Tuesday, April 16, 2019

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு 



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

யம் = அது

இமம் = இந்த

புஷ்பிதாம் = மலர்ந்தது

வாசம் = உரை

ப்ரவத³ந் = சொல்கிறார்கள்

அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்

வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்

 பார்த² = பார்த்தா

ந = இல்லை

அந்ய = மற்றவை

அஸ்தி = இருக்கிறது

இதி  = எனவே

வாதி³ந: = சொல்பவர்கள்  ||2-42||


சிலர் வேதங்களின் வெளி உரைகளில் மகிழ்வார்கள். பூக்கள் போன்ற அலங்கார சொற்களில் அவர்கள் மயங்கி விடுகிறார்கள். தாங்கள் கொண்ட கொள்கையைத் தவிர மற்றவை எல்லாம் பிழை என்கிறார்கள். 

வேதம் பல அங்கங்களை கொண்டது. அதில் ஒரு அங்கம், யாகம், ஓமம் போன்றவை. இவற்றை செய்தால், இவை கிடைக்கும் என்று அவை சொல்கின்றன.

பிள்ளை இல்லையா, இந்த யாகம் செய்.

மழை வரவில்லையா, அதற்கு ஒரு யாகம்.

எதிரிகளை வெல்ல வேண்டுமா, உலகம் பூராவும் ஒரு குடைக் கீழ் வர வேண்டுமா - அஸ்வமேத யாகம்

என்று மளிகை கடை பட்டியல் போல, இதுக்கு இது என்று பெரிய பற்றிய பட்டியல் தருகிறது.

கீதை, வேதத்தின் அந்தப் பாகத்தை கண்டிக்கிறது. அதுவும் வன்மையாக கண்டிக்கிறது. "அலங்கார வார்த்தைகள்" என்று சாடுகிறது.

கர்மத்தை செய், பலனை எதிர் பார்க்காதே என்று கீதை ஒரு புறம் சொல்கிறது.

உனக்கு இந்த பலன் வேண்டுமா, இந்த கர்மத்தைச் செய் என்று வேதம் சொல்கிறது.

நாம் எதை கடைபிடிப்பது? நம்மவர்களை கேட்டால் "நாங்கள் வேதம் மற்றும் கீதையை கடை பிடிக்கிறோம்" என்பார்கள். பெரும்பாலும் இரண்டையுமே படிக்காதவர்களாக இருக்கும்.

அது மட்டும் அல்ல, "வேதத்தில் உள்ளது தான் சரி. மற்றவை எல்லாம் தவறு" என்று  சொல்வதையும் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு..தப்பாவா சொல்லி இருக்கப் போகிறார்கள்..பேசாமல் மண்டைய ஆட்டிவிட்டுப் போவோம்...என்றுதான் நினைக்கிறார்கள்.

கீதை, அப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அப்படி ஏற்றுக் கொள்பவர்களை "அறிவற்றவர்கள் " என்று வன்மையாக கண்டிக்கிறது.

சொல்வது கீதை.


https://bhagavatgita.blogspot.com/2019/04/242_16.html

Tuesday, April 9, 2019

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி 



व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||


வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக = ஒன்று, ஒருமித்த

இஹ = இங்கே, இந்த கர்ம யோகத்திலே

குருநந்த³ந = குரு நந்தன

ப³ஹுஸா²கா = பல கிளைகளை உடையது

ஹி = அதனால்

அநந்த = முடிவற்ற

ஸ்²ச = மேலும்

பு³த்³த⁴ய = அறிவு, புத்தி

அ வ்யவஸாயிநாம் = உறுதி இல்லாத

உறுதி உடையவர்களின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதோரின் புத்தி பல கிளைகளை உடையது. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 


கர்ம யோகத்தை சொல்லி வருகிறான் கண்ணன்.

மனம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஓடும் மனதை எப்படி நிலை நிறுத்துவது? மனச் சலனம் நிற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அது தெரிகிறது, ஆனால் மனதை எப்படி நிலைப் படுத்துவது?

வேலை - கர்மம் - ஒரு வழி.

செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றும். வேறு எங்கும் அலையாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மனதை  ஒருமுகப் பழக்கப் படுத்தி விடலாம்.

சும்மா உட்கார்ந்து கொண்டு, மனதை ஒருமுகப் படுத்துகிறேன் என்றால் அது அடங்காது.

அந்த வேலை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

சமையல் செய்வது, வீடு பெருக்குவது, வண்டி ஓட்டுவது, பூஜை செய்வது, படிப்பது, பாடுவது, உடற் பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

வேலை என்பது ஒரு சாக்கு. அதை வைத்துக் கொண்டு மனதை நிலைப் படுத்த பழக்கி விடலாம்.

கிளை கிளையாக பிரிந்து செல்லும் மனதை ஒருமுகப் படுத்த கர்மா அல்லது வேலை ஒரு வழி.

"மனதில் உறுதி வேண்டும்" என்றான் பாரதி.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்" என்பார் வள்ளலார்.


என்னை பொறுத்தவரை கர்ம யோகம் என்பது வேலை செய்வதைப் பற்றி அல்ல. கர்மத்தின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதுதான்.

மனதை ஒருநிலைப் படுத்தவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். வேலை ஒரு வழி.


சிற்றின்பத்தின் உச்சியில் மனமும் உடலும் ஒன்று பட்டுப் போகிறது. ஆனால் அது ஒரு சில வினாடிகளே நிலைக்கிறது. அதுதான் அதில் சிக்கல்.  அதை நீட்டிக்க முடிவதில்லை.

நீட்டிக்க முடிந்தால், அதுதான் பேரின்பம்.

முயன்று பாருங்கள். எந்த வேலை செய்தாலும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்,  மனதை அதில் இலயிக்க விடுங்கள்.

மெடிடேஷன் என்று சொல்லுகிறார்களே, அதுதான் அது.

தியானம்.  Meditation எல்லாம் இந்த இரகசியம் தான்.

கர்ம யோகத்தை இப்படியும் சிந்திக்கலாம். கர்மத்தின் மூலம் மனதை நிலை பெறச் செய்வது.

உங்களுக்கு இது சரி என்று படுகிறதா ?

https://bhagavatgita.blogspot.com/2019/04/242.html



Monday, February 11, 2019

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற 


व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||



வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக  = ஒன்று

இஹ = இங்கே

குருநந்த³ந  = குரு குல தோன்றலே

ப³ஹுஸா²கா² = பல கிளைகளை

ஹி = அதனால்

அநந்த = அநேக

சா = மேலும்

பு³த்³த⁴யோ = புத்தி

அவ்யவஸாயிநாம் = மன உறுதி இல்லாதவர்கள்


குரு குல தோன்றலே, உறுதியான புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவரின் புத்தி பல கிளைகளை கொண்டது 

கர்ம யோகம் பற்றி கூற ஆரம்பிக்கிறான் கண்ணன்.

முதல் பந்திலேயே சிக்ஸர் .

நாம் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். தொழிலில், விளையாட்டில், படிப்பில், பாட்டில், வேலையில் என்று எதிலும் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் உள்ள துறையில் நாமும் இறங்குகிறோம்.

நம்மால் அந்த அளவு வெற்றி பெற முடிவதில்லை. ஏன் ?

மன உறுதி கிடையாது.

படிக்க உட்காரும் போதே, இதை படிக்கவா, அதை படிக்கவா, இப்போது படிக்கவா, அப்புறம் படிக்கவா, இதை படித்து என்ன ஆகப் போகிறது, போன வருடம் இதில் கேள்வி கேட்டு விட்டார்கள், இந்த வருடம் இதில் வராது என்று ஆயிரம் சிந்தனை. இதற்கிடையில் , வாட்ஸாப்பில் பத்து செய்தி வரும். அவற்றிற்கு பதில் போட வேண்டும். நடுவில் கிரிக்கெட் ஸ்கோர் தெரிய வேண்டும். வீடியோ கேம் பாதியில் நிற்கும்....இப்படி மனம் ஆயிரம் வழிகளில் செல்லும். எப்படி படிப்பு மண்டையில் ஏறும்.

