Thursday, February 18, 2016

கீதை - 13.22 - பரமாத்மா என்பது யார் ?

கீதை - 13.22 -  பரமாத்மா என்பது யார் ?

http://bhagavatgita.blogspot.in/2016/02/1322.html


उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥

உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: |
பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||

உபத்ரஷ்டா = திருஷ்டா என்றால் திருஷ்டி, பார்வை. பார்பதற்கு உதவுபவன். அல்லது, பார்ப்பவன்,

அநுமந்தா = அனுமதிப்பவன்

ச = மேலும்

பர்தா = தாங்கிப் பிடிப்பவன்

போக்தா = அனுபவிப்பவன்

மஹேஸ்²வர: = மகேஸ்வரன்

பரமாத்மா = பரமாத்மா

இதி = இதே

சா = மேலும்

அபி = அது அன்றியும்

யுக்தோ = கூறப் படுகிறான்

தே³ஹே = தேகத்தில்

அஸ்மிந் = இந்த

புருஷ: பர:  = பர புருஷன்



காண்பதற்கு உதவியாக இருப்போன் ,  அனுமதி தருவோன், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன் , அனுபவிப்பவன்,  மகேசுவரன் என்று இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


காண்பதற்கு உதவியாக இருப்போன்...அப்படி என்றால் என்ன ?

உங்களுக்கு நிகழ்பவற்றிற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள். உங்களைச் சுற்றி நிகழ்பவற்றிற்கு சாட்சியாக இருங்கள்.

சாட்சி என்றால் யார் ? நடப்பவற்றை பார்கிறான் ஆனால் அவைகளுக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

சாலையில் நடந்து போகிறீர்கள். அந்த சாலையை கடக்கும் ஒருவரை ஒரு வாகனம் இடித்து விடுகிறது. அதை நீங்கள் பார்கிறீர்கள்.

அந்த விபத்துக்கு நீங்கள் சாட்சி. ஆனால், அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இடித்தவன் யாரோ, இடி கொண்டவன் யாரோ. ஆனால், அந்த விபத்து நடந்தபோது நீங்கள் அங்கே இருந்தீர்கள். உங்களுக்குத் தெரியும். அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட ஒரு சுகமோ துக்கமோ இல்லை. வலி இல்லை. ஆனந்தம் இல்லை. பார்த்தீர்கள் , அவ்வளவுதான்.


அதே  போல,உங்கள் வாழ்க்கைக்கும் ஒரு சாட்சியாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிகழ்பனவற்றை ஒரு சாட்சியாக இருந்து பாருங்கள். யாருக்கோ நிகழ்வது போல பாருங்கள். நல்லது நடக்கிறது, தீமை நடக்கிறது...இரண்டையும்  பார்த்துக் கொண்டிருங்கள் , ஒரு சாட்சியைப் போல.

நல்லது நடந்தால் துள்ளாதீர்கள்.

அல்லது நடந்தால் துவளாதீர்கள்.

நடக்கும் சம்பவங்களால் சாட்சி எப்படி பாதிக்கப் படுவது இல்லையோ,அது போல இந்த  உடலுக்கு நிகழ்வதற்கு நீங்கள் பாதிக்கப் பட வேண்டியது இல்லை. நீங்கள் இந்த உடல் இல்லை.

இப்படி ஒரு சாட்சியாக இருக்கப் பழகிக் கொண்டால், ஒரு பற்று அற்ற தன்மை வரும்.

நான் எனது என்ற அஹங்காரம், மமகாரம் விட்டுப் போய் விடும்.

நாளடைவில் நீங்கள் நடந்து செல்வதை, நீங்கள் உறங்குவதை, நீங்கள் உண்பதை நீங்கள் ஒரு மூன்றாம் மனிதனைப் போல, ஒரு சாட்சியைப் போல பார்க்க முடியும்.

அப்புறம் சுகம் ஏது , துக்கம் ஏது ?

அனுமதி தருவோன்....

