Monday, March 27, 2017

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை 


नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः।
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मणः॥८॥

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: ||3-8||

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக

குரு = செய்தல்

கர்ம = கர்மங்களை

த்வம் = நீ

கர்ம = செயல்களை

ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக

ஹி = அதனால்

அகர்மண: = செயலன்றி இருப்பது

ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம் 

அபி = இருந்தும்

ச = மேலும்

தே = உன்

ந = இல்லை

ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது 

அகர்மண: = செயலன்றி இருந்தால்

உனக்கென்று விதிக்கப்பட்ட செயல்களை நீ தவறின்றி செய். உடலின் இயற்கை என்பது  செயல் செய்வது. செயல் செய்யாமல் இருந்தால் உடலைக் கூட பராமரிக்க முடியாது.  வேலை செய்வது என்பது வேலை செய்யாமல் இருப்பதை விட உயர்ந்தது. 

நமது வாழ்க்கை ஒரே சீராக போய் கொண்டிருக்கும் வரை கவலை இல்லை.

எங்காவது சிக்கல் வந்து விட்டால் , கொஞ்சம் முயன்று பார்ப்போம். நண்பர்கள் , உறவினர்கள் உதவியை நாடுவோம். அதிலும் நடக்கவில்லை என்றால், நம்மால் முடியாது என்று தளர்ந்து விடுவோம்.


"என்னால் முடியாது. எல்லா முயற்சியும் செய்தாகி விட்டது. ஒண்ணும் நடக்கல. என்ன என்ன செய்வது . என்னை விட்டு விடுங்கள் . என்னால இவ்வளவுதான் முடியும் . எல்லாம் விதி விட்ட வழி. இதுக்கு மேல என்ன செய்ய முடியும் " என்று நாம் தளர்ந்து விடும் சமயங்கள் உண்டு.

தோல்வி வரும். கஷ்டங்கள் வரும். எதிர்ப்பு வரும். தட்டுப் பாடு வரும். ஏமாற்றங்கள் வரும்.

இவை எல்லாம் வரும் போது நம் கடமையை நாம் விட்டுவிட நினைப்போம்.


அர்ஜுனனுக்கு அப்படி ஒரு சங்கடம் வந்தது. எதிரில் சண்டையிட நிற்பவர்கள் எல்லோரும் உறவினர்கள், வித்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர். அவர்களை எதிர்த்து எதிர்த்து போர் செய்ய முடியாமல் தவிக்கிறான். நான் சந்நியாசியாக போய் விடுகிறேன். ஞான மார்கத்தில் போகிறேன் . என்னை விட்டு விடு கிருஷ்ணா என்று மன்றாடுகிறேன்.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்கிறான். நமக்கும் தான்.

நீ கடமையை விட்டு செல்ல முடியாது. மற்ற எல்லாவற்றையும் விடு. கடமையை செய்யாவிட்டால் உன் உடலைக் கூட உன்னால் சரிவர போற்றி பாதுகாக்க முடியாது. வேலை செய்வது என்பது செய்யாமல் இருப்பதைவிட உயர்ந்தது என்கிறான்.


கடமையைச் செய்வது என்பது நம் இயற்கை. நாம் ஏதோ நம் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உடலின் இயற்கை வேலை செய்வது.

முடிந்தால் ஒரு நாலு நாள் ஒரு வேலையும் செய்யாமல் இருந்து பாருங்கள்.

உண்ட உணவு செரிக்காது. தூக்கம் வராது. என்னவோ போல் இருக்கும். வேலை செய்து கொண்டே இருந்தால் இந்த சிக்கல் எதுவும் வராது.

உடலை விடுங்கள்.

நமது வாழ்வில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் எங்கோ நாம் நம் கடமைகளை  சரியாக செய்யாமல் விட்டதுதான்.

படிக்காமல் விட்டதால், நல்ல மதிப்பெண், நல்ல வேலை , நல்ல சம்பளம் கிடைக்கவில்லைல்.

சரியான உடற்பயிற்சி செய்யாததால் நோய் வருகிறது.

அலுவலகத்தில் , வீட்டில், வெளியில் சரியாக செய்யாமல் விட்ட கடமைகள் நமக்கு துன்பத்தைத் தேடித் தரும்.

தூக்கம் வராத ஒவ்வொரு இரவுக்கும் பின்னால் செய்யத் தவறிய கடமை ஏதோ ஒன்று இருக்கும்.

சில சமயம் வேலை ஒன்றும் செய்யாமல், சும்மா ஜாலியாக இருப்பது சுகமாக இருப்பது  போலத் தெரியும். உண்மையில் அது அப்படி அல்ல.

வேலை செய்வதுதான் உயர்ந்தது. சிறந்தது.

எத்தனை சிக்கல் வந்தாலும். எத்தனை தடங்கல் வந்தாலும். எத்தனை ஏமாற்றங்கள், சலிப்புகள், ஏளனங்கள் வந்தாலும்...உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதிலிருந்து வேறு வழியே இல்லை.

உடலும், மனமும் செம்மையாக இருக்க வேண்டுமா ?

உங்கள் கடமை எதுவோ அதை விடாமல் செய்யுங்கள்.

வெற்றிக்கும், இன்பமயமான வாழ்வுக்கும் அது ஒன்றே வழி.

உங்கள் கர்மத்தை உங்கள் வாழ்க்கையோடு இரண்டற கலந்து விடுங்கள்.

வெற்றி வந்தாலும் சரி, தோல்வி வந்தாலும் சரி ...உங்கள் கர்மத்தை நீங்கள் செய்து கொண்டே போங்கள்.

கர்மம் தான் வாழ்க்கை. வாழ்க்கை தான் கர்மம்.

அதுதான் கர்ம யோகம். 

No comments:

Post a Comment