் , நெய் நாக்கில் ஓட்டுவது இல்லை. 

அது போல , உடலின் மேல் அனுபவங்கள் சேர்ந்தாலும் அது உடலுக்குள் இருக்கும் அதைத் தீண்டுவது இல்லை. 

நான் அதை என்று சொல்லுவதற்குக் காரணம்,   இந்த சுலோகம் அது ஆத்மா என்று சொல்லவில்லை. நான் என்ற தன் உணர்வு (self  consciousness )என்பது பொருத்தமாக இருக்கும். அதற்கு ஒரு பெயரை தந்து விட்டால், பின் நம் மனம் அந்தப் பெயரைப் பிடித்துக்  கொள்ளும்.

ஆத்மா என்று சொல்லலாம்,உயிர் என்று சொல்லலாம், ஜீவாத்மா என்று சொல்லலாம், பரமாத்மா என்று சொல்லலாம்...

பெயரை விட்டு  விடுகிறேன். பெயர் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள். 

எந்த சொல்லுக்கும் மூன்று வேலை உண்டு. 

அந்த சொல் தரும் சப்தம், 
அந்த சப்தம் சுட்டும் பொருள் அல்லது செயல் 
அந்தப் பொருளின் பின்னால் இருக்கும் உணர்வு, தன்மை.

உதாரணமாக,

மனைவி  என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

முதலில் அந்த சொல்லின் சப்த்தம் நமக்கு கேட்கிறது. 

பின், அது மனைவி என்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. சப்தம் போய் விட்டது, பொருள் வந்து விட்டது. 

அடுத்த  கட்டம், அந்தப் பெண் பற்றிய  நினைவுகள், அவளின் குணங்கள் எல்லாம் வந்து நிற்கிறது. பொருள் போய் விட்டது, பொருளுக்கு பின்னால் இருக்கும்  உணர்வும்,அவளின் தன்மையும் நிற்கிறது. 

சிக்கல் என்னவென்றால், நாம் முதல் இரண்டு நிலையிலேயே நின்று விடுகிறோம். 

நம் உடலுக்குள் இருக்கும் அவன் , தோற்றம்  இல்லாதவன், பற்று இல்லாதவன், செயல் பாடுகள் இல்லாதவன். 

இதில் சிறப்பு என்ன என்றால், உடலுக்குள் இருக்கும் அது தான் நீங்கள். ஏனோ, இந்த உடல் தான் நீங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருகிறீர்கள். 

இல்லை. 

ஆகாய விமானத்தை ஓட்டும் விமானி, அந்த விமானம்தான் தான் என்று நினைப்பானா ? அவன் அதை செலுத்துகிறான். அவன் கட்டுப் பாட்டில் அது இயங்குகிறது. அவன் நில் என்றால் நிற்கும். போ என்றால் போகும். பற என்றால் பறக்கும். ஆனால், அந்த விமானிக்குத் தெரியும், தான் என்பது விமானம் அல்ல என்று. 

அந்த விமானத்திற்கு சக்கரம் பழுது ஆகலாம், இறக்கை எங்காவது உரசி கெட்டுப் போகலாம், ஆனால் அது அந்த விமானியை பாதிப்பது இல்லை. 

அது போல உங்கள் உடல் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கும். நில் என்றால் நிற்கும், தொடு என்றால் தொடும். ஆனால் நீங்கள் இந்த உடல் இல்லை. 

எவ்வளவுதான் ஆசையாக இருந்தாலும், பெருமையாக இருந்தாலும், சேரும் இடம் வந்த பின், விமானி விமானத்தை விட்டு இறங்கிப் போய் விடுவான். 


நீங்கள் இந்த  உடலை விட மிக மிக பெரியவர்கள். 

அதை உணருங்கள். அது தான் கீதையின் நோக்கம்.  