அப்படி ஒரு சாட்சியாக நீங்கள் இருக்கும் போது , வாழ்க்கையில் நடப்பவைகளில்  எது எவ்வளவு உங்களை பாதிக்கலாம் என்று நீங்கள் அனுமதி தர முடியும். இதற்கு நான் கோபப்படலாமா ? இதை நான் உண்ணலாமா ? இதற்கு நான் சந்தோஷப் படலமா என்று ஒரு தன் உணர்வோடு  செயல் பட முடியும்.

நமக்கு இப்போது சிக்கல் என்ன என்றால், நாம் ஒரு இயந்திரத்தைப் போல வாழ்கிறோம்.  கோபமும், காமமும், இன்பமும், துன்பமும் ஏதோ சுவிட்ச் போட்ட மாதிரி  நிகழ்கிறது. நம் அனுமதி இன்றி நிகழ்கிறது.

நீங்கள் அனுமதித்தா உங்கள் கோபம் வருகிறது ? நீங்கள் அனுமதித்தா காமம் உங்களைப்  பற்றுகிறது ? இல்லை.

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு சாட்சியாகப் பார்க்கும் போது , உங்களுக்கு நிகழ்வதை , அவை எவ்வளவு தூரம் உங்களை பாதிக்கலாம் என்று என்று நீங்கள் அனுமதிக்க முடியும். இவ்வளவு கோபப்படலாம், இவ்வளவு காமம் போதும்,  இத்தனை  ஆசை செல்வத்தின் மீது போதும் என்று எது எவ்வளவு என்று அனுமதிக்கலாம். எல்லாம் அளவு கடந்து போவதால்தானே சிக்கல் எல்லாம் வருகிறது.

அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன்...

தாங்கிப் பிடிப்பவன் என்றால் ஏதோ பளு தூக்குபவன் (weight lifter ) என்று நினைக்கக் கூடாது. தாங்குபவன் என்றால், அனைத்தையும் பெற்றுக் கொள்பவன். இன்பமோ துன்பமோ , அவற்றை அனுபவிக்கும் நேரத்தில் புலன்கள்  செயல்படுகின்றன. அந்த அனுபவம் முடிந்த பின் புலன்களின் வேலை தீர்ந்து விடுகிறது. ஆனால், அந்த அனுபவங்களை சேகரித்து வைத்து, அவற்றின் மூலம் நம்மை மாற்றுவது நம் உள் இருக்கும் நான் என்ற அது. ஒரு அனுபவம் நல்லது என்றால் அதை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. ஒரு அனுபவம் துன்பம் என்றால் அதை விலக்குகிறது . இப்படி அனுபவங்களைச் சேர்த்து, அவற்றை நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்த்து என்று தரம் பிரித்து அவற்றின் மூலம் நம் வாழ்கையை நடத்திச் செல்வது அது.

நாம் நம் அனுபவங்களால் உந்தப் படுகிறோம். நாம் படித்தது, நமக்குச் சொல்லப் பட்டது, நம்மைச் சுற்றி நிகழ்வது போன்றவற்றில் இருந்து நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். அந்த அனுபவங்கள் நம்மை வழி நடத்துகின்றன. யோசித்துப் பார்த்தால் நாம் ஒரு சூழ் நிலைக் கைதிதான். நம் சூழ்நிலையைத் தாண்டி நம்மால் வெளியே வர முடியாது.


அப்படி என்றால், நான் என்பது வெளி உலகின் தொகுப்புத்தான். ஆனால், இதை அறியும் போது , நான் என்பது இவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று என்று புரிபடும். நான் என்பது எனக்குள் செலுத்தப் பட்ட , அனுமதிக்கப்பட்ட எண்ணங்களின் தொகுப்புதான் என்று அறியும் போது , நான் என் சமுதாயத்தை, என் சூழ்நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்று புரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் வேறு, கண்ணாடி என்பது வேறு. திரையிலே காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சியே திரை அல்ல. அதில் விழும் பிம்பங்களைத் தாண்டி திரை என்று ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஒட்டாத நிர்மலமான திரை ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஓடிக் கொண்டிருக்கும்வரை திரை தெரியாது.

அனுபவிப்பவன்...

