Sunday, September 20, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான்

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் 


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா?
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.


No comments:

Post a Comment