கீதை - 3.5 - எது என் கடமை ?
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः॥५॥
ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்|
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: ||3-5||
ந = இல்லை
ஹி = அதனால்
கஸ்சித் = ஒருவன்
க்ஷணம் = ஒரு நொடி கூட
அபி = இப்போது
ஜாது= ஒருபோதும்
திஷ்டதி = நிலையாக இருத்தல்
அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்
கார்யதே = செயல் என்பது
ஹி = அது
அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக
கர்ம = செயல்
ஸர்வ: = அனைத்து
ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்
குணை: = குணங்களில் இருந்து
செயல் புரியாமல் யாரும் ஒரு நொடி கூட இருக்க முடியாது. இயற்கை குணங்களே செயல்களை தீர்மானிக்கிறது.
இந்த சுலோகம் சில முக்கியமான, மிக முக்கியமான விஷயங்களை தெரிவிக்கிறது.
கடமையை செய், கடமையைச் செய் என்று கீதை சொல்கிறது.
எது என் கடமை ? என் கடமை எது என்று நான் எப்படி அறிந்து கொள்வது ? யார் எனக்கு சொல்வார்கள். என் கடமை என்ன என்று தெரியாமல் நான் எப்படி அதைச் செய்வது.
அதிலும் கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே என்று வேறு கீதை கூறுகிறது.
கடமையே என்ன என்று தெரியவில்லை. இதில் பலனை வேறு எதிர் பார்க்காதே என்றால் என்ன செய்வது.
கீதை அப்படி நம்மை கண்ணை கட்டி காட்டில் விடவில்லை.
நம் கடமை எது என்பதை கண்டு கொள்ள வழி சொல்கிறது.
செயல்கள், இயற்கையான குணங்களால் நிகழ்கிறது என்கிறது கீதை.
நம் செயல்கள், கர்மம் நமது இயற்கையான குணங்களால் நிகழ்கிறது.
எனவே, நமது இயற்கையான குணம் என்ன என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நாம் தான் செய்ய வேண்டும்.
என் குணம் என்ன ?
நான் உடல் உழைப்பு உள்ளவனா ?
எனக்கு படிப்பதில், சிந்திப்பதில், ஆராய்ச்சியில் எனக்கு நாட்டம் இருக்கிறதா. அதுவா என் குணம்.
எனக்கு பாடுவது, ஆடுவது, விளையாடுவது போன்றவற்றில் நாட்டம் இருக்கிறதா ? அப்படி என்றால் அதுதான் என் இயற்கை குணம்.
எனக்கு கதை எழுதுவதில், கவிதை எழுதுவதில் நாட்டம் இருக்கிறதா ... அப்படி என்றால் அதுதான் என் குணம்.
நான் என்ன செய்தாலும், என் இயற்கை குணம் என்னை இழுக்கும்.
என் இயற்கை குணத்திற்கு எதிராக நான் வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தால் என் குணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடை வெளி வந்து விடும்.
இயற்கையான குணத்தில் இருந்து நான் ஒரு வேலை செய்தால் அது எனக்கு மிக இன்பமான ஒன்றாக இருக்கும்.
புகை படம் எடுப்பது, தோட்டம் போடுவது, பாடுவது, படம் வரைவது, ஊர் சுற்றுவது, கற்றுத் தருவது என்று எது என் இயற்கை குணமோ, அதன் அடிப்படையில் நான் காரியம் செய்தால் எனக்கு வெற்றி தோல்வி என்று ஒன்றும் கிடையாது. நான் செய்யும் தொழிலே எனக்கு இன்பமயமாகி விடுகிறது. அதன் மூலம் எனக்கு வருமானம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, புகழ் வந்தாலும் சரி , புகழ் வராவிட்டாலும் சரி நான் சந்தோஷமாக இருப்பேன்.
பலன் என்பது இரண்டாம் பட்சமாகிப் போகிறது.
வேலை ஒன்றே குறிக்கோளாகி விடுகிறது.
தியாகராஜர் , இராமன் மேல் கீர்த்தனைகள் பாடினார். காசுக்கோ, புகழுக்கோ அவர் பாடவில்லை. பாடுவது அவர் இயல்பு. இயல்பாய் இருந்தார். அவ்வளவுதான்.
நாம் நம் பிள்ளைகளை அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய விடுவது இல்லை. அதைப் படி, இதைப் படி என்று வற்புறுத்துகிறோம்.
அது தவறு.
அவர்களே கண்டுபிடிக்கட்டும். அவர்களின் இயற்கையான குணம் என்ன, அதிலிருந்து பிறக்கும் காரியம் என்ன என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.
தனிமையில் இருந்து சிந்தியுங்கள். உங்கள் இயற்கையான குணம் என்ன என்று. உங்கள் செயலுக்கும், உங்கள் குணத்திற்கும் எவ்வளவு இடைவெளி என்று பாருங்கள். இடைவெளி குறைய குறைய நீங்கள் ஒரு பூர்ணத்வம் பெறுவீர்கள்.
குணம் வேறு , செயல் வேறாக பிரிந்து கிடைக்கும் நீங்கள் ஒன்று படுவீர்கள். அதுவே பூர்ணத்வம்.
என் கடமை என்ன என்று மற்றவர்களை கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படித் தெரியும்.
உங்கள் இயற்கை குணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். மற்றவை தானே வரும். உங்களை நீங்கள் முதலில் அறிய வேண்டும்.
சரி...
குணமும் செயலும் மாறுபட்டால் என்ன ஆகும் ?
அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான் கண்ணன்.
No comments:
Post a Comment