எது அனுபவிக்கிறது ? புலன்களா ? புலன்கள் தங்களுக்கு வரும் செய்திகளை பெற்று மூளைக்கு அனுப்புகிறது. அதோடு அதன் வேலை தீர்ந்து விட்டது. ஒரு காட்சியைப் பார்க்கிறோம். அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எவ்வளவு வெளிச்சத்தில் இருக்கிறது என்று கண்டு அதற்குத் தகுந்த மாதிரி கண் தன்னை சரி செய்து அந்த பொருளின் பிம்பம் சரியாக விழித் திரையில் விழ வழி செய்கிறது. விழித் திரையில் இருந்து மூளைக்கு செய்தி போகிறது. கண்ணின் வேலை அவ்வளவுதான். புலன்கள் அனுபவிப்பது  இல்லை.

மூளை, வந்த செய்தியை பகுத்துச் சொல்கிறது. இது லட்டு,அது அம்மா, இது புத்தகம், என்று எதை கண் காண்கிறதோ, அது இன்னது என்று இனம் கண்டு கொள்வது மூளை. மூளை அனுபவிக்கிறதா என்றால் இல்லை. அதன் வேலை உள்ளே வரும் செய்திகளை அறிந்து சொல்வது.

அனுபவம் என்பது அதையும் தாண்டி நிகழும் ஒன்று.

ஒரே ஆள், ஒரே பொருள்...ஒரு நாள் இனிமையாக இருக்கிறது, இன்னொரு நாள் எரிச்சலாக இருக்கிறது. ஒரு நாள் மனைவி தேவதைப் போலத் தெரிகிறாள், இன்னொரு நாள் அவளே எரிச்சலை தூண்டுகிறாள். பொருள் ஒன்றுதான், பார்க்கும் கண்ணும், அறியும் மூளையும் ஒன்றுதான் என்றாலும் அனுபவம் மாறுகிறது.

மூளையையும் தாண்டி அனுபவிப்பவன் அவன். அவன் யார் என்று சிந்தியுங்கள்.

மகேசுவரன்

இத்தனையும் செய்பவன் தான் மகேஸ்வரன். மகேஸ்வரன் என்றால் எங்கோ கைலாயத்தில், பாற்கடலில் இருக்கும் யாரோ அல்ல. உங்களுக்குள் இருந்து மேலே சொன்னவற்றை செய்யும் அவன் தான் மகேஸ்வரன்.


இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


அந்த மகேஸ்வரன் வேறு எங்கும் இல்லை, இந்த உடலுக்குள்ளேயே இருக்கிறான்.

அவனை உணருங்கள். அறியுங்கள். தேடுங்கள்.

உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் நோக்கம்.








Tuesday, February 16, 2016

கீதை - 13.21 - நல்லவனாவதும் தீயவனாவதும்

கீதை - 13.21 - நல்லவனாவதும் தீயவனாவதும் 


पुरुषः प्रकृतिस्थो हि भुङ्‌क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥

புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்‌க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் |
காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||


புருஷ: = புருஷன்

ப்ரக்ருதி = பிரகிரிதியில்

ஸ்தோ  ஹி = நிலைத்து நின்று

புங்‌க்தே = உண்கிறான் அல்லது அனுபவிக்கிறான்

ப்ரக்ருதி ஜாந் = ப்ரக்ருதியில் ஜனிக்கும்

குணாந் = குணங்களை

காரணம்  = காரணங்களை

குண ஸங் கோஸ்ய = குண சங்கமங்களோடு தொடர்பு கொண்டு

ஸதஸத் = எப்போதும், மீண்டும் மீண்டும்

யோநி =  கருவறையில்

ஜந்மஸு = ஜன்மம் எடுக்கிறான்

புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான்.  பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான். குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .



நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அதற்கு ஒரு குட்டி பிறந்தது. குட்டி பிறந்த சில நாட்களிலேயே தாய் சிங்கம் இறந்து விட்டது. அங்கிருந்த மான் குட்டிகள் இந்த  குட்டி சிங்கத்தை வளர்த்து வந்தன. இந்த சிங்கமும், தானும் ஒரு மான் குட்டி என்றே  நம்பி , மான் குட்டிகளைப் போல வாழ்ந்து வந்தது.

அப்படி இருக்கும் போது , ஒரு நாள் ....