கீதை - 13.30 - நீங்கள் பிரமத்தின் ஒரு பகுதி

கீதை - 13.30 - நீங்கள் பிரமத்தின் ஒரு பகுதி 


यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥

யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||

யதா = எப்போது

பூத ப்ருதக் பாவ = பல்வேறு பூதங்கள்

ஏக ஸ்தம் = ஒன்றில் நிலை பெற்று இருக்கிறது

அ நுபஸ்யதி = என்பதைக் காண்பானோ

தத = அவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

விஸ்தாரம் = விரிந்த

ப்ரஹ்ம = பரந்து

ஸம்பத்³யதே= அடைகிறான்

ததா = அப்போது



அனைத்து பூதங்களும் ஒரே ஆதாரத்தைக் கொண்டது என்பதை அறிபவன் , அப்போது,  விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

வேற்றுமையே துன்பகளுக்குக் காரணம். வேறுபாடு தோன்றத் தோன்ற துன்பங்கள்  அதிகரிக்கும்.

நாட்டின் பெயரால், ஜாதியின் பெயரால், குலத்தின் பெயரால், மொழியின் பெயரால், கடவுள்களின் பெயரால் எத்தனை வேற்றுமைகள்.எத்தனை சண்டை சச்சரவுகள் ?

உலகம் பல்வேறு உயிர்களாலும், பொருள்களாலும் ஆனது போலத் தோன்றினாலும், அடிப்படையில் அது ஒன்றே தான்.

அது எப்படி ?

நானும், நீங்களும் ஒன்றாக முடியும் ?

முடியும். எப்படி என்று பார்ப்போம்.

ஒரு விஷயத்தை நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம் ? தெரிந்த ஒன்றை வைத்து  தெரியாத ஒன்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

உதாரணமாக , புலி எப்படி இருக்கும் என்றால் அது பூனை மாதிரி இருக்கும், கொஞ்சம் பெருசா இருக்கும்  அப்படினு சொல்லி புரியவைக்கலாம்.

அணுவை கண்ணால் பார்க்க முடியாது. நுண் அணு கருவி மூலமும் பார்க்க முடியாது . பின் எப்படி அதை நாம் அறிந்து கொள்வது. ஒரு மணல் துகள் இருக்கிறதே அதில் கோடியில்  ஒரு பங்கு இருக்கும் என்று சொன்னால் , அணுவை நேரில் பார்க்காமலேயே நம்மால் அணுவைப் பற்றி யூகித்து அறிய முடிகிறது அல்லவா, அது போல இந்த உலகம் ஏதோ ஒன்றால் ஆனது என்பதை நாம் சில உதாரணங்கள் மூலம் அறிய முடியும்.

நம் உடலில் வலது பக்கம், இடது பக்கம் என்று இருக்கிறது அல்லவா. வலது உயர்ந்தது , இடது தாழ்ந்தது என்று வைத்து இருக்கிறோம். இடது கையால் கொடுத்தால் மரியாதை குறைவு. இடது கை சுத்தம் செய்ய பயன்படுவது என்று வைத்து இருக்கிறோம்.

நம் உடலில், வலது எங்கே முடிந்து , இடது பாகம் எங்கிருந்து தொடங்குகிறது ?

இந்த இடத்தில் இருந்து வலது பக்கம் முடிகிறது, இங்கிருந்து இடது பக்கம் தொடங்குகிறது என்று கூற முடியாது அல்லவா. உடல் ஒன்று தான். நாம் தான் இடம் வலம் என்று பிரித்து வைத்து வைத்து இருக்கிறோம். அது மட்டும் அல்ல, வலது உயர்ந்தது, இடது தாழ்ந்தது என்றும் வைத்து இருக்கிறோம்.

உயர்ந்ததும், தாழ்ந்ததும் உடலின் கூறுகள் தானே. உடல் ஒன்று தானே ? இதில் வலது இடது என்ற பாகு பாடு இங்கிருந்து வந்தது ?

இடதிலிருந்து வலது தொடங்குகிறது. வலதில் இருந்து இடது தொடங்குகிறது. இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த உடல்.

பிரிவுக்கு  பின்னால் இருக்கும் ஒருமை புரிகிறதா ?

உயர்வும் தாழ்வும் ஒன்றுதான் என்று புரிகிறதா.