படிப்பு ஒரு உதாரணம்.

வேலையில் இப்படித்தான். ஒரு வேலையை எடுத்தால், நடுவில் நாலு போன் கால், பத்து மெயில், ஒரு வேலை பார்க்கும் போதே இன்னொன்றைப் பற்றிய எண்ணம்.

ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்கும் வரை வேறு எதையும் பற்றி சிந்திக்கக் கூடாது. அதை முடித்து விட்டு அடுத்த காரியம் பார்க்க போக வேண்டும்.

பத்து வேலையை ஒன்றாக செய்ய நினைக்கும் போது ஒரு பதட்டம் வரும். மனம் சிதறும். உடம்பு பதறும். செய்யும் வேலை கெட்டுப் போகும்.

நிறுத்தி நிதானமாக, எடுத்த வேலையை சரியாக செய்து முடித்தால்...மனதுக்கு ஒரு திருப்தி இருக்கும். நாம் செய்து முடித்தோம் என்ற சந்தோஷம் இருக்கும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கை மேலும் செயல் படத் தூண்டும். மேலும் வெற்றிகளை கொண்டு தரும்.

வெற்றியின் முதல் படி, மன உறுதி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின்

என்பார் வள்ளுவ பேராசான்.

திண்ணியர் என்றால் திண்மை உள்ளவர். மனதில் உறுதி உள்ளவர்.

"மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் "  என்பான் பாரதி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

என்பதும் வள்ளுவம்.

உலைவின்றி, மன சோர்வின்றி...மன உறுதியுடன் செயல்பட்டால் விதியையும் மாற்றலாம்  என்கிறார் வள்ளுவர்.

கோவிலுக்குப் போனால் வீட்டு ஞாபகம். வீட்டில் இருந்தால் அலுவலக ஞாபகம். அலுவலகத்தில் வீட்டு ஞாபகம். மனம் எதிலும் இலயிக்காமல் சிதறிக் கொண்டே இருக்கிறது.

ஓடும் மீன் ஓட , உறு மீன் வரும் அளவும் வாடி நிற்குமாம் கொக்கு

என்பது போல செய்யும் வேலையில் , கர்மத்தில் மன உறுதி வேண்டும்.

சிந்தித்து முடிவு எடுங்கள்.

முடிவு எடுத்த பின், உறுதியாக நடை போடுங்கள். ஒன்றை முடித்த பின் அடுத்ததை எடுங்கள்.

வெற்றி நிச்சயம்.

இது கீதை காட்டும் வழி.

https://bhagavatgita.blogspot.com/2019/02/241.html

Monday, January 28, 2019

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட 



नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥

நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||

ந = இல்லை

இஹ = இங்கு

அபி க்ரமநாஸோ  = அபி+கர்ம +நாச  = கர்மங்களில் இருந்து விடுபட

அஸ்தி = இருக்கிறது

ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,

ந= இல்லை

வித்³யதே|  = இருக்கிறது

ஸ்வல்பம் = கொஞ்சம்

அபி = இப்போது

அஸ்ய  = இதன் மூலம்

த⁴ர்மஸ்ய = தர்மத்தின் மூலம்

த்ராயதே  = காக்கிறது

மஹதோ  = பெரிய

பயாத்  = பயத்தில் இருந்து


இதில் கர்மத்தின் விளைவு மாறுவதில்லை. அது வேறு விதமாகவும் விளையாது. இதை கொஞ்சம் புரிந்து கொண்டாலும், பெரிய பயத்தில் இருந்து தப்பலாம். 

என்ன பெரிய பயம் நமக்கு? வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், வீடு, வாசல், பிள்ளை, குட்டி என்று இருக்கிறோம். என்ன பெரிய பயம் நமக்கு ?

நாம் வெளியே பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும், பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

வயதாகிறதே என்ற பயம். நோய் வருமோ என்ற பயம். கண் காண முடியாமல், காது கேட்க முடியாமல், எழுந்து நடமாட முடியாமல் போய் விடுமோ என்ற பயம்.

