கீதை - 13.17 - ஞான ஒளி
ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||
ஜ்யோதிஷம் = ஒளி வடிவானது, அனைத்து ஒளிகளுக்கும் மூலமானது
அபி = இருந்தும்
தத் = அது
ஜ்யோதிஸ் = ஒளி தருகிறது
தமஸ: = இருளிலும்
பரம் = உயர்ந்த
உச்யதே = கூறப்பட்டது
ஜ்ஞாநம் = அறிவு
ஜ்ஞேயம் = அறிதல்
ஜ்ஞாநக³ம்யம் = அறியப்படுவது
ஹ்ருதி³ = மனதில்
ஸர்வ = அனைத்திலும்
ஸ்யவிஷ்டிதம் = இருப்பது
அது ஒளி வடிவானது. அனைத்து ஒளிகளுக்கும் ஆதாரமானது.
உயர்ந்தது. இருளையும் அறியச் செய்வது. அதுவே அறிவு, அறிதல் மற்றும் அறியப்படுவது. அனைத்து உயிர்களின் மனதிலும் இருப்பது.
இது வரை கண்ணன் ஞானத்தையும், ஞான க்ஷேத்ரத்தையும் பற்றி கூறி வந்தான்.
அந்த ஞானம் எங்கே இருக்கிறது, அதன் பலன் என்ன, அதை எப்படி அடைவது என்று இங்கே சொல்கிறான்.
"அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது".
அது ஒளி வடிவானது. ஒளிகளுக்கெலாம் ஆதாரமானது.
அப்படி என்றால் என்ன ? அது என்ன ஒளி ? சூரிய ஒளியா ? விளக்கின் ஒளியா ? என்ன ஒளி அது ?
இங்கு ஒளி என்று சொல்லப் படுவது வெளி உலகின் ஒளி அல்ல. தெளிந்த அறிவே அல்லது ஞானமே இங்கு ஒளி என்று சொல்லப் படுகிறது.
இப்போது ஸ்லோகத்தின் அர்த்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறது.
நாம் ஒரு பொருளை பார்க்கும் போது என்ன நிகழ்கிறது.
அந்தப் பொருளின் மேல் விழும் ஒளி , பிரதிபலித்து நம் கண்களை அடைகிறது. கண் திறந்து இருந்தாலும், ஒளி வந்து நம் விழித் திரையில் விழுந்தாலும் நம் அறிவு அது இன்னது என்று அறிந்து சொல்லாவிட்டால் நம்மால் அந்தப் பொருள் இன்னது என்று அறிய முடியாது.
விளக்கின் ஒளியோ அல்லது சூரியனின் ஒளியோ அது எந்த ஒளியாக இருந்தாலும் அந்த ஒளியையும் கண்டு சொல்லுவது நம் அறிவே. அந்த அறிவே ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக விளங்குவது.
அதுவே இருளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
எந்த வெளிச்சமும் இருளை அறிந்து கொள்ள முடியாது. ஒரு மெழுகுவர்தியின் சுடரிடம் இருள் எப்படி இருக்கும் என்றால் கேட்டால் அதற்குத் தெரியாது. இருள் என்பதை ஒளி அறியவே முடியாது.
ஆனால் நம் அறிவென்ற ஒளி இருளையும் அறியும்.
அதுவே உயர்வானது.
அந்த அறிவு, ஞானம் இல்லை என்றால் எத்தனை வெளிச்சம் வெளியில் இருந்தாலும் நம்மால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது.
சரி, இது என்ன பெரிய விஷயமா . நம் அறிவு நமக்கு உலகை அறிந்து கொள்ள உதவுகிறது. இதைச் சொல்ல கண்ணனும், வியாசரும் வேண்டுமா ?
வேண்டாம்தான்.
ஆனால், அடுத்து சொல்லப் போகும் விஷயம் மிக மிக முக்கியமானது.
அந்த அறிவை எப்படி பெறுவது ? எதைப் படித்தால் அதைப் பெற முடியும் ? எந்த குரு நமக்கு அதைத் தர முடியும் ?
கண்ணன் சொல்லுகிறான் - அந்த அறிவொளியானது அனைத்து உயிர்களின் மனத்திலும் இருக்கிறது.
ஞானம் உள்ளே இருக்கிறது. அது வெளியில் இருந்து வருவது இல்லை.
நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை நாம் அறியாமல் இருக்கிறோம்.
கீதை , அதை நமக்கு உணர்த்துகிறது.
நீங்கள் எங்கும் போக வேண்டாம்.யாரையும் கேட்க வேண்டாம். எதையும் படிக்க வேண்டாம். உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் இருக்கிறது என்று நம்புங்கள். அதை உணருங்கள்.
"உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற" என்பார் மணிவாசகர்.
"அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே " என்று அதிசயப்படுகிறார் அபிராமி பட்டர்.
அறிவோம்
No comments:
Post a Comment