இது ஒரு உதாரணம்.

இந்த உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அமீபா, வைரஸ்  போன்ற ஒரு செல் உயிரில் இருந்து யானை போன்ற பெரிய விலங்குகளும் இருக்கிறது.

மணல் துகளில் இருந்து இமய மலை வரை இருக்கிறது.

நல்லவனும், வல்லவனும், இளைத்தவனும், எல்லாம் இருக்கிறார்கள்.

இருந்தும் எல்லாம் அடிப்படையில் அணுவினால் ஆனது என்று நமக்குத் தெரியும். இத்தனை பிரிவு இருந்தாலும், அனைத்தும் அணு என்ற ஒன்றால் ஆனது என்று நாம் நம்புகிறோம்.

இந்த உலகமும் இதில் உள்ளவை அனைத்தும் அடிப்படையில் ஏதோ ஒன்றால் ஆனது.

இதை அறிபவன் விஸ்தாரமான பிரமத்தை அடைகிறான்.

பிரமம் என்றால் விரிந்தது என்று பொருள்.

நீங்கள் யார் ?

உங்கள் கை மட்டுமா ? கால்கள் மட்டுமா ? கண்கள் மட்டுமா ? எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் நீங்கள் அல்லவா ? இதில் கை உயர்ந்தது, காது தாழ்ந்தது என்று நினைப்பீர்களா ? நினைக்க மாட்டீர்கள் அல்லவா .....அது போல, நீங்கள் இந்த பரந்து விரிந்த உலகின் ஒரு பகுதி என்று நினைத்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், என்ற பாகு பாடுகள் மறையும்.

விரிந்து பட்ட உலகின் ஒரு கூறு என்று அறிவீர்கள்.

காக்கை குருவி எங்கள் ஜாதி
காடு மலை எங்கள் கூட்டம்

என்றானே பாரதி, அது போல....இந்த உலகின் சக்கரவர்த்தி நீங்கள்.

ஏன் உங்களை  ஒரு நாட்டின், ஒரு ஜாதியின், ஒரு மொழியின், ஒரு இனத்தின் சின்ன  வட்டத்துக்குள் அடைத்துக் கொண்டு , அந்த வட்டத்துக்கு வெளியே உள்ளவர்களோடு முரண் படுகிறீர்கள் ?

வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு நீங்கள்.

பெருமிதம் கொள்ளுங்கள்.

கீதை உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.

இந்த புது உலகிற்கு உங்களை நீங்களே வரவேற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


Sunday, February 28, 2016

கீதை - 13.29 - செய்வது யார் ?

கீதை - 13.29 - செய்வது யார் ?


प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: |
ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||

ப்ரக்ருத்ய = பிரக்ரிதி

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

கர்மாணி = காரியங்களை

க்ரியமாணாநி = செய்கிறது

ஸர்வஸ = அனைத்து

ய: = எவன்

பஸ்யதி = இதை காண்கிறானோ

ததா = அப்படி

ஆத்மாநம் = ஆத்மா 

அகர்தாரம் = செய்வது இல்லை (கர்த்தா = செய்பவன் , அ - கர்த்தா = செய்யாதவன் )

ஸ = அவனே

பஸ்யதி  = காட்சி  உடையவன்


எங்கும் காரியங்கள் பிரக்ரிதியால் செய்யப் படுகின்றன.  எனவே, தான் கர்த்தா இல்லை என்று காண்பவனே உண்மையான காட்சி உடையவன். 


கர்மயோகத்தில், கடமையைச் செய், பலனில் நாட்டம் கொள்ளாதே என்று கீதை கூறியது.

யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் அதை.  பலன் இல்லாவிட்டால் , எதற்கு கடமையைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சரியான விடை கர்மயோகத்தில் இல்லை.

இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது.

காரியங்கள் யாரால் செய்யப்படுகிறது ?

நான் காரியங்களைச்   செய்கிறேன் என்றால், என்ன அர்த்தம் ?

என் கைகள் காரியங்களைச் செய்கின்றன, என் கண் பார்க்கிறது, என் கால் நடந்து செல்கிறது.