செல்வம் நம்மை விட்டு போய்விடுமோ என்ற பயம்.

பிள்ளைகளுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்.

எதிர் காலம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

அனைத்து பயங்களுக்கும் அடிப்படை, மரண பயம்.

ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், மரண பயமே அனைத்து பயங்களுக்கும் அடிப்படையான  பயம் என்று.

ஏன் மரண பயம் ?

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? சொர்க்கமா? நரகமா ? மறு பிறப்பா? எங்கு போய் எப்படி  பிறப்போமோ? இங்குள்ளவைகளை எல்லாம் விட்டு விட்டுப் போக வேண்டுமா ? கணவன், மனைவி, உற்றார், உறவினர், சொந்தம், பந்தம், சொத்து, சுகம், உறவு, பகை, ஞாபகங்கள், அனைத்தையும் விட்டு விட்டு போக முடியுமா ?

அந்த பயம் எப்படி எப்படியோ வெளிப் படுகிறது.

கர்ம யோகத்தை, சிறிதளவேனும் அறிந்து கொண்டால் கூட பெரிய பயத்தில் இருந்து  விடுப்படலாம் என்கிறான் கண்ணன்.

அறிந்து கொள்வோமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/240.html

Sunday, January 27, 2019

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி 



एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥

ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||


ஏஷா = இதை

தே = உனக்கு

அபிஹிதா = கூறினேன்

ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி

புத்தி = அறிவு

யோகே = யோகத்தில்

து = நீ

இமாம் = இந்த

ஸ்²ருணு| = கேட்பாய்

புத்த்யா = புத்தியுடன்

யுக்தோ = சேர்ந்து

யயா  = அதன்  மூலம்

பார்த = பார்த்தனே

 கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்

ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்


இதுவரை சாங்கிய முறைப்படி உனக்கு கூறினேன். இனி, யோக மார்கத்தை கூறுகிறேன். இதை அறிந்தால், உன் கர்ம வினைகள் உன்னை விட்டு விலகும்.

சாங்கிய முறை என்றால் என்ன ?

சாங்கிய முறை என்றால் என்ன என்று அறிந்து கொள்வவது ஒரு புறம் இருக்கட்டும்.  அதற்கு அப்புறம் வருவோம்.

நாம் உண்மையை எப்படி அறிந்து கொள்கிறோம்? அல்லது எப்படி அறிந்து கொள்ளலாம்?

உண்மையை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றிற்கு பிரமாணங்கள் என்று பெயர். சுருக்கமாக சொல்வது என்றால் வழிகள்.

முதலாவது, காட்சி பிராமணம். (பிரதிக்க்ஷம் அல்லது perception ).  நம் கண்ணால் கண்டு அறிவது. கண் என்றால் கண் மட்டும் அல்ல. நம் புலன்கள் மூலம் அறிவது.

ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் அது சூடாகி விடும்.  இந்த உண்மையை நாம் எப்படி அறிந்து கொண்டோம்? கண்ணால் பார்த்தால்  கொதிப்பது தெரியும். அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் கழித்து அதில் ஆவி அடங்கி விடும். இப்போது கண்ணால் பார்த்தால் சூடு தெரியாது. தொட்டுப் பார்த்தால் தெரியும்.   நாம் இன்னொரு உண்மையை அறிகிறோம். அடுப்பில் இருந்து இறக்கிய பின்னும் சிறிது நேரம் சூடு இருக்கும் என்று .

இப்படி, பல விஷயங்களை நாம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம்.  படிப்பு என்பது  நமக்கு நல்ல வாழ்வைத் தரும், பிள்ளைகள் நம்மை கடைசி காலத்தில் காப்பாற்றுவார்கள்.  அரசியல்வாதிகள் நல்லவர்கள்/கெட்டவர்கள், சிக்கனம் ஒரு நல்ல குணம் என்று பல விஷயங்களை நாம் அனுபவத்தில்  அறிந்து கொள்கிறோம்.

இது ஒரு ஒரு வழி.

