Saturday, September 19, 2015

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும்

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும் 



अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥

அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||


அவிபக்தம் = பிரியாத, பிளவு படாத

 ச = மேலும்

பூதேஷு = அனைத்து உயிர்களிலும்

விப⁴க்தம் = பிரிந்து

இவ = இதே மாதிரி, இது போல

ச = மேலும்

ஸ்திதம் = இருந்து

பூத = உலகை

பர்த்ரு = தாங்கி

ச = மேலும்

தத் = அது

ஜ்ஞேயம் = அறிந்து கொள்

க்ரஸிஷ்ணு  = உள்வாங்கிக் கொள்வது  , கிரகித்துக் கொள்வது 

ப்ர பவிஷ்ணு = உற்பத்தி செய்வது 

ச = மேலும்


உயிர்களில் பிரிந்தும் பிரியாமலும் இருப்பது. அதுவே பூதங்களைத் உருவாக்கிறது, தாங்குகின்றது, பின் உள்வாங்கிக் கொள்கிறது. 


நவீன அறிவியலும், கணிதமும், தர்கமும் நம் அறிவை ஒரே வழியில் செலுத்துகின்றன. முரண்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

எப்படி ஒன்று பிரிந்தும் இருக்கும், பிரியாமலும் இருக்கும்.

உயிர்களை விட்டு பிரியாமல் அவற்றின் உள்ளே இருக்கும், பிரிந்து அவற்றிற்கு வெளியேயும்  இருக்கும் ?

ஒண்ணு உள்ளே இருக்கணும், இல்லை வெளியே இருக்கணும் என்று தான் நம் மனமும்  அறிவும் எண்ணும் .

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின்சாரம் எங்கும் இருக்கிறது. அதுவே ஒரு  விளக்கினுள், ஒரு தொலைக்காட்சி பெட்டியுனுள், ஒரு மின் விசிறியில் செல்லும்போது  அந்த கருவியின் உள்ளே சென்று ஒரு வித செயல் பாட்டைத் தருகிறது. ஒளியாக, நிழற் படமாக, காற்றாக வெளிப் படுகிறது.

மின்சாரம் அந்த கருவிகளுக்கு வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. உள்ளே இருக்கும் போது , எதன் உள் இருக்கிறதோ அதற்கு தகுந்த  மாதிரி செயல் படுகிறது. எப்படி ஒரே மின்சாரம் குளிரவும் வைக்கிறது, சுடவும் வைக்கிறதோ அது போல எங்கும் நிறைந்திருக்கும் அந்த சக்தி ஒவ்வொரு   உயிரிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது.

மின்சாரம் பற்றி அறியாத ஒருவன் என்ன நினைப்பான் ? அது எப்படி ஒரே மின்சாரம் இப்படி மாறுபட்ட செயல்களைச் செய்ய முடியும் ? ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத செயல்களை செய்ய முடியும் என்று நம்ப மறுப்பான். மின்சாரம் பற்றிய அறிவை அடைந்தால், அது விளங்கும்.

அதைத்தான் வியாசர் இங்கு சொல்கிறார்.

மின்சாரம் போன்ற ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவெல்லாம் செய்கிறது தெரியுமா ?

அனைத்து பூதங்களையும் உருவாக்கிறது.
அவற்றை காக்கிறது.
அவற்றை உள் வாங்கிக் கொள்கிறது.

அப்படி ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு அப்புறம் வருவோம்.

அபப்டி ஒரு சக்தி இருக்க முடியும் என்று தோன்றுகிறது அல்லவா ?

அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.








No comments:

Post a Comment