ஆனால் இவைகள் தானே செய்வது இல்லை. இவற்றை இயக்குவது மூளை. அந்த  மூளையை இயக்குவது எது ?

அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....ஆத்மா, உயிர், புருஷன் ...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அது செயல்படுத்துகிறது  ஆனால் செயல்படுவது இல்லை.

அது எப்படி ?

அதுவும் என்னுள் ஒரு பகுதிதானே. அதுவும் சேர்ந்துதானே காரியம் செய்கிறது. எப்படி அது மட்டும் செய்யவில்லை என்று சொல்ல முடியும் ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் இரயிலிலோ அல்லது ஆகாய விமானத்திலோ பயணம் செய்து இருக்கிறீர்களா ?

உங்கள் சக பயணி நகர்வதாக உங்களுக்குத் தெரிவது இல்லை அல்லவா. வெளியில் பார்த்தால் தான் தெரியும்  எல்லோரும் நகர்வது.

நகர்வதற்கு , நகர்தல் என்ற செயலுக்கு நகராத ஒன்று தேவைப் படுகிறது அல்லவா ?

செயல் நிகழ , செயல் படாத ஒன்று வேண்டும்.

செயல் நிகழ்வதற்கு இடைவெளி வேண்டும், கால வித்தியாசம் வேண்டும், செய்பவன், செய்யாதவன் என்ற வேறுபாடு வேண்டும்.

வேற்றுபாடுகள் அற்ற ஒன்றுக்கு செயல் இல்லை.

அனைத்திலும் இருப்பது ஒன்று என்றால், அது எவ்வாறு செயல் படும். அதற்கு செயல் இல்லை.

செயல் நிகழ பிரிவு வேண்டும்.

சரி, அது எப்படியோ போகட்டும்.

பிரகிரிதியில் செயல் நிகழ்கிறது.

புருஷன் செயல் அற்று இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்...அதனால் என்ன ? அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

முக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான செய்தி இருக்கிறது.

செயல்கள் செய்வது நான் இல்லை. நான் கர்த்தா இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால், என்னவெல்லாம் நிகழும் ?

முதலாவது, செயலின் விளைவுகளின் மேல் ஆசை இருக்காது. வருவது வரட்டும் என்ற நிலை வரும்.

இரண்டாவது, கர்மத்தின் விளைவில் பற்று இல்லாவிட்டால், ஏமாற்றம் இல்லை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் இல்லை, மற்றவனுக்கு கிடைத்துவிடுமோ என்ற  பொறமை இல்லை, அவனுக்கு கிடைத்து எனக்கு கிடைக்கமால் போய் விடுமோ என்ற ஏக்கம் இருக்காது.

மூன்றாவது, நான் செய்கிறேன், என்னால் நிகழ்கிறது என்ற ஆணவம் போய் விடும். ஆணவம் போனால், செயலின் வெற்றியில் எனக்கு பங்கு வேண்டும் என்ற சுயநலம் போகும்.

நான்காவது, செயல்கள் என் மூலம் நிகழ்கின்றன. என்னால் நிகழ்வது இல்லை . நான் செயலற்றவன் என்று தோன்றும் பொழுது  செயலைப் பற்றிய விமர்சினங்கள் நம்மை  பாதிப்பது இல்லை.

எனவே, செயல்கள் என் மூலம் நிகழ்கிறது. நான் நிகழ்த்துவது இல்லை என்ற இந்த சித்தாந்ததை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.

மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்கு வழி காட்டும் தத்துவம்.




Friday, February 26, 2016

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக இருப்பவன்

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக  இருப்பவன்  


समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥

ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் |
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||


ஸமம்= சமமாக

பஸ்யந்ஹி = பார்த்தல்

ஸர்வத்ர = எங்கும்

ஸமவஸ்தி = சம் + அவ + ஸ்தித =  நிலைத்து இருக்கும்

ஈஸ்வரம் = ஈஸ்வரனை

ந = இல்லை

ஹி நஸ்தி = தன்னை துன்பப் படுத்துதல் 

ஆத்மநாத்மாநம் = ஆத்மாவினால் ஆத்மாவை , தன்னைத் தானே

ததோ = அதனால்

யாதி = அடைகிறான்

பராம் கதிம் = பரம கதியை, உயர்ந்த பாதையை


எங்கும் ஈசன் சமமாக இருப்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான். அப்படிப் பட்டவன் உயர்ந்த பாதையை அடைகிறான். 