அடுத்தது, அனுமானம். அனுமான பிரமாணம். நமக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டால்  நம் பழைய அனுபவங்களைக் கொண்டு நாம் சில உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.  உதாரணமாக, தூரத்தில் மலையில் புகை தெரிகிறது. அங்கே தீ இருக்கிறது என்று அனுமானத்தின் அறிகிறோம். நாம் நேரடியாக  பார்க்கவில்லை. வீட்டுக்கு வருகிறோம். மனைவி முகம் வாடி இருக்கிறது. அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அறிந்து கொள்ளலாம். இது அனுமானம்.

அனுபவங்களின் நீட்சி.

மூன்றாவது, ஆகம பிரமாணம் அல்லது சப்த பிரமாணம் என்று சொல்லுவார்கள். பெரியவர்கள், ஞானிகள், சான்றோர் சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது. நமக்கு நேரடி புலன் அறிவு இல்லை, அனுமானம் செய்யவும் முடியாது என்கிற போது நம்மை விட அறிவில் முதிர்ந்தவர்கள்  சொல்வதை ஏற்றுக் கொள்வது. "நேரா போகாதீங்க. அங்க சாலை சரியா இல்லை. இந்தப் பக்கமா சுத்திக் கொண்டு போங்கள் " என்று நாம் புதிதாக  ஒரு ஊருக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒருவர் வழியில் கூறுகிறார் என்று வைத்துக்  கொள்வோம்.  அது உண்மை என்றுதானே நாம் எடுத்துக் கொள்வோம். நேராக நாம் அந்த மோசமான சாலையை பார்க்கவில்லை. அனுமானம் செய்யவும் முடியாது என்கிறபோது அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது ஒரு வழியில் உண்மையை அறிய உதவும் ஒரு  சாதனம்.

இன்னும் பல வழிகள் உள்ளன.

ஆனால், சாங்கிய முறை இந்த மூன்றை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறது.

மேலும், சாங்கிய முறை கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்களுக்கு முக்குணங்கள்  உண்டு என்று சொல்கிறது (சாத்வீகம், ராஜஸம், தாமசம்).

இப்படி, மிக ஆழமாக, மனிதனின் மன நிலையை (psychology ), தர்க்கம் (logic ), தத்துவம்  (philosophy ), கடவுள், கர்மா, மறு பிறப்பு, பாவ புண்ணியம், உண்மையை அறியும்  வழிகள் என்று ஒரு பெரிய தத்துவத்தை முன்னிறுத்தியது  சாங்கியம்.

மிக மிக அறிவியல் பூர்வமானது. very scientific and logical.

சாங்கிய முறையை புரிந்து கொள்ள தீவிர முயற்சி வேண்டும். மிக ஆழமான சாஸ்திரம்.

எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நேரமும் இல்லை. அறிவும் கிடையாது. முயற்சியும் குறைவு.

எனவே, சாங்கிய வழியை பின் பற்ற முடியாதவர்கள் வேறு ஏதேதோ வழிகளை பின் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்து சமயம் ஒரு வழி முறை இல்லாமல், கரை இல்லாத ஆறு போல பிரிந்து கிடந்தது.

இங்குதான் கீதை வருகிறது.

கீதை வந்த சமயத்தில் நாட்டில் இருந்த அனைத்து வழிகளையும் கீதை ஒன்று சேர்த்தது.

சாங்கிய முறை, யோக முறை, அதில் பக்தி, கர்ம , ஞான யோகம் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்தது கீதை.

குழம்பிக் கிடந்த ஒரு பெரிய கும்பலை வழி நடத்தியது கீதை.

எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதுதான் வழி என்று சொல்லியது.

உதாரணமாக,  ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம், சீன மருத்துவம், தமிழ் மருத்துவம் , யுனானி என்று மருத்துவ முறைகள் பலவாக பிரிந்து கிடக்கிறது. மக்களுக்கு எது சரி , எது தவறு என்று புரியவில்லை. இவற்றை ஒன்று சேர்த்து இதுக்கு, இது சரி என்று கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா?

