Wednesday, September 23, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா? 
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.

======================== பாகம் 2 =====================================================

என் பக்தன் அறிவான் அறிவான் .

நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதில் ஒரு ஆர்வமும், ஒரு அர்பணிப்பான  (dedicated ) முயற்சியும், அடைய வேண்டும் என்பதில் ஒரு தீராக் காதலும் வேண்டும். அப்படி இருந்தால் தான்  நினைத்ததை அடைய முடியும். ஏனோ தானோ என்று செய்து, வந்தால் வரட்டும்,  வராவிட்டால் போகுது என்று என்று இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்காது. 

உலகில் உள்ள சாதாரண பொருள்களுக்கே அப்படி என்றால், ஒரு இறை தன்மையை அடைய வேண்டும் என்றால்  எவ்வளவு அர்பணிப்பும் (dedication ) ஒரு விருப்பும் இருக்க   வேண்டும் ?

இறை தன்மையை அடைய வேண்டும் என்றால் அதன் மேல் ஒரு விருப்பும், இடையறாத முயற்சியும் வேண்டும் அல்லவா ?

பக்தி என்றால் என்ன ? பக்தி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. காதல், அர்பணிப்பு என்ற பொருள்கள் இந்த இடத்தில் பொருந்தி வரும். 

கண்ணன் மேல் காதலும், அவனை அடைய வேண்டும் என்ற அர்பணிப்பும் இருந்தால் கண்ணனை மட்டும் அல்ல நாமும் கண்ணன் போல ஆகி விடுவோம் என்று கண்ணனே கூறுகிறான். 


 இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 


என் பக்தன் அறிவான் என்றால், ஏதோ கண்ணன் என்ற ஒரு உருவத்தின் மேல் பக்தி கொள்வது என்று அர்த்தம் அல்ல. கண்ணன் என்பது ஒரு நிலை. ஒரு படி. அந்த நிலையின் மேல் பக்தி கொண்டவன் அந்த நிலையை அடைவான் என்கிறான். 

மேலும்,

இறைதன்மையை அடைய வேறு வழி இல்லையா ? படித்து பார்த்து அதன் மூலம் அடைய  முடியாதா  ? ஞான மார்க்கம் உதவாதா ? கர்ம மார்க்கம் உதவாதா ?

பக்தியே அவனை அறியவும், அவன் நிலையை அடையவும் உதவும் என்கிறான். 

பக்தி என்றால் ஏதோ பூஜை பண்ணுவது, கோவிலுக்குப் போவது, மொட்டை அடிப்பது, படியில் உருளுவது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 

பக்தி என்பது காதல். பக்தி என்பது சுயநலம் இல்லாத நிலை. எல்லாவற்றையும் அர்பணிப்பது. அப்படி அன்போடு அர்பணிக்கும் போது மனிதன் இறை நிலை அடைகிறான். 

சித்தமும் சொல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

என்பார் மணிவாசகர். அறிவு செல்லாது. ஞானம் உதாவது. ஆனால் பக்தி என்ற வலையில் அவன் அகப்படுவான் என்கிறார். 

அறிவு, ஞானம், க்ஷேத்ரம் இவற்றை பற்றி பேச வந்த கண்ணன், கடைசியில் என் பக்தன் இதை அறிவான் என்றான். 

அறிவுக்கும் பக்தியே அடிப்படை. 

அறிவு பக்தியில் தான் போய் முடியுமோ ?

கற்றதானால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

என்பார் வள்ளுவர். 

அவனைத் தொழுவது, அவனாகவே ஆக வேண்டும் என்று. 

அறிவு பக்தியில் கொண்டு போய் விடுகிறது. 

பக்தி இறைவனை தொழ வைக்கிறது. 

அந்த பக்தி இறைவனிடம் சேர்பிக்கும் என்கிறது கீதை. 






No comments:

Post a Comment