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள்.

நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? நாம் ஏன் வருத்தப் படுகிறோம் ?

துன்பமும் வருத்தமும் எங்கிருந்து வருகின்றன.

துன்பமும் வருத்தமும் இரண்டு வழிகளில் அல்லது இரண்டு இடத்தில் இருந்து வருகின்றன.

ஒன்று நமக்குள் இருந்து.

மற்றது நமக்கு  வெளியில் இருந்து.

நமக்குள்  இருந்து எப்படி துன்பம் வரும் ? நாமே நமக்கு எப்படி துன்பம் செய்து கொள்ள முடியும் ?

ஆம். நாமே நமக்கு பல இன்னல்களை தேடிக் கொள்கிறோம்.

காமம், கோபம், பொறாமை, பேராசை என்று நமக்குள் வளர்த்துக் கொண்டு அவற்றால் துன்பப் படுகிறோம். நம் எதிர்பார்ப்புகள், நம் எண்ணங்கள் நமக்கு துன்பத்தைத் தேடி தருகின்றன. எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போது வருத்தம் வருகிறது.

ஆசை நிறைவேறாத போது துன்பம் வருகிறது. ஏமாற்றம் வருகிறது.

மற்றவன் பெற்ற செல்வத்தை, புகழை கண்டு பொறாமல் இருப்பதால் வருத்தமும் வாட்டமும் வருகிறது.

நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பம். அதை நாம் கட்டுப் அடுத்த முடியும். அதிலிருந்து விடு பட முடியும்.

எப்படி என்று கீதை சொல்கிறது. 


மீண்டும் இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரன் எங்கும் சம அளவில் இருக்கிறான் என்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான் என்கிறது கீதை. 

எனக்குள்ளும் ஈஸ்வரன் இருக்கறான்.  ஈஸ்வரன் என்றால் ஏதோ கடவுள் , பரப்ரம்மம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

என்னில் இருந்து எனக்கு ஒளி ஊட்டும், என் அறிவு, என் ஞானம், இதுவே ஈஸ்வரன். எனக்கு வழி காட்டுவது, என்னை நல் வழியில் நடத்துவது எதுவோ அதுவே ஈஸ்வரன். 

நம் புலன்கள் நம்மை துன்பம் தரும் வழியில் இழுத்துச் செல்லும் போது இந்த   ஞானத்தால் அதை நாம் கட்டுப் படுத்தினால் நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

கண்டதை சாப்பிடச் சொல்கிறது நாக்கு,
தேவை இல்லாததை காணச் சொல்கிறது கண்.
வரம்பு மீறி தொட்டுச் பார்க்கச் சொல்கிறது உடல்...

இப்படி நமக்குள் உள்ள புலன்கள் இன்பத்தை அனுபவிக்க தவறான பாதையில் நம்மை  இழுத்துச் செல்லும் போது ஒரு கணம் நின்று யோசிக்க வேண்டும்.

அறிவை , ஞானத்தை கொண்டு சிந்தித்தால் சரி எது தவறு எது என்று புரியும். அப்படி தெரிந்து கொண்டால், தவறான பாதையில் செல்ல மாட்டோம்.

நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

சரி, புரிகிறது. புலன்களை கண்ட வழியில் ஓட விடாமல், அறிவினால் அவற்றை கட்டுப் படுத்தினால் நம் புலன்களால், நம் தீய எண்ணங்களால் நமக்கு  நாமே தேடிக் கொள்ளும் துன்பங்களைத் தவிர்க்கலாம்.

அது என்ன "ஈஸ்வரன் எங்கும் சம அளவில் நிறைந்து இருக்கிறான்" ...அப்படி என்றால் என்ன ?

