Wednesday, March 22, 2017

கீதை - 3.3 - இரண்டு யோகங்கள்

கீதை - 3.3 - இரண்டு யோகங்கள் 


श्रीभगवानुवाच
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥

ஸ்ரீபகவாநுவாச
லோகேஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக| 
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்மயோகேந யோகி நாம் ||3-3||


ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

லோகே = இந்த உலகில்

அஸ்மிந் = இதில்

த்விவிதா = இரண்டு

நிஷ்டா = நிலைகள், வழிகள் உள்ளன

புரா  = பழமையான

ப்ரோக்தா = சொல்லப்பட்ட

மயா = என்னால்

அந் நக = பாவம் இல்லாதவனே


ஜ்ஞாநயோகேந = ஞான யோகம்

ஸாங்க்யா நாம்= சாங்கியர்களால் கூறப்பட்டது

கர்மயோகேந = கர்மயோகம்

யோகி நாம் = யோகிகளால் கூறப்பட்டது


கண்ணன் சொல்லுகிறான்...பாவம் ஒன்றும் இல்லாத அர்ஜுனா, இந்த உலகில் இரண்டு வழிகள் உள்ளன...அவை, சாங்கியர்களால் கூறப்பட்ட ஞான யோகம், யோகிகளால் கூறப்படும் கர்ம யோகம். 


ஞான மார்கமா, கர்ம மார்கமா நான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொல்லு என்று அர்ஜுனன் முந்தைய ஸ்லோகத்தில் கேட்டான்.

இதுதான் சிறந்தது என்று கிருஷ்ணன் சொல்லவில்லை.

நாம் கேட்டதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இறைவனுக்கு இருக்கிறதா என்ன ?

கேள்வியே தவறு என்றால் எப்படி விடை தருவது ?


"நான் உனக்கு இரண்டு வழிகளை சொன்னேன்....ஒன்று சாங்கியர்களின்  ஞான யோகம், மற்றது யோகிகளின் கர்ம யோகம்...."

இரண்டில் ஒன்று எது சிறந்தது என்று கிருஷ்ணன் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் இருக்கலாம்.

சொல்லவில்லை.

எனவே, எது சிறந்தது என்ற கேள்வி இன்னும் விடை இல்லாமலே  போய் கொண்டிருக்கிறது.

நமக்கென்று உள்ள கடமைகளைச் செய்கிறோம். வேலைக்குப் போகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இன்னும் நிறைய பணம் வேண்டி இருக்கிறது. பெரிய வேலை, பதவி உயர்வு, மேலும் பொறுப்புகள்..மேலும் பணம்....மேலும் உழைப்பு என்று இப்படி வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது....

இது எங்கு போய் முடியும்...ஒரு காலகட்டம் வரும்...இதுவரை என்ன செய்தோம் என்ற கேள்வி வரும்...பணம் கையில் இருக்கும், அனுபவிக்க வயதோ, உறவுகளோ இருக்காது....வாழ் நாள்  எல்லாம் இதில் போய் விட்டதே என்ற வருத்தம் வரும்.

சரி , அதுக்காக வேலைக்குப் போகாமல் , பணம் சம்பாதிக்காமல், வாழ்வில் முன்னேறாமல், அப்படியே இருக்க முடியுமா ? அதுவும் முடியாது.

பின் என்ன தான் வழி ?

இந்த வேலை, பணம், சொத்து இவற்றை எல்லாம் தாண்டி வேறு ஏதோ ஒன்று இருக்கறதா என்று  அறியத் தலைப் பட வேண்டும் ? இல்லை, அது எல்லாம் ஒன்று இல்லை...பணம், பொருள் ஒன்றுதான் வாழக்கை  என்று யாராவது சொல்லுவார்களா ?

பணம் வேண்டும். ஆனால் அதே சிந்தனையாக இல்லாமல் வேலை செய். நாளடைவில், வேலை என்பது  வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும், அதுவே வாழ்க்கையாகி விடாது.

எப்போது வேலை, கடமை, கர்மம் என்பது  வாழ்வின் ஒரு பகுதி என்ற நிலை வந்து விட்டதோ, அப்போது மனம் அதை தாண்டி யோசிக்கத் தலைப்படும்....வேறு என்ன இருக்கிறது இந்த வாழ்வில் என்ற கேள்வி பிறக்கும்

ஒன்று எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள். சேர்ப்பது.

கர்ம யோகம் என்றால் கர்மத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

ஞான யோகம் என்றால் ஞானத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இனைந்து இருப்பவை. இணைந்து இருக்க வேண்டும்.

கர்ம யோகத்தை பற்றி மேலும் மிக விரிவாக கண்ணன் சொல்லுகிறான்.

கேட்போம்.



No comments:

Post a Comment