இன்னொரு பெரிய சிங்கம் இந்த மான்களை வேட்டையாட வந்தது. மற்ற மான்களோடு  இந்த பழைய குட்டி சிங்கமும் பயந்து ஓடியது. வேட்டையாட வந்த  பெரிய சிங்கம், இந்த குட்டி சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது.

"ஏய், நீ ஒரு சிங்கக் குட்டி. ஏன்  இப்படி மான்கள் மாதிரி பயந்து ஓடுகிறாய்" என்றது.

புதியதாய் வந்த சிங்கம் வந்து சொன்ன பின் தான், அந்த சிங்கக் குட்டிக்கு தான் ஒரு  சிங்கம் என்று தெரிய வந்தது.

நீங்களும் ஒரு சிங்கம் தான்.

சிங்கம் என்று தெரியாமல், அறியாமையில் மான் குட்டிகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.  வசிட்டர் என்ற சிங்கம் வந்து சொல்கிறது, நீங்கள் சிங்கம் தான் என்று.

நம்ப கடினமாகத்தான் இருக்கும். ரொம்ப நாள் மான்களுடனேயே வாழ்ந்து விட்டதால்  சிங்கம் என்று உணர சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

இந்த கதைக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்....



"புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான்."  

நான் என்ற என் உள்ளுணர்வு, என் ஞானம், அறிவு, தன் உணர்வு இந்த உடலுக்குள் இருக்கிறது. புருஷன் என்பவன் பிரகிர்தியில் இருக்கிறான். உடலை விட்டு வெளியே இந்த புருஷன் இருக்க முடியாது. உடலின் மூலம் தான் அவன் செயல் பட முடியும்.

மான்களுக்கு மத்தியில் உள்ள சிங்கம் போல.

பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான்.

உடலுக்கு, பிரகிரதிக்கு என்ன என்ன நிகழ்கிறதோ அவன் அதை உணர்கிறான். நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். வெற்றியும் வரும், தோல்வியும் வரும். நல்லது நடக்கும் போது பிரக்ரிதி மகிழ்கிறது. அந்த மகிழ்ச்சியை புருஷன் என்ற நான் உணர்கிறேன்.

மான்களுக்கு நிகழ்வது சிங்கத்துக்கும் நிகழ்வது போல.

குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .

குணங்கள் - ரஜோ, தமோ, தாமச குணங்கள்.

அவற்றின் சங்கமங்களில் - நம் மன நிலை இந்த மூன்று குணங்களின் கலவையாகவே இருக்கிறது. அன்பு, பகை, காதல்,பொறாமை, காமம், கோபம், வெகுளி, கருணை , வெறுப்பு எல்லாம் இந்த மூன்று குணங்களின் வெவ்வேறு விதமான  கலவையே. 

இந்த குணக் கலவையால் மனிதன் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறான். 

பிறக்கிறான் என்பதை உருவாகிறான் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த உலகமும், இந்த குணங்களும், இந்த குணங்களின் கலவைகளும் நீங்கள் அல்ல. 

ஆனால், இவைதான் நான் என்று நாம் நினைத்துக் கொண்டு அவை இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுகிறோம். அவற்றோடு நம்மை தொடர்பு படுத்திக் கொள்கிறோம். 

நீங்கள் இவற்றை எல்லாம் விட உயர்ந்தவர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள், இந்த குணங்கள் தான் நீங்கள் என்று நினைத்து. 

கோபம் வரும் போது , கோபத்தோடு நீங்கள் ஒன்றாகி விடுகிறீர்கள். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்று தெரிவது இல்லை. அதனால் வரும் தீமைகளைச் செய்து   தீயவனாக உருவாகி விடுகிறீர்கள். 

அன்பும், கருணையும் அப்படித்தான். அந்த குணங்களால் உந்தப் பட்டு, நல்லவனாக  உருவாகிரீர்கள். 

இரண்டையும் தாண்டி மேலே போங்கள் . 

இவை அல்ல நீங்கள். 

ஏன் நீங்கள் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறீர்கள் என்றால் இந்த குணங்களோடு ஒன்றிப் போய்   அவை செலுத்தும் இடங்களுக்குச் செல்வதால்.

