கீதை - 13.8 - அறிபவனின் தன்மை - தொடர்ச்சி
इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥
இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச |
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||
இந்த்ரியார்தேஷு = புலன் இன்பங்களில்
வைராக்யம் = விருப்பம் இன்மை
அநஹங்கார = அஹங்காரம் இன்றி
ஏவ ச = மேலும் உறுதியாக
ஜந்ம = பிறப்பு
ம்ருத்யு = இறப்பு
ஜராவ்யாதி⁴ = நரை, மூப்பு
துக தோ ஷா = துக்கம் தோஷம்
நுதர்ஸநம் = இவற்றைப் பற்றிய தெளிந்த பார்வை , அல்லது இணைந்த பார்வை
புலன் இன்பங்களில் விருப்பம் இல்லாமை , ஆணவம் இல்லாமல், , பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றைப் பற்றிய இணைந்த பார்வை
வைராக்கியம் (புலன் இன்பங்களில் விருப்பம் இன்மை)....புலன் தரும் இன்பங்களில் விருப்பம் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்குமா ? இன்பமில்லாத வாழ்வில் என்ன சுகம் இருக்கும். கல்லும், மரக் கட்டையும் போல வாழ வேண்டுமா ? இது தான் கீதை காட்டும் வாழ்வா ?
இல்லை.
புலன் தரும் இன்பங்களை அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. அதை சார்ந்து இருக்காதே என்கிறது. அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்று சோர்ந்து போய் விடாதே. அது தான் வேண்டும் என்று தவிக்காதே. அது வேண்டும் என்று அதை துரத்திக் கொண்டு போகாதே. அதே எண்ணமாக இருக்காதே என்று சொல்கிறது.
இரண்டாவது, அஹங்காரம் இன்றி. நான் / எனது என்ற எண்ணம் எப்படி வருகிறது ? நமக்கு மற்றவற்றின் தொடர்பால் இந்த எண்ணம் வருகிறது. என் வீடு, என் மனைவி, என் சொத்து, நான் கட்டியே வீடு, நான் உருவாக்கிய நிறுவனம் என்று மற்றவற்றின் தொடர்பால் நான் / எனது என்ற எண்ணம் உருவாகிறது.
புலன் தரும் இன்பங்களை விடும் போது , அந்த இன்பங்களைத் தரும் பொருள் மற்றும் மனிதர்கள் மேல் உள்ள பற்றும் விடும்.
இருக்கும் போது , கிடைக்கும் போது இன்பம். இல்லை என்றால் துக்கம் இல்லை. ஐயோ, அது இல்லையே, என் கையை விட்டு போய் விட்டதே என்ற கவலை இல்லை.
பிறப்பு, இறப்பு, நரை, மூப்பு இதைப் பற்றிய இணைந்த எண்ணம். பிறப்பும், இறப்பும், மூப்பும், நரையும்,துன்பம் தருவன. நாம் இவை துன்பம் என்றே அறிவது இல்லை. நரை வந்தால் அதை சாயம் போட்டு மறைத்து விடுகிறோம். அப்படி செய்தால் ஏதோ வயது குறைந்து விட்டதைப் போல ஒரு எண்ணம். மூப்பை தள்ளி வைத்து விட்டதை போன்ற எண்ணம்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மரணம் உண்டு என்று அறிந்தாலும், அது இப்போது நிகழாது என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நினைத்தால் இத்தனை சண்டை, சச்சரவு, கோபம், தாபம், ஆணவம் இவை வருமா ? ஒவ்வொரு நாளும் மிக மிக இனிமையாகக் கழியும். இருக்கும் கொஞ்ச நாளை சந்தோஷமாக கழிக்க வேண்டுமா , துக்கத்திலும் பயத்திலும் கழிக்க வேண்டுமா ?
பிறப்பு, மூப்பு, மரணம் இவற்றைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனை நம்மிடம் கிடையாது.
மூப்பை வெறுக்கிறோம்.
மரணம் பற்றி சிந்திப்பதை தவிர்க்கிறோம்.
இவை ஒரு நல்ல கண்ணோட்டம் இல்லை.
இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.
மரணம் இல்லை என்றால் வாழ்கையும் இல்லை.
இது முடியக் கூடியது என்று நினைத்தால் வாழ்க்கையின் மேல் தீராக் காதல் பிறக்கும். நாளை நாளை என்று வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே போக மாட்டோம்.
இன்றிலிருந்து வாழத் தொடங்குவோம்.
அறிபவனுக்கு இந்த சிந்தனைத் தெளிவு வண்டும்.
சிந்தியுங்கள். உங்கள் வாழ்வும் இனிமையாக மாறும்.
கீதை படிப்பதில் உள்ள நனமைகளில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment