Thursday, August 8, 2024

பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி

 பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி 


மனம் தடுமாருவதற்குக் காரணம் பற்று மேலும் கோபம் என்று முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் சிந்தித்தோம். 


பற்றை விட்டு விட வேண்டும். கோபம் வரக் கூடாது. இப்படி எல்லாம் இருக்க முடியும் என்று வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு வாழக்கை எப்படி இருக்கும்?  உலக இன்பங்களை அனுபவிக்காமல் இருக்க முடியும் என்றாலும் இன்பமே இல்லாத ஒரு வாழ்க்கை என்ன வாழ்க்கை?  


கல்லு கூடத்தான் அப்படி இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற கேள்விக்கு விடை தருகிறது இன்றைய சுலோகம். அதே சமயத்தில் குழப்பங்களுக்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறது. 


புலன் இன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். அந்த அனுபவம் நமது கட்டுக்குள் இருக்க வேண்டும். புலன்கள் மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.  அவற்றின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக் கூடாது. நமது கட்டுப்பாட்டில் அவை இருக்க வேண்டும். 


"நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று சாப்பிடக் கூடாது. பசி தீர்ந்து விட்டால் எழுந்து விட வேண்டும். 


அறிவு சொல்கிறது இந்த facebook, whatsapp எல்லாம் வெட்டி வேலை என்று. ஆசை உந்தித் தள்ளுகிறது. போ, போய் பார் என்ன இருக்கிறது என்று.  புலன்கள் நம் கட்டுக்குள் இல்லை. 


புலன்களை கட்டுக்குள் கொண்டு வந்தவன் இன்பங்களை அனுபவிப்பது மட்டும் அல்ல, அவற்றின் மூலம் வரும் சிக்கல்களை விட்டு மன அமைதி பெறுவான். அவன் மனம் அமைதி அடையும் என்கிறது. 


பாடல் 



रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।

आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति॥६४॥


ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|

ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||


பொருள் 


ராக = விருப்பு 


த்வேஷ = வெறுப்பு 

வியுக்தைஸ்து = இவற்றில் இருந்து விலகி 


 விஷயா = உலக விஷயங்களில், அனுபவங்களில் 


இந்த்ரியைஸ் =  புலன்களை 


கரந் = செலுத்துபவன் 


ஆத்ம வஸ்யைர் = தன்னுடைய கட்டுக்குள் 


விதேயாத்மா = விதேய + ஆத்மா = தன் கட்டுப்பாட்டில் 


ப்ரஸாத = பிரசாதமாக 


அதி கச்சதி = அவன் அடைகிறான் 


வாழ்வில் கிடைத்தவற்றை பிரசசதமாகக் கொள்ள வேண்டும். நல்லதோ, கெட்டதோ, அவற்றை புனிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இது வேண்டும், அது வேண்டாம் என்று சதா போராடிக் கொண்டு இருக்கக் கூடாது. எது வந்தாலும், ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 


புலன்கள் கட்டுக்குள் இருந்தால், நன்மை தீமைகள் பெரிதாகத் தெரியாது. எது வந்தாலும் சரிதான் என்று தோன்றும். 


இந்த அனுபவம் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வந்து விட்டால் மன அமைதி வரும். 


வேண்டும் என்று நினைப்பவைகளின் பக்கம் விருப்போடு ஓடவும், வேண்டாம் என்பவற்றில் இருந்து வெறுத்து, பயந்து ஓடவும் என்று இருந்தால் என்று இந்த ஓட்டம் நிற்பது? வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


விருப்பும் வெறுப்பும் நம்மால் உருவாகும் ஒன்று. எப்போது ஒன்றை கண்டு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லையோ, அவை பலம் இழக்கும். அவை நம்மை செலுத்தாது. நாம் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 


எதன் மேல் ஆசையும், பற்றும் இருக்கிறது என்று சிந்தியுங்கள்.


எவ்வெவற்றை கண்டு வெறுப்பும், கோபமும், பயமும் வருகிறது என்று ஆராயுங்கள். 


ஏன் அந்த பயம், வெறுப்பு என்று சிந்தியுங்கள். வெறுப்பு, பயம் இவற்றின் காரணம் அந்த பொருளின் மேல் இருக்காது. உங்களிடம் இருக்கும். அதை சரி செய்து விட்டால், வெறுப்பும், பயமும் போய் விடும். மனம் அமைதி அடையும். சலனம், குழப்பம் குறையும். 


மூடி வைத்து விட்டு, கண் மூடி ஆழமாக சிந்தியுங்கள். 


கீதை உங்களுக்குள் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வரும். 




2 comments:

  1. அழகான ஆழமான கருத்து. நன்றி.

    ReplyDelete
  2. சிந்திப்போம்👍

    ReplyDelete