கீதை - 3.10 - தியாகம் எல்லாம் தரும்
सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्॥१०॥
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக் ||3-10||
ஸஹயஜ்ஞா: = வேள்வியுடன்
ப்ரஜா: = மனித குலம்
ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு
புரோ = முன்பு
உவாச = கூறினான்
ப்ரஜாபதி:| = பிரமன்
அநேந = இதன் மூலம்
ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்
இஷா = அது
வ = உங்கள்
அஸ்து = இருக்க வேண்டும்
இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்
||3-10||
வேள்வியின் மூலம் உலகைப் படைத்த பிரமன் கூறினான் இதன் மூலம் நீங்கள் பல்கி பெருகுவீர்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் இது தரும்.
வேள்வி என்றால் சுயநலமின்மை என்று பார்த்தோம். யக்யம் என்ற சொல்லுக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.
இந்த உலகம் தொடங்கி , நிகழ்வது அர்பணிப்பான காரியங்களால்.
சுயநலமே அத்தனை அழிவுக்கும் காரணமாய் இருக்கிறது. ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின், ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாய் இருப்பது இந்த சுயநலமே.
உங்களிடம் சில திறமைகள் இருக்கும் - நன்றாக பாடுவது, நன்றாக சமைப்பது, நன்றாக நிர்வாகம் பண்ணுவது, வண்டி ஓட்டுவது, இப்படி ஏதோ ஒரு திறமை எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
இந்த திறமை எனக்குமட்டும்தான் பயன்பட வேண்டும். நான் இதன் பயனை யாருக்கும் தர மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே பாடி கேட்டு இரசித்து கொண்டும், நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டும், உங்கள் வீட்டை, உங்கள் நிதியை மட்டும் நீங்கள் நிர்வகித்து கொண்டும் இருந்தால் என்ன ஆகும் ?
உங்களுக்கு ஒரு சந்தோஷமோ, நிம்மதியோ, பண வரவோ, புகழோ இருக்காது.
எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் பேரும் புகழும் செல்வமும் அடைவீர்கள்
Super Star என்றால் உலகம் முழுவதும் நிறைய பேர் அவருடைய திறமையால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம்.
கொடுங்கள். உங்கள் திறமை உலகெங்கும் பரவட்டும். அத்தனை பேருக்கும் பயன்படட்டும்.
எவ்வளவு பேருக்கு உங்கள் திறமை பயன்படுகிறதோ, அவ்வளவு உங்களுக்கு நல்லது.
உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படவேண்டும் என்று நினைத்துக் கொடுங்கள். எந்த வேலை செய்தாலும் இது பலருக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்து செய்யுங்கள். எனக்காக, எனக்கு கிடைக்கும் சம்பளத்துக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
சமுதாய நன்மைக்காக, உலக நன்மைக்காக என்று செய்யுங்கள்.
அப்படி செய்தால் என்ன நிகழும் ?
ஒன்று, தீய செயல்கள் செய்யும் எண்ணம் வரவே வராது. உலகில் யாருமே தீமை செய்யாவிட்டால் உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.
அடுத்தது, மற்றவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து செய்யும் செயலில் எவ்வளவு நல்லது விளைந்தாலும் அது நல்லதுதானே. அதில் வெற்றி , தோல்வி என்று ஒன்றும் கிடையாது.
மூன்றாவது, வெற்றி தோல்வி இல்லாவிட்டால் , ஏமாற்றம், குழப்பம், பொறாமை என்று எதுவும் இருக்காது. யாருக்கு பெயர் கிடைத்தால் என்ன என்ற எண்ணம் வரும்.
அந்த எண்ணம் கற்பக மரம், காமதேனு போல் நீங்கள் கேட்டது எல்லாம் தரும். நீங்கள் பல்கி பெருகுவீர்கள்.
சரி, இதெல்லாம் நடை முறையில் சரிப்பட்டு வருமா ? என்ற கேள்விக்கு ஒரே விடைதான் இருக்கிறது.
நம்புங்கள். முயன்று பாருங்கள். ஒரு சில நாள் அப்படி இருந்து பாருங்கள். உங்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று பாருங்கள். முடிந்தால் தொடருங்கள்.
கீதை சொல்கிறது. தவறாக இருக்க வழி இல்லை. முயன்று பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே ?
No comments:
Post a Comment