நமக்குள் இருக்கும் அதே சக்திதான் மற்ற உயிர்களுக்குள்ளும் இருக்கிறது.

ஏன் உயிர்கள் என்று பிரித்துப் பேசுவானேன்....உயிர் உள்ளது, உயிர் இல்லாதது என்று அனைத்திலும் அந்த சக்தி சமமாக இருக்கிறது.

அப்படி நினைத்தால், மற்றவற்றிற்கு நாம் எப்படி துன்பம் செய்வோம் ? நமக்கு மற்றவர்கள் எப்படி  துன்பம் செய்வார்கள். அப்படியே துன்பம் செய்தாலும் அது ஒரு உடல்  இன்னொரு உடலுக்குச் செய்யும் துன்பம் என்று நினைக்காமல் ஒரு சக்தி இன்னொரு சக்தியிடம் நடத்து உறவு என்ற எண்ணமே வரும். அப்படி வரும் போது , நமக்குத் துன்பம் தந்தவர்கள் மீது கூட கோபமோ, காழ்ப்பு உணர்வோ வராது.

இந்த உலகம் அனைத்தும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று தோன்றும்.

மேலும், அந்த சக்தி அனைத்திலும் சமமாக இருக்கிறது. ஒன்றில் அதிகமாகவும், மற்றொன்றில் குறைவாகவும் இல்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் ஒரு அளவிலான வெளிப்பாடு.

இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ?

அவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்ற பொறாமை எங்கிருந்து வரும் ?

அவனுக்கு கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போலத்தான்.

என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என்று பரதன் பெற்ற அரசை தான் பெற்ற அரசாகவே இராமன் நினைத்தானே அந்த மனோபாவம் வரும். அந்த மனோபாவம் வந்ததால், இராமனுக்கு தசரதன் மேல் கோபம் இல்லை, கைகேயி மேல் கோபம் இல்லை, பரதன் மேல் கோபம் இல்லை.
‘நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

 யார் மேலும் கோபம் இல்லை.

நீங்கள் இந்த உடல் இல்லை. புலன்கள் இல்லை. ஞான சொரூபம். இதை நீங்கள் மறந்து போவதனால் உங்களுக்கு நீங்களே தீமை செய்தி கொள்கிறீர்கள்.

ஞானத்தினால் வாழ்வை  நடத்திப் பாருங்கள். தன்னைத் தானே வருத்திக் கொள்ளும்  சோகம் நிகழாது. மற்றவர்களை வருத்தும் செயல் நிகழாது. மற்றவர்கள் உங்களை துன்பப் படுத்தவும் முடியாது.

சிந்திக்கலாம்தானே ?







கீதை - 13.27 - ஒன்றாகக் காண்பதுவே காட்சி

கீதை - 13.27 -  ஒன்றாகக் காண்பதுவே காட்சி 


समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥

ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் |
விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||

ஸமம் = சமமாக

ஸர்வேஷு= அனைத்து

பூதேஷு = பூதங்களிலும்

திஷ்டந்தம் = காண்கிறானோ

பரமேஸ்வரம் = பரமேஸ்வரனை

விநஸ்யத்ஸ்வ = அழிகின்றவற்றில்

அவிநஸ்யந்தம் = அழியாததை

ய: = எவன்

பஸ்யதி = பார்கிறானோ

 ஸ = அவனே

 பஸ்யதி = காட்சி உடையவன் ஆவான்


எல்லா  பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்.  அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். 

மரணம் !

மரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யார் ?

பயங்களுக்குள்ளே பெரிய பயம் மரண பயம்.

ஆசைகளுக்குள்ளே பெரிய ஆசை உயிராசை.

மரணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று மனிதன் தவிக்கிறான்.

மருந்தும், மாத்திரையும், உடற் பயிற்சியும் , உணவு கட்டுப் பாடும் மரணத்தை வெல்ல உதவும் என்று நினைக்கிறான். வெல்ல முடியாவிட்டாலும் தள்ளியாவது போட உதவும் என்று நினைக்கிறான்.

உலகிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் எது என்று கேட்டபோது , தர்மன் சொன்னான் "நாளும் உயிர்கள் எமனிடம் போவதை கண்டும் மனிதன் தனக்கு மரணம் வராது என்று நினைக்கிறானே, அது தான் உள்ளதுக்குள்ளேயே பெரிய அதிசயம் " என்றான்.

மரணத்தைக் கண்டு மனிதன் ஓடுகிறான்.

கீதை மரண பயத்தில் இருந்து விடுபட வழி சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் புதியதாய் பிறக்கிறீர்கள்.

நேற்று இருந்த நீங்கள் இல்லை இன்று இருப்பவர்.

உங்கள் உடலில் எவ்வளவு மாற்றங்கள். புதியதாய் பல செல்கள், பழைய செல்கள் பல இறந்து மறைந்து போய்விட்டன, புது சிந்தனை, பழைய சிந்தனைகள் கொஞ்சம் மறந்து போய் விட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நேற்றைய நீங்கள் இறந்து இன்றைய நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஒவ்வொரு கணமும் நீங்கள் புதியதாய் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் ஒவ்வொரு கணமும் நீங்கள் இறந்து கொண்டே இருக்கிறீர்கள். இறக்காமல் எப்படி பிறக்க முடியும் ?

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

சந்தேகம் இருந்தால் உங்களது பழைய புகைப் படத்தை எடுத்துப் பாருங்கள். உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் அது நீங்கள் தானா என்று. எங்க போனது அந்த உருவத்தில் உள்ள நீங்கள் ? அது இறந்து போய் , இப்போது இருக்கும் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள்.

நாளும் இறந்து பிறந்து கொண்டிருக்கும் நீங்கள், எதற்காக மரணம் என்ற ஒன்றை நினைத்து பயப் படவேண்டும் ?  மரணம் ஒன்றும் புதியது அல்லவே ? நாளும் ஒத்திகை பார்த்தது தானே.

அது மட்டும் அல்ல,

நாளும் இறந்து பிறந்து கொண்டு இருந்தாலும் நீங்கள் அதே ஆள் தானே ?

உடல் மாறுகிறது. எண்ணங்கள் மாறுகிறது. சிந்தனை மாறுகிறது. உங்களில் மாறாது ஒன்றும் இல்லை தானே ?

அப்படி இருந்தாலும், நான் அதே ஆள் தான் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?  மாறுகின்ற உங்களில் மாறாத ஒன்று ஏதோ இருக்கிறது அல்லவா ?

இந்த மாறும் உடல், சிந்தனை, ஞாபகம், எண்ணத் தொகுதி கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

அதே போல , நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள அனைத்துமே இப்படித்தான் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருக்கிறது.

இருந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து, மாறாத ஒன்று இருக்கிறது அல்லவா . அதை காண்பவனே

இந்த அனைத்து மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாத ஒன்று இருக்கிறது. அதைக் காண்பவனே காட்சி உடையவன் என்கிறது கீதை. மற்றவர்கள் உண்மையைக் காண்பது இல்லை.

இந்த மாற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மாறாத ஒன்றை எவன் காண்கிறானோ  அவனே காட்சி உடையவன் என்கிறது கீதை.

எப்படி உங்கள் மாற்றங்களுக்குப் பின்னால் மாறாத "நீங்கள்" இருக்கிறீர்களோ, அது போல மற்றவற்றின் மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.


"அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். "

கீதையின் ஆழம் புரிகிறதா ?


மேலும்,

இந்த அழிபனவற்றில் அழியாமல் இருக்கும் அது எல்லா இடத்திலும் சமமாக இருக்கிறது. உங்களில் அதிகமாகவும், என்னில் குறைவாகவும் இல்லை.

எல்லாம் சமம்.

உயர்வு தாழ்வு என்ற இருமை நம் கற்பனை.

ஆழ்ந்து சிந்தித்தால், மரணம் பற்றிய புது சிந்தனை பிறக்கும், சம நோக்கு வரும்.

வரணும்.