அந்த வேலையை செய்தது கீதை. யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு பெரிய வேலை என்று. அனைத்து தத்துவங்களையும் ஒரு புத்தகத்தில் அடக்குவது என்றால் எளிதா? கீதை அதைச் செய்தது. கீதையை படிக்கும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீதையில் பல மார்க்கங்களை பற்றி காண இருக்கிறோம். என்னடா இது கண்ணன் மாத்தி மாத்தி சொல்கிறானே என்று நினைக்கக் கூடாது. பல வழிகளின் சங்கமம் கீதை. இது ஒரு magnum opus of philosophy.

இது வரை சாங்கிய முறைப்படி சொன்னேன். இனி, யோக மார்கத்தைப் பற்றி கூறுகிறேன்  என்று கூறுகிறான் கண்ணன்.

என்னதான் சொல்லுகிறான் என்று கேட்போமே.

https://bhagavatgita.blogspot.com/2019/01/239.html



Thursday, January 10, 2019

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?



सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥

ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்

ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு

லாபா⁴லாபௌ⁴ = இலாபம் - அ இலாபம்

ஜயாஜயௌ| = ஜெயம் - அ ஜெயம்

ததோ = பின்

யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய

யுஜ்யஸ்வ = தயாராவாய்

ஏவம் = இவாறு

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

சுகம்  - துக்கம்
இலாபம் - நட்டம்
வெற்றி - தோல்வி

இவற்றை சரி சமமாகக் கருதி நீ காரியத்தில் ஈடுபட்டால், பாவத்தை அடைய மாட்டாய்.


இது என்ன சரியான போங்கா இருக்கே. இலாபம், நட்டம் , இன்பம், துன்பம் இது எல்லாவற்றையும் எப்படி சரி சமமாகப் பார்க்க முடியும் ? இன்பமும் துன்பமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.

இதெல்லாம் சும்மா வேலைக்கு ஆகாது, வெட்டி வேதாந்தம் என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசிப்போம்.

நம்மால் எவ்வளவோ சாதிக்க முடியும். இருந்தும் நாம் ஒன்றும் செய்வது இல்லை. அல்லது, நம்மால் செய்ய முடிந்தவற்றில் மிகச் சிறிய அளவே செய்கிறோம்.

உதாரணமாக...

உங்களால் ஒரு நல்ல புத்தகம் எழுத முடியுமா,  டாக்டர் பட்டம் வாங்க முடியுமா? ஒரு நல்ல காரியத்துக்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட முடியுமா, மாரத்தான் ஓட முடியுமா, புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியுமா ?

முடியும். அனைத்தும் முடியும். இருந்தும் நாம் செய்வது இல்லை.

ஏன்?

ஒரு வேளை புத்தகம் எழுதி, அது சரியாக வராவிட்டால், யாரும் வாங்காவிட்டால், நம்மைப் பார்த்து யாராவது எள்ளி நகையாடிவிட்டால், அவமானப் பட நேரிடும் என்று நினைத்து செய்யாமல் இருந்து விடுகிறோம்.

நம்மால எங்க டாக்டர் பட்டம் வாங்க முடியும் என்று என்று சோர்ந்து இருந்து விடுகிறோம்.

நம்மால் முடிந்த உயர்ந்த சிறந்த காரியங்களை செய்யாமல் இருக்கக் காரணம் தோல்வி பற்றிய பயம், அதனால் வரும் சங்கடங்கள்/வலிகள் / துன்பங்கள் பற்றிய சோர்வு, அதில் இருந்து வரும் இழப்புகள் இவற்றை எண்ணி  தள்ளிப் போட்டு விடுகிறோம் அல்லது செய்யாமலேயே இருந்து விடுகிறோம்.

இது ஒரு பக்கம் என்றால், செய்கின்ற காரியத்தை நாம் சிறப்பாக செய்வது இல்லை. காரணம், வெற்றி பற்றிய அதீத கற்பனை.

