Wednesday, March 22, 2017

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும்

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும் 


न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥

ந கர்மணாமநாரம்பா ந்நைஷ்கர்ம்யம் புருஷோஸ்நுதே|
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||3-4||

ந = இல்லை

கர்மணாம் = கர்மம்

அந் - ஆரம்ப = தொடங்காமல் இருந்தால் 

ந்நைஷ்கர்ம்யம் = பற்றற்ற கர்மம்

புருஷ = ஒருவன்

அஸ்நுதே| =  அடைவதில்லை

ந = இல்லை

ச = மேலும்

ஸந்ந்யஸ = துறப்பதன் மூலம் 

ஏவ = நிச்சயமாக

ஸித்திம்  = வெற்றி

ஸமதிகச்சதி = அவன் அடைகிறான்


தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் முழு நிறைவு அடைய மாட்டான்.


தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம்  பெற்றுவிட மாட்டான்.

துன்பத்தின் மூலம் எது ? எதிலிருந்து துன்பம் வருகிறது ? எப்படி துன்பத்தில் இருந்து விடுபடுவது ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.

கீதை இன்னும் ஆழமாக சிந்திக்கிறது.

ஆசை எப்படி வருகிறது ?

ஒரு பொருளை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பதால் ஆசை வருகிறது.

நாம் ஒரு பொருளை பற்றி அல்லது ஒரு விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்காமல் இருந்தால் அதன் மேல் ஆசை வருவது இல்லை. ஆசை, கோபம், மறதி, மனக் குழப்பம், நிம்மதி இன்மை, துன்பம் என்று தொடர் சங்கிலியாக சிந்தனையில் இருந்து துன்பம் வருகிறது.

இதை நாம் இரண்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.

விட்ட இடத்தில் தொடர்கிறான் கிருஷ்ணன்.

நாம் எப்போது ஒரு பொருளை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம் ?

எப்போது அது நம்மிடம் தேவையான அளவு இல்லையோ அப்போது நாம் அதை பற்றி  சிந்திக்க தொடங்குகிறோம்.

பணம் இருக்கிறது நம்மிடம். ஆனால் அது போதாது என்று நினைக்கிறோம். அதை பற்றிய சிந்தனை நம் மனதை , அறிவை ஆக்கிரமிக்கிறது.

எப்படி மேலும் பணம் சேர்ப்பது என்று யோசிக்கிறோம். அதில் முதலீடு செய்வோமா? இதை வாங்குவோமா, அதை விற்போமா, என்று செயல் பட தொடங்குகிறோம்.

பணம், அன்பு, காதல், அதிகாரம், புகழ் என்று எதை எடுத்துக் கொண்டாலும் செயல்பாடு ஒன்றுதான்.

சிந்தனை, சிந்தனையில் இருந்து ஆசை, ஆசையில் இருந்து செயல் பிறக்கிறது.

வெறும் செயலை மட்டும் நிறுத்தி உபயோகம் இல்லை.. நிறுத்தவும் முடியாது.

சிந்தனை பின் புலத்தில் செயல் படுத்திக் கொண்டே இருக்கும்.

மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதைத்தான் கிருஷ்ணன் இங்கே சொல்கிறான்

தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

செயலை செய்யாமல் இருப்பதன் மூலம் ஒருவன் செயலற்ற நிலையை அடைவது இல்லை. மனமும் , அறிவும் செயல் பட்டு கொண்டு இருக்கும் வரை வெறுமனே புலன்களை அடக்கி வைபதன் மூலம்  ஒருவன் செயலற்ற நிலையை  அடைவது இல்லை.

செயலை மட்டும் துறந்தால் போதாது.      வெறும் செயலை துறந்தவன் நிலை மிகவும் துன்பமயமானது.

மனம் அது வேண்டும், இது வேண்டும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும். அறிவு , அவற்றை பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் பட தூண்டும். ஆனால், இவனோ ஞானமே சிறந்தது என்று நினைத்துக் கொண்டு செயல் படாமல் இருப்பான். தனக்குள்ளேயே பெரிய யுத்தம் நடந்து கொண்டு இருக்கும். கிடைக்கவில்லை என்றால் வருந்தும். கிடைத்தால் அதை விட அதிகமாக வேண்டும் என்று மேலும் ஆசைப் படும்.  இதற்கு ஒரு  முடிவே இல்லை.

சிந்தனை , மனம் ஓடிக் கொண்டே இருக்கும் வரை, செயல் இருக்கத்தான் செய்யும்.

எங்கே ஒரு நிமிடம், கண்ணை மூடி , செயலற்று இருந்து பாருங்கள். மனம் காற்றாக பறக்கும். ஆயிரம் எண்ணங்கள் அலை பாயும்.

கர்மயோகத்தின் முதல்படி மன அடக்கம்.

அது எப்படி முடியும் ?



No comments:

Post a Comment