Sunday, March 26, 2017

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?


यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते॥७॥

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந|
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே ||3-7||


ய = எவன்

து = ஆனால்

இந்திரியாணி = புலன்களை

மநஸா = மனதால்

நியம்யா = கட்டுப்படுத்தி

ஆரம்பதே = தொடங்குகிறானோ

அர்ஜுந = அர்ஜுனா

கர்மேந்த்ரியை: = புலன்களால் காரியங்கள் செய்கிறானோ

கர்மயோக = கர்மயோகத்தின் மூலம்

அஸக்த:  = பற்றில்லாமல்

ஸ = அவன்

விஸிஷ்யதே = சிறந்தவன்


அர்ஜுனா, எவன் ஒருவன் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி , பற்றற்று கர்மங்களை செய்கிறானோ 

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

இந்த சுலோகம் ஒரு மிக முக்கியமான செய்தியை கூறுகிறது. பற்றற்று காரியம் செய் என்கிறது.  எவ்வளவு சிந்தித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இந்த பற்றற்று காரியம் செய்வது. பின் ஏன் கீதை அதை சொல்கிறது ?

யாரால் பற்றற்று செய்ய முடியும் ?

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் என்ன  வேறுபாடு ?

விலங்குகள் புலன்களால் உந்தப்பட்டு காரியங்களை செய்கின்றன. அவற்றிற்கு நேரம்,  இடம்,  பொருள், அளவு,  நல்லது கெட்டது  என்று எதுவும் கிடையாது . கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று  வாழ்பவை.

மனிதர்கள் அப்படி அல்ல. இந்த வித்தியாசங்கள் அறிந்தவர்கள்.

அவர்களின் புலன்களை அவர்கள் அறிவால் கட்டுப்படுத்த  தெரிந்தவர்கள்.

தவறு என்று அறிவு    சொன்ன பின்னும் புலன் ஆசைகளால் ஒன்றைச் செய்பவன் கீழான மனிதன்.

அறிவு  சொல்கிறது அந்த குளிர் பானத்தை குடிக்காதே என்று,  நாக்கு சொல்கிறது அதை குடி என்று.

நாக்கு சொல்வதை கேட்பவனா? அறிவு சொல்வதை கேட்பவனா ? எவன் சிறந்தவன் ?

சந்தேகம் இல்லாமல் அறிவின் சொல்படி நடப்பவன் சிறந்தவன்.

அறிவின் சொல்படி கேட்டு நடப்பதிலும், செய்யும் செயல்களின் பலன்களை எதிர்பாராமல் விருப்பு வெறுப்பு இன்றி எவன் செயல் படுகிறானோ அவன் சிறந்தவன்.

கர்ம யோகத்திற்கு உண்டான விதிகளை இந்த ஸ்லோகமும் இதற்கு முந்தைய சுலோகமும் தருகிறது

1. மனதை அடக்காமல் புலன்களை அடக்கி பலன் இல்லை.

2. அறிவு/மனம் புலன்களை செலுத்த வேண்டும்.

3. பற்று அற்று காரியங்களை செய்ய வேண்டும்.

இவற்றை செய்பவன் கர்ம யோகி.  மனிதர்களில் சிறந்தவன் என்கிறது கீதை

முதல் இரண்டும் ஒருவாறு நமக்கு புரிகிறது.

இந்த மூன்றாவதுதான் கொஞ்சம் தகராறு பண்ணுகிறது. பற்று அற்று எப்படி காரியம் பண்ண முடியும். பலனை எதிர்பார்க்காமல் எப்படி காரியம் பண்ண முடியும் ?

ஒரு குழந்தை பொம்மையை வைத்து விளையாடும். யார் கேட்டாலும் தராது. இறுகப் பற்றிக் கொள்ளும்.   கொஞ்ச நேரம் கழித்து, அந்த பொம்மையை கட்டி பிடித்தபடி உறங்கிவிடும். தூக்கம் வர வர கை நெகிழ்ந்து பொம்மையை விட்டு விடும்.

நெகிழ்வு வர பற்று விடும்.

மனம் கல்லாய் இருக்கும்போது, இறுகிக் கிடக்கும். பற்று விடாது.

மனம் நெகிழும்போது பற்று விடும்.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி.

பற்றற்று காரியம் செய்ய வேண்டுமானால் மனம் நெகிழ வேண்டும். சுயநலம் தலை தூக்கி நிற்கும் வரை பற்று விடாது..

ஒரு தாய் தன்  குழந்தைக்கு எவ்வளவோ செய்கிறாள்...பலன் எதிர்பார்த்தா செய்கிறாள் ...பலன் எதிர்பார்க்காமல் செய்கிறாள் ...ஏன் ? பிள்ளை என்ற அன்பு, மன நெகிழ்வு ....

மனதில் அன்பு ததும்பும்போது செயலில் ஆர்வம் இருக்கும், பலனில் ஆர்வம் இருக்காது.

அன்பு எல்லைகளை தள்ளிபோடும், அல்லது அழித்துப் போடும்.

தான் என்ற குறுகிய வட்டம் விரிந்து விரிந்து ஒரு நாள் இல்லாமலே போகும்.

தர்மம் பண்ணுவது, ஏழைக்கு உதவுவது, இரத்த தானம் பண்ணுவது, இப்படி ஒரு சில காரியங்களை  நாம் பலன் எதிர்பாராமல் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இந்த காரியங்களுக்கு எல்லாம் அடிப்படை அன்பு, கருணை.


அன்பு வரும்போது, இராஜ்யத்தின் மேல் பற்று இல்லாமல், தம்பியிடம் கொடுத்துவிட்டு  சிரித்துக் கொண்டே கானகம் போக முடியும்.

அன்பு இல்லாதபோது, ஊசி முனை அளவு நிலம் கூட தரமாட்டேன் என்று உலகளந்த  பெருமாளையே உதாசீனம் படுத்தி, தம்பிகளை போர் முனையில் கொண்டுவந்து  நிறுத்தும். மண்ணின் மேல் உள்ள பற்று.

கர்ம யோகத்தின் அடிப்படை அன்பு. கருணை. அருள். 

தன்னை கடந்து, தன் குடும்பத்தை கடந்து, ஊர், நாடு எல்லைகளை கடந்து எல்லோரையும் நேசிக்கும் அன்பு.

பற்றற்ற செயலின் அடிப்படை அன்பு. 

No comments:

Post a Comment