நான் என்ற எனக்கும், இவற்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான் என்ற இந்த உணர்வு உடலின் உள்ளே இருப்பதால், அதன் மூலம் வெளிப் படுவதால், நீங்கள் இந்த உடலோடு, அந்த உடலுக்கு நேரும் குணங்களோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். 

சிந்தித்துப் பாருங்கள். 

இந்த குணங்களோடு நீங்கள் உங்களைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் யார் என்று, இந்த உயரத்துக் போக முடியும் என்று...




Monday, February 15, 2016

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே 


कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥

கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே |
புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||

கார்ய = செயல்களையும்

கரண = அதன் காரணங்களையும்

கர்த்ருத்வே = உண்டாக்கும்

ஹேது:  = பொருள்

ப்ரக்ருதி = பிரக்ரிதி

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

புருஷ: = புருஷன்

ஸுக² = சுகம்

து³:கா²நாம் = துக்கங்களை

போ⁴க்த்ருத்வே = அனுபவிப்பதில்

ஹேது = பொருள்

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

காரிய காரணங்களை ஆக்குவது பிரக்ரிதி.
சுக துக்கங்களை அனுபவிப்பது புருஷன் 

உலகில் வேறுபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஏற்றத் தாழ்வுகள் என்றும் இருக்கும். நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்ந்தது, சூடு பனி, செல்வம் வறுமை என்று எல்லாம் கலந்ததுதான் இந்த உலகம்.

இந்த வேறுபாடுகள் புற உலகில் இருந்து பிறக்கின்றன.  ஒன்று உயர்ந்து இருக்கிறது, ஒன்று தாழ்ந்து இருக்கிறது. ஒன்று கறுப்பாய் இருக்கிறது, மற்றது சிவப்பாய் இருக்கிறது.

ஆனால், இந்த வேற்றுமைகள் நமது சுக துக்கங்களுக்கு காரணம் அல்ல.

நமது சுக துக்கங்களுக்குக் காரணம் நாம் தான்.

நாம் என்று சொல்லும் போது , புருஷன் என்று முன்னால் பார்த்தோமே அந்த நான். நான் என்று உள் உணர்வு, தன் உணர்வு தான் காரணம்.

எப்படி ?

என்னிடம் ஒரு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என் நண்பனிடம் ஐந்து கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றால், அவனைக் கண்டு எனக்கு பொறாமை, எனக்கு அவ்வளவு இல்லையே என்ற ஏக்கம்,  எப்போது எனக்கும் அவ்வளவு  சொத்து இருக்கும் என்ற கவலை எல்லாம் வருகிறது.

அதே சமயம், இன்னொரு நண்பன் பத்து கோடி சொத்து வைத்து இருந்தால், அவன் ஐந்து கோடி சொத்து வைத்து இருக்கும் நண்பனைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

எனவே, கவலை சொத்தில் உள்ள வேறுபாட்டில் இல்லை. என் மனதில் இருக்கிறது.

என் மனம் அலையும் போது , ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, புற உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசை கொள்ளும் போது சுக துக்கங்களை அனுபவிக்கிறது.

இன்பமும் துன்பமும் வெளியில் இல்லை.

நமக்குள்ளேயே இருக்கிறது.

காரண காரியங்கள் வெளியில் இருக்கிறது...பிரகிரிதியில்
சுக துக்கங்கள் உள்ளே இருக்கிறது ...புருஷனில்

ஸ்லோகத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

கீதையின் எளிமையும், ஆழமும் விளங்கும்.









Saturday, February 13, 2016

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்


प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥


ப்ரக்ருதிம்  புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |
விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||


ப்ரக்ருதிம் = பிரக்ரிதி

புருஷம் = புருஷம்

ச = மேலும்

எவ = அதனால்

வித்தி = அறி

அநாதீ = ஆரம்பம் இல்லாதது

உபா = இரண்டும்

அபி = இப்போது

விகாராந்ஸ் = விகாரங்கள், வேறுபாடுகள்

ச  = மேலும்

குணாந்ஸ் = குணங்கள்

ச எவ = மேலும்

வித்தி = அறி

ப்ரக்ருதி = பிரகிரதியில் இருந்து

ஸம்பவாந் = சம்பவிக்கிறது.