"என்ன செஞ்சு என்ன செய்ய...இந்த கம்பெனியில் ஒரு பதவி உயர்வு கிடையாது, சம்பள உயர்வு கிடையாது " என்று அங்கலாய்த்துக் கொண்டு சரியாய் வேலை செய்யாமல் விடுகிறோம்.

இப்படியாக வெற்றி, தோல்வி, இலாபம், நட்டம் , போன்றவை நம் முயற்சியை தடுத்து விடுகின்றன.

செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது, செய்யத் தயங்குகிறோம்.

வெற்றியோ தோல்வியோ,  நான் இதை முயன்று பார்ப்பேன், என் திறமை அனைத்தையும்  செலுத்தி வேலை செய்வேன். வருவது வரட்டும் என்று நினைத்து இறங்க வேண்டும்.

பலர் வருட ஆரம்பித்தில், "தினம் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வேன், 5 கிலோ எடையை குறைக்கப் போகிறேன் " என்று ஆரம்பிப்பார்கள்.  ஒரு மாதத்தில் எடை கொஞ்சமும் குறைத்திருக்காது. இது ஒண்ணும் சரி இல்லை என்று விட்டு  விடுவார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்று நல்ல காரியத்தை விட்டு விடுவது.

விடக் கூடாது. வெற்றியோ தோல்வியோ. தொடர்ந்து நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியவற்றை இலாப நட்டம் கருதி செய்யாமல் விடுவதுதான் பெரிய பாவம்.

Not realizing your potential is the biggest sin.

ஔவையார் இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள்

இயல்வது கரவேல் என்று. (அது பற்றி தனியாக ஒரு பிளாக் போடவும்..:))


இப்போது சொல்லுங்கள், இது வறட்டு , வெட்டி வேதாந்தமா அல்லது வாழ்க்கைக்கு  நல் வழி காட்டும் வேதாந்தமா என்று.

https://bhagavatgita.blogspot.com/2019/01/238.html

Monday, January 7, 2019

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில்

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில் 


हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||


ஹதோ = கொன்றால்

வா = மறுபக்கத்தில்

ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்

ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்

ஜித்வா = வென்ற பின்

வா = மறுபக்கம்

போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்

மஹீம் = இந்த உலகை

தஸ்மாது = எனவே

உத்திஷ்ட = எழுந்து நில்

கௌந்தேய = குந்தி புத்திரனே

யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்

க்ருதநிஸ்²சய: = துணிந்து,


இந்த யுத்தத்தில் இறந்தால் சுவர்க்கம் போவாய். வென்றால் இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். எனவே துணிந்து எழுந்து நின்று போர் செய்வாய். 


இந்த மாதிரி சில ஸ்லோகங்கள் இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு, கீதை வன்முறையை தூண்டுகிறது என்று விமரிசனம் செய்பவர்கள் உண்டு.

அர்ஜுனன், அன்பின் வயப்பட்டு, உறவினர்களை கொல்ல மாட்டேன்,  ஆசிரியரை கொல்ல மாட்டேன்  , எனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்கிறான்.

கண்ணன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? "அர்ஜுனா, நீ எவ்வளவு நல்லவன். யுத்தம் சரி இல்லை. அன்பான , அமைதியான வழியே சிறந்தது. சமாதானம் தான் நல்லது " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு...போர் செய், செத்தால் சுவர்க்கம், இல்லை என்றால் இந்த பூமி....என்று யுத்தம் வேண்டாம் என்று சொன்னவனை வலுக் கட்டாயமாக யுத்தத்தில் பிடித்து தள்ளுகிறான் கண்ணன்.

இது சரியா?

அமைதி வழியை விட்டு விட்டு, மக்களை கொன்று குவிக்கும் போர் செய்ய தூண்டும் கீதை ஒரு நல் வழி காட்டும் நூலா ?

இதற்கு உரை எழுதியவர்களும் கண்ணன் யுத்தம் செய்யத்தான் சொல்கிறான் என்று சொல்கிறார்கள்.

நான் அதை அப்படி பார்க்கவில்லை.

சற்று விரிவாக பார்ப்போம்.

