கீதை - 13.6 - எதெல்லாம் அறியப்படுவது ?
इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥
இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: |
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||
இச்சா = ஆசை, வேட்கை
த்வேஷ: = பகைமை
ஸுகம் = சுகம்
து:கம் = துக்கம்
ஸங்காத = உடல்
ஸ்சேதநா = நினைவு (Consciousness )
த்⁴ருதி: = மன உறுதி
ஏதத் = இவை
க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்
ஸமாஸேந = சுருக்கமாக
ஸ விகார = மாற்றம் அடையக் கூடிய
உதா ஹ்ருதம் = கூறினேன்
ஆசை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உள்ளத்துறுதி, மற்றும் இவற்றின் வேறுபாடுகள் அனைத்தும் சேர்த்ததுதான் க்ஷேத்ரம் என்பதை உனக்கு சுருக்கமாக கூறினேன்.
முந்தைய ஸ்லோகத்தில் புலன்கள், மனம், அவைகளின் செயல் இவை க்ஷேத்ரம் என்று பார்த்தோம்.
அவை மட்டும் அல்ல, மேலே சொல்லப் பட்ட ஆசை, பகை, இன்பம், துன்பம், உடல், உள்ளத்து உறுதி, இவையும் க்ஷேத்ரம் ஆகும்.
அது எப்படி நம் மனதுக்குள் இருக்கும் ஆசை, பகை, இன்பம், துன்பம் எல்லாம் க்ஷேத்ரம் ஆகும் ? க்ஷேத்ரம் என்றால் அறியப் படும் பொருள் என்று தானே பார்த்தோம்.
அறியப் படுவது (க்ஷேத்ரம்), அறிபவன் (க்ஷேத்ரஞன்) என்று தானே பார்த்தோம். அப்படி என்றால் ஆசை,பகை, இன்பம் , துன்பம் எல்லாம் அறிபவனில் அல்லவா சேர வேண்டும். அது எப்படி அறியப் படுவதில் சேர்க்கலாம் ?
இங்க நாம் சற்று நிதானமாக ஆழமாக யோசிக்க வேண்டும்.
இந்த உலகை இரண்டாகப் பிரிப்போம்.
அறியப்படுவது, அறிவது என்ற இரண்டு கூறுகளாகப் பிரிப்போம்.
அறியப்படுவதில் (objects ) வெளியில் உள்ள பொருள்கள், மனிதர்கள், விலங்குகள், தட்பவெப்ப நிலை போன்றவை எளிதாய் அடங்கும்.
சிக்கல் எங்கு வருகிறது என்றால் நம்மில் இருக்கும் சில விஷயங்கள் அறியப்படுவதா ? அறிவதா என்று அறிந்து கொள்வதில் தான்.
நம் ஆசை, பகை, இன்பம், துன்பம் இவற்றை நம்மால் அறிய முடியுமா ? முடியும்தானே ? எதன் மேல் ஆசை, எது நமக்கு துன்பம் தருகிறது, எது நமக்கு இன்பம் தருகிறது, யார் நமக்கு பகை, எது நமக்கு பகை என்று நம்மால் சொல்ல முடியும்தானே ?
அப்படி என்றால் அவை நம்மால் அறியப்படும் பொருள் தானே ?
இவை நான் அல்ல. இவை என்னால் அறியப்படும் பொருள்தான்.
நாம் ஆசைப் படும் பொருளும், நம் ஆசையும் இரண்டுமே நான் அல்ல. இவை இரண்டுமே எனக்கு வெளியே உள்ள அறியப்படும் பொருள்கள்தான் (க்ஷேத்ரம்)
ஒரு பெண்ணின் மேல் ஆசை என்றால், அந்த பெண் வேறு, அவள் மேல் கொண்ட காதல் வேறு என்று நாம் நினைக்கிறோம்.
அப்படி அல்ல என்கிறது கீதை.
அந்தப் பெண்ணும், அவள் மேல் கொண்ட காதலும் எனக்கு வெளியில் உள்ள இரண்டு பொருள்கள். Two Objects .
நான் இரண்டையும் ஆராய முடியும்.
யார் அந்தப் பெண், அவளின் உயரம், நிறம், குரல் இனிமை, குணம் இவற்றை நான் அறிந்து கொள்ள முடியும்.
அதே போல், ஏன் நான் அவள் மேல் ஆசை கொள்கிறேன், என் ஆசைக்கு காரணம் என்ன என்றும் நான் ஆராய முடியும்.
சிக்கல் என்ன என்றால் நாம் இரண்டாவதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
நான் கொண்ட ஆசை நான் அல்ல. அது எனக்கு உள்ளே உள்ளதல்ல. அதையும் ஒரு வெளியே உள்ள பொருள் போல என்னால் ஆராய முடியும். ஆராய வேண்டும்.
அப்படிப் பார்த்தால் ஆசை, கோபம், காமம், பயம், வெட்கம் என்று நான் சார்ந்த அனைத்தயும் வெளியே கொண்டுவந்து போட்டு ஆராய்ச்சி செய்யலாம்.
இவற்றை எல்லாம் எடுத்து வெளியில் போட்டுவிட்டால் பின் அறியும் நான் யார் ? க்ஷேத்ரஞன் என்றால் யார் பின் ? அவனுடைய குணாதிசயம் என்ன ?
கண்ணன் அதை அடுத்து வரும் சுலோகங்களில் சொல்கிறான்.
சிந்திப்போம்.
No comments:
Post a Comment