பிரக்ரிதியும், புருஷனும் ஆரம்பம் இல்லாதது. வேறுபாடுகளும், குண மாற்றங்களும் பிரக்ரிதியில் இருந்து பிறக்கின்றன. 

உலகில் துன்பமற்று இன்பமாக வாழ வேண்டும் என்றால் , இந்த உலகைப் பற்றி  நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் எதனால் ஆனது, இன்பமும் துன்பமும் எதனால் உண்டாகின்றன ? துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ்வது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் பிரக்ரிதி மற்று புருஷன் என்ற இரண்டால் ஆனது.

பிரக்ரிதி மற்றும் புருஷன் என்றால் என்ன ?

க்ரு என்றால் உருவாக்குவது. ப்ர என்பது உபசர்க்கம். உயர்வுச் சொல். பிரக்ரிதி என்றால்  உருவாக்கப்பட்டது. அல்லது உருவானது. இந்த உருவானவை என்ற சொல்லுக்குள் நாம், நம் புலன்கள்,  நம்மைச்  சுற்றியுள்ள அனைத்து பொருள்கள் மற்றும்   உயிர்கள் அனைத்தும் அடங்கும்.

என்னுடைய கண் , கண் செய்யும் செயலான பார்வை,
என்னுடைய காது, அது செய்யும் செயலான கேட்பது என்று புலன்களும், அவை செய்யும் செயல்களும் அடங்கும்.

நான் பார்க்கும் பொருள்கள், நான் கேட்கும் ஒலிகள் என்று புலன்களால் அறியப்படும் புற உலகும் இந்த பிரக்ரிதியில் அடங்கும்.

சரி, அப்படி என்றால் புருஷன் என்பது என்ன ?

 என் புலன்கள், என் புலன்கள் செய்யும் செயல்கள், அவை உணரும் இந்த உலகம்  என்று எல்லாம் பிரகிரிதியில் அடங்கும் என்றால் மிஞ்சி இருப்பது எது ?

புருஷன் என்பது என்ன ?

இவற்றை அறியும் அறிவு, இவற்றை அறியும் நான் என்ற அந்த உள்ளுணர்வு, அதுதான் புருஷன்.

இந்த ப்ரகிர்தி மற்றும் புருஷன் இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகம்  பிறக்கிறது.

இதில் எது முதலில்  பிறந்தது,எது இரண்டாவது பிறந்தது என்ற கேள்விக்கு வசிட்டர் விடை தருகிறார்.

இரண்டுமே அநாதியானது. இரண்டுக்குமே பிறப்பு என்பது  எல்லை.இரண்டும் எப்போதுமே ஒன்றாகவே இருக்கின்றன.

"என்று நீ, அன்று நான் " என்று தாயுமானவர் கூறியதைப்  போல.

இந்த உலகம் எத்தனையோ வேறுபாடுகளை கொண்டு இருக்கிறது....

 சூடு, குளிர்ச்சி, உயர்வு , தாழ்வு, பள்ளம் , மேடு, ஏழை ,  பணக்காரன்,அறிஞன், முட்டாள், பலசாலி, பலவீனன், ஆண் , பெண் என்று எத்தனையோ வேறுபாடுகளை உள் அடக்கி  இருக்கிறது.

இந்த வேறு பாடுகள் எங்கிருந்து வருகின்றன ? பிரக்ரிதி என்ற புற உலகில் இருந்தா  இருந்தா ? அல்லது புருஷன் என்று கூறப்படும் என் அகத்தில் இருந்தா ?

குணங்களும், வேறுபாடுகளும் பிரக்ரிதியில் இருந்து தோன்றுகின்றன என்கிறது  கீதை.

அப்படி என்றால் புருஷனின் பங்கு என்ன ?

அது அடுத்த ஸ்லோகத்தில்  வருகிறது.

 


Wednesday, September 23, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா? 
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.

======================== பாகம் 2 =====================================================

என் பக்தன் அறிவான் அறிவான் .

நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதில் ஒரு ஆர்வமும், ஒரு அர்பணிப்பான  (dedicated ) முயற்சியும், அடைய வேண்டும் என்பதில் ஒரு தீராக் காதலும் வேண்டும். அப்படி இருந்தால் தான்  நினைத்ததை அடைய முடியும். ஏனோ தானோ என்று செய்து, வந்தால் வரட்டும்,  வராவிட்டால் போகுது என்று என்று இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்காது. 