ஒரு வேலையை செய்யும் போது அதில் வெற்றியும் வரலாம். தோல்வியும் வரலாம்.

தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. பெரிய வேலையை எடுத்தால், பெரிய வெற்றி வரலாம், அல்லது பெரிய தோல்வி வரலாம். தோல்விக்கு பயந்து நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

அதெல்லாம் என்னால் முடியாதுப்பா, நமக்கும் அதுக்கும் சம்பந்தம் கூட கிடையாது, எனக்கு அடைப்படையே தெரியாது..நான் எப்படி அதை செய்ய முடியும் என்று நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

மாறாக, துணிந்து ஒரு பெரிய வேலையை கையில் எடுத்து செய்ய ஆரம்பித்தால் , வெற்றி பெற்றால் நல்லது. அதில் தோல்வி அடைந்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சில உதாரணங்கள் பார்க்கலாம்.

இந்த வருடம் நான் 10 கிலோ எடை குறைக்கப் போகிறேன் என்று ஒரு பெரிய  குறிக்கோளை  கையில் எடுத்து அதற்க்காக வேலை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி என்று பல முயற்சிகள் செய்கிறேன். முடிவில் நான் 10 கிலோ எடையை குறைத்து விட்டேன் என்றால் மகிழ்ச்சி. ஒரு வேளை அதில் தோல்வி அடைந்து 8 கிலோ தான் குறைக்க முடிந்தால், அதுவும் நல்லது தானே. அது மட்டும் அல்ல இந்த உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி எல்லாம் என் உடலுக்கு பல நன்மைகளை தந்திருக்கும். என்னால் 10 கிலோ எடையை குறைக்க முடியாமல் போய் இருக்கலாம் (அது ஸ்வர்கம்). 8 கிலோ எடை குறைந்தது (இந்த உலகை ஆள்வாய்) நல்லது தானே.

ஒரு இளைஞன் வேலைக்குப் போய் கொண்டே மேலே படிக்க நினைக்கிறான். நேரம் இருக்காது. படிப்பது கடினமாக இருக்கும். ரொம்பவும் முயற்சி செய்கிறான். படித்து பட்டம் பெற்றால் நல்லது. ஒரு வேளை முடியவில்லை என்றால், படித்துப் பெற்ற அறிவு நல்லது தானே. ஸ்வர்கம் அல்லது இந்த உலகம் என்று கண்ணன் குறிப்பது நல்லது தான்.

வள்ளுவரும் இதையே கூறுகிறார்:

கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது

என்கிறார்.

குறிபார்த்து முயலை வேல் எறிந்து கொள்வதை விட யானையை எதிர்த்து போர் செய்து அதன் மேல் வேல் எறிந்து அது யானையை கொல்லாமல் போனாலும் பரவாயில்லை என்கிறார்.

யானை மேல் எறிந்த வேல் தப்பி இருக்கலாம். ஆனால், யானையோடு எப்படி போர் செய்வது, அந்த தைரியம், அந்த திட்ட மிடுதல், எல்லாம் அதில் கிடைத்த இலாபம் அல்லவா?

பெரிதாக நினையுங்கள். தோல்வியை பற்றி கவலைப் படாதீர்கள். பெரிய வேலையில் தோற்றாலும் அது கூட நல்லதுதான்.

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தால், வெள்ளியாவது கிடைக்கும். நல்லதுதானே.

என்னால் முடியாது, நான் தோற்று விடுவேன், எனக்கு திறமை இல்லை, அறிவு பத்தாது என்று நினைத்து  சோம்பி இருந்து விடாதீர்கள்.

பெரிதாக எதையாவது தொடங்குங்கள்.

வென்றாலும் தோற்றாலும் அது உங்களுக்கு நல்லதே.

என்ன செய்யப் போகிறீர்கள் ?

புது வீடு, புதிதாக எதையாவது அறிந்து கொள்வது, ஒரு கோடி பணம் சம்பாதிப்பது,  பத்து கிலோ எடை குறைப்பு ....என்று ஏதாவது தொடங்குங்கள்.

சரியா ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/237.html