கீதை - 13.15 - அது தூரத்தில் இருக்கிறது. அருகில் இருக்கிறது. - பாகம் 5
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥
ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||
பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே
ச = மேலும்
பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்
அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)
தத் = அது
அவிஜ்ஞேயம் = அறிய முடியாத
தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது
சா = மேலும்
அந்திகே = அருகில் உள்ளது
ச = மேலும் அது
அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.
அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?
ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.
எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?
அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.
முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?
சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?
நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.
இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?
இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?
அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.
இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும் முறைகள் என்று நமக்குப் புரியவரும்.
எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.
எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.
அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?
உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?
இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.
எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.
======================= பாகம் 3 =========================================
உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.
மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.
ஏன் ?
நான்கு பேர் ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.
முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.
அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.
இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.
இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.
இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.
ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.
எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.
புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?
அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.
அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?
உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.
அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.
இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.
அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.
உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.
அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.
இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?
சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.
இதைத்தான் கீதை சொல்கிறது.
அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.
ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.
சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.
சிந்திப்போம்.
===================பாகம் 4 ==============================================
ஸூக்ஷ்மத்வாத் = அது நுண்மையானது.
நுண்மையானது என்றால் என்ன. ரொம்ப ரொம்ப சின்னது என்று அர்த்தமா ?
இல்லை.
லட்டு தின்கிறோம். லட்டு கண்ணுக்குத் தெரிகிறது. அதன் எடை தெரிகிறது. அதன் நிறம் தெரிகிறது. ஆனால் சுவை தெரியாது. அந்த இனிப்பு நுண்மையானது. அந்த இனிப்பு எங்கே இருக்கிறது ? லட்டில் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனாலும் அது தெரிவது இல்லை.
சுவிட்சை ஆன் செய்தால் வெளிச்சம் வருகிறது. வெளிச்சம் வரும் பல்பு தெரிகிறது. அதன் கட்டமைப்பு தெரிகிறது. ஆனால் , அந்த வெளிச்சத்தை உண்டாக்கும் மின்சாரம் தெரியாது. அது நுண்மையானது. அது தான் செயல் படுத்துகிறது. ஆனால் , அது தெரியாது.
ஒருவர் நம்மிடம் பேசுகிறார். அவர் பேசுவது நமக்கு கேட்கிறது. அவர் வாய் அசைவது கண்ணுக்குத் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் அவர் நாக்கு அசைவது கூடத் தெரியும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவர் குரல் நாங்கள் (Vocal chord ) அசைவது கூடத் தெரியலாம். அந்த குரல் நாணை அசையச் செய்வது எது ? அது தெரியாது. அது தான் சப்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால், அது தெரியாது. அது நுண்ணியமானது.
இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், செயல் பாடு தெரியும். செயல் படுத்தும் அந்த சக்தி தெரியாது. அது நுண்ணியமானது.
இந்த உலகம் தெரிகிறது. அதில் உள்ள பொருள்களும், உயிர்களும் தெரிகிறது. அவற்றின் செயல் பாடு தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு நுண்ணிய ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? அதை அறிய வேண்டும். அதை அறிந்தால், அனைத்தும் அறிந்த மாதிரி தான்.
மின்சாரத்தை அறிந்து கொண்டால், அது எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் அல்லவா. ஒவ்வொரு பல்பாகப் போய் சோதனை செய்ய வேண்டாம். எல்லா பல்பிலும் அது அப்படித்தான் வேலை செய்யும் என்று நாம் அறிந்து கொள்வதைப் போல.
உலகத்தின் பின்னால் உள்ள அந்த நுண்ணிய ஒன்றை புரிந்து கொண்டால் எல்லாம் அறிந்து கொண்ட மாதிரிதான்.
இன்னமும் இருக்கிறது இந்த ஸ்லோகத்தில் ...
=================== பாகம் 5 =============================================
தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது
சா = மேலும்
அந்திகே = அருகில் உள்ளது
அது எப்படி தூரத்திலும் அருகிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் ?
சில பேர் மூக்குக் கண்ணாடியை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து விட்டு பேசுவார்கள். பின் சிறிது நேரம் கழித்து , கண்ணாடியை எங்கே வைத்தேன் , எங்கே வைத்தேன் என்று வீடெலாம் தேடுவார்கள். யாரவது வந்து, "என்ன தேடுகிறீர்கள் " என்று கேட்டால், "இந்த மூக்குக் கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன்..எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை ..தேடுகிறேன்" என்பார்கள்.
"அது தான் உங்க நெத்தி மேலேயே இருக்கே " என்று சொன்னவுடன் , "அட , ஆமா இங்கே தான் இருக்கு...இதை விட்டு விட்டு என்கலாமோ தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று அசடு வழிவார்கள்.
சட்டைப் பையில் பேனாவை வைத்துக் கொண்டு, வீடெலாம் தேடுவது இல்லையா...அது போலத்தான்.
புரியாதவரை , அறியாதவரை, அது தூரத்தில்தான் இருக்கும். புரியும் போது , அறியும் போது அது அருகில் இருக்கும். அருகில் என்ன அருகில், உங்களுக்குள்ளேயே இருக்கும். எங்கும் தேட வேண்டாம்.
உள்ளம் பெரும் கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர்.
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
இந்த உடம்பாகிய கோவிலுக்குள்ளே இருப்பான் அவன் என்கிறார்.
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.
எப்போதும் உள்ளேயே இருப்பவன்.
ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க மேலும் மேலும் பொருள் தருவது கீதை.
No comments:
Post a Comment