உலகில் உள்ள சாதாரண பொருள்களுக்கே அப்படி என்றால், ஒரு இறை தன்மையை அடைய வேண்டும் என்றால்  எவ்வளவு அர்பணிப்பும் (dedication ) ஒரு விருப்பும் இருக்க   வேண்டும் ?

இறை தன்மையை அடைய வேண்டும் என்றால் அதன் மேல் ஒரு விருப்பும், இடையறாத முயற்சியும் வேண்டும் அல்லவா ?

பக்தி என்றால் என்ன ? பக்தி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. காதல், அர்பணிப்பு என்ற பொருள்கள் இந்த இடத்தில் பொருந்தி வரும். 

கண்ணன் மேல் காதலும், அவனை அடைய வேண்டும் என்ற அர்பணிப்பும் இருந்தால் கண்ணனை மட்டும் அல்ல நாமும் கண்ணன் போல ஆகி விடுவோம் என்று கண்ணனே கூறுகிறான். 


 இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 


என் பக்தன் அறிவான் என்றால், ஏதோ கண்ணன் என்ற ஒரு உருவத்தின் மேல் பக்தி கொள்வது என்று அர்த்தம் அல்ல. கண்ணன் என்பது ஒரு நிலை. ஒரு படி. அந்த நிலையின் மேல் பக்தி கொண்டவன் அந்த நிலையை அடைவான் என்கிறான். 

மேலும்,

இறைதன்மையை அடைய வேறு வழி இல்லையா ? படித்து பார்த்து அதன் மூலம் அடைய  முடியாதா  ? ஞான மார்க்கம் உதவாதா ? கர்ம மார்க்கம் உதவாதா ?

பக்தியே அவனை அறியவும், அவன் நிலையை அடையவும் உதவும் என்கிறான். 

பக்தி என்றால் ஏதோ பூஜை பண்ணுவது, கோவிலுக்குப் போவது, மொட்டை அடிப்பது, படியில் உருளுவது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 

பக்தி என்பது காதல். பக்தி என்பது சுயநலம் இல்லாத நிலை. எல்லாவற்றையும் அர்பணிப்பது. அப்படி அன்போடு அர்பணிக்கும் போது மனிதன் இறை நிலை அடைகிறான். 

சித்தமும் சொல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

என்பார் மணிவாசகர். அறிவு செல்லாது. ஞானம் உதாவது. ஆனால் பக்தி என்ற வலையில் அவன் அகப்படுவான் என்கிறார். 

அறிவு, ஞானம், க்ஷேத்ரம் இவற்றை பற்றி பேச வந்த கண்ணன், கடைசியில் என் பக்தன் இதை அறிவான் என்றான். 

அறிவுக்கும் பக்தியே அடிப்படை. 

அறிவு பக்தியில் தான் போய் முடியுமோ ?

கற்றதானால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

என்பார் வள்ளுவர். 

அவனைத் தொழுவது, அவனாகவே ஆக வேண்டும் என்று. 

அறிவு பக்தியில் கொண்டு போய் விடுகிறது. 

பக்தி இறைவனை தொழ வைக்கிறது. 

அந்த பக்தி இறைவனிடம் சேர்பிக்கும் என்கிறது கீதை. 






Sunday, September 20, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான்

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் 


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா?
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.


கீதை - 13.17 - ஞான ஒளி

கீதை - 13.17 - ஞான ஒளி 


ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||

ஜ்யோதிஷம் = ஒளி வடிவானது, அனைத்து ஒளிகளுக்கும் மூலமானது 

அபி = இருந்தும்

தத் = அது

ஜ்யோதிஸ் =  ஒளி தருகிறது

தமஸ: = இருளிலும்

பரம் = உயர்ந்த

உச்யதே = கூறப்பட்டது

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறிதல் 

ஜ்ஞாநக³ம்யம் = அறியப்படுவது

ஹ்ருதி³ = மனதில்

ஸர்வ = அனைத்திலும்

ஸ்யவிஷ்டிதம் = இருப்பது


அது ஒளி வடிவானது. அனைத்து ஒளிகளுக்கும் ஆதாரமானது. 
உயர்ந்தது. இருளையும் அறியச் செய்வது. அதுவே அறிவு, அறிதல் மற்றும் அறியப்படுவது. அனைத்து உயிர்களின் மனதிலும் இருப்பது. 

இது வரை கண்ணன் ஞானத்தையும், ஞான க்ஷேத்ரத்தையும் பற்றி கூறி வந்தான்.

அந்த ஞானம் எங்கே இருக்கிறது, அதன் பலன் என்ன, அதை எப்படி அடைவது என்று  இங்கே சொல்கிறான்.

"அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது".

அது ஒளி வடிவானது. ஒளிகளுக்கெலாம் ஆதாரமானது.

அப்படி என்றால் என்ன ? அது என்ன ஒளி ? சூரிய ஒளியா ? விளக்கின் ஒளியா ?  என்ன  ஒளி அது ?

இங்கு ஒளி என்று சொல்லப் படுவது வெளி உலகின் ஒளி அல்ல. தெளிந்த அறிவே  அல்லது ஞானமே இங்கு ஒளி என்று சொல்லப் படுகிறது.

இப்போது ஸ்லோகத்தின் அர்த்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறது.

நாம் ஒரு பொருளை பார்க்கும் போது என்ன நிகழ்கிறது.

அந்தப் பொருளின் மேல் விழும் ஒளி , பிரதிபலித்து நம் கண்களை அடைகிறது. கண் திறந்து இருந்தாலும், ஒளி வந்து நம் விழித் திரையில் விழுந்தாலும் நம் அறிவு  அது இன்னது என்று அறிந்து சொல்லாவிட்டால் நம்மால் அந்தப் பொருள்  இன்னது என்று அறிய  முடியாது.

விளக்கின் ஒளியோ அல்லது சூரியனின் ஒளியோ அது எந்த ஒளியாக இருந்தாலும்  அந்த ஒளியையும் கண்டு  சொல்லுவது நம் அறிவே. அந்த அறிவே  ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக  விளங்குவது.

அதுவே இருளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.

எந்த வெளிச்சமும் இருளை அறிந்து கொள்ள முடியாது. ஒரு மெழுகுவர்தியின் சுடரிடம் இருள் எப்படி இருக்கும் என்றால் கேட்டால் அதற்குத்  தெரியாது. இருள் என்பதை ஒளி அறியவே முடியாது.

ஆனால் நம் அறிவென்ற ஒளி இருளையும் அறியும்.

அதுவே உயர்வானது.

அந்த அறிவு, ஞானம் இல்லை என்றால் எத்தனை வெளிச்சம் வெளியில் இருந்தாலும்  நம்மால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது.

சரி, இது என்ன பெரிய  விஷயமா . நம் அறிவு நமக்கு உலகை அறிந்து கொள்ள உதவுகிறது. இதைச் சொல்ல கண்ணனும், வியாசரும் வேண்டுமா ?

 வேண்டாம்தான்.

ஆனால், அடுத்து சொல்லப் போகும் விஷயம் மிக மிக முக்கியமானது.

அந்த  அறிவை எப்படி பெறுவது ? எதைப் படித்தால் அதைப் பெற முடியும்  ? எந்த  குரு நமக்கு அதைத் தர முடியும் ?

கண்ணன் சொல்லுகிறான் - அந்த அறிவொளியானது அனைத்து உயிர்களின் மனத்திலும்  இருக்கிறது.

ஞானம் உள்ளே இருக்கிறது.  அது வெளியில் இருந்து வருவது இல்லை.

நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை நாம் அறியாமல்  இருக்கிறோம்.

கீதை , அதை நமக்கு  உணர்த்துகிறது.

நீங்கள் எங்கும் போக  வேண்டாம்.யாரையும் கேட்க வேண்டாம். எதையும் படிக்க  வேண்டாம். உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் இருக்கிறது என்று   நம்புங்கள்.  அதை  உணருங்கள்.

"உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற" என்பார் மணிவாசகர்.

"அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே " என்று அதிசயப்படுகிறார் அபிராமி பட்டர